
ஹிந்து பத்திரிகையில் ராஜபக்சேவின் நேர்காணல் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இங்கு கேள்வி கேட்பவர், ஹிந்துராம். ஜூலை 7ம் தேதி வெளியான பேட்டியில் கேள்வி கேட்க வேண்டிய ஹிந்துராம், ‘‘so you say they (LTTE) were most ruthless most powerful terriorist organisation in the world’’ என்று எடுத்துக் கொடுக்கிறார்.
அதற்கு அதிபர் ராஜபக்சே, ‘‘yes, the most ruthless and richest terrorist organisation in the world. And well equipped, well trained’’என்று சொல்லியிருக்கிறார்.
ஆக, ராஜபக்சே தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி சொல்லாமல் விட்ட ஒரு விமர்சனத்தை எடுத்துக் கொடுத்து அவர் வாயால் சொல்ல வைத்துப் பதிவு செய்திருக்கிறார்.
இதற்குப் பெயர் தான் ஜெர்னலிசமா? பத்திரிகை தர்மமா? நக்கீரனையும் மற்ற சில பத்திரிகைகளையும் சோ போன்றவர்கள் பொய்யை எழுதுகிறார்கள் என்று சொல்லும் போது இப்படி பேட்டி யெடுக்கும் ஒரு நபரே ஒரு கருத்தைச் சொல்லி அதை பேட்டி கொடுப்பவரின் வாயால் வரவழைப்பது மட்டும் ஒரு சார்பு நிலை இல்லையா? ஜூனியர் விகடனில் ஹிந்து ராம் அவர்களின் பேட்டி இன்று வந்திருக்கிறது.
அவர் இலங்கை ராணுவத்திற்காக கொடி பிடிப்பது ஏன் என்று, நாம் யோசித்து நம் நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. ஆனால், அவரது பேட்டியில் உள்ள சில அபத்தங்களை தோலுரித்துக் காட்டுவது வலைப்பதிவு விதிகளின் படி அதி முக்கியமானதாக இருக்கிறது.
அபத்தம் ஒன்று,
பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? என்று ஜூவி நிருபரின் கேள்விக்கு, ஹிந்து ராம், ‘‘மே 19ம் தேதி பிரபாகரன் உடம்பை ராணுவத்தினர் கண்டெடுத்திருக்கிறார்கள்...’’ என்று பதிலளித் திருக்கிறார். அடுத்ததாக நிருபர் கேட்ட கேள்வி, ‘‘அப்படியானால் இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசும்போது, பிரபாகரன் இறந்த சேதியை ஏன் அவர் தன் வாயால் அறிவிக்கவில்லை’’ என்று கேட்கிறார்.
அதற்கு பதிலளித்துள்ள ராம், ‘‘அவர் நாடாளு மன்றத்தில் பேசியதற்குப் பிறகுதான் பிரபாகரனின் உடலை ராணுவத்தினர் கண்டெடுத்திருக்கின்றனர்’’ என்று கூறியிருக்கிறார். அதுதான் மகா அபத்தமாக உள்ளது. அதாவது, பிரபாகரன் என்று ஒரு சடலம் காட்டப்பட்டது, மே 19ம் தேதி என்பது சரியான தகவல்தான்.
ஆனால் அதற்கு இரண்டு நாள்களுக்குப் பின்தான் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றினார், ராஜபக்சே.
நாடாளுமன்றத்தில் ராஜபக்சே உரையாற்றும்போது பிரபாகரனை ராணுவம் கொன்றுவிட்டதாக சொல்லப்படுவது குறித்து ஏதாவது பேசுகிறாரா என்று, உலகம் முழுவதும¢ லட்சக்கணக்கான தமிழர்கள் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படியான நிலையில்தான் அவர் பேசவில்லை. நாடாளுமன்ற உரையில் பிரபாகரன் பற்றி ராஜபக்சே ஏன் விளக்கம் அளிக்கவில்லை என்று குமுதம் ரிப்போர்ட்டரில் பா.ராகவன் ஏற்கெனவே எழுதிவிட்டார்.
ஒரே குட்டையில் ஊறிய ராமும் ராகவனும் இப்படி மாறி மாறி கருத்து சொல்வது சரியா? உங்களுக்கு எதைப் பங்கு போடுவதில் சிக்கல்?உண்மைக்குப் புறம்பாக ஹிந்து ராம் மே 19ம¢ தேதிக்கு முன்னதாகவே ராஜபக்சே நாடாளு மன்றத்தில் உரையாற்றியது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். இந்தியத் தேர்தல் முடிவு வெளியானது 16ம் தேதி. நடேசன் இறந்து விட்டதாக தகவல் வெளியானது 17ம் தேதி.
சார்லஸ் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது, 18ம் தேதி. பிரபாகரன் இறந்துவிட்டதாக வெளியானது, 19ம் தேதி. அதன்பின் போர் முடிந்தது என்றுதான் நாடாளுமன்றம் கூடியது. இதுகூடவா தெரியவில்லை அந்த ராமுவுக்கு.
இரண்டாவது அபத்தம்.
‘‘பிரபாகரனின் மறைவுக்குப் பின்னால் அங்கிருக்கும் தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள இலங்கைக்குச் சென்றேன்‘‘ என்கிறார், அந்தப் பேட்டியில் ராம்.
ஆனால் மற்றொரு கேள்விக்கு, ‘‘முகாமில் இருக்கும் ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் அவர்களிடம் (தமிழ்மக்களிடம்) பேசினால் இரண்டு பேருக்குமே தர்ம சங்கடங்கள் ஏற்படலாம். அதனால் அங்கிருக்கும் மக்களிடம் நான் பெரிய அளவில் பேச முடியவில்லை’’ என்கிறார்.
இதில் என்ன அபத்தம் என்கிறீர்களா? இருக்கிறது. மக்களின் நிலை குறித்து அறியச் சென்றவர், அந்த மக்களிடம் பேசாமல் (அதுவும் ராணுவத்தினருக்கு தர்மசங்கடங்கள் ஏற்படும் என்பதற்காக பேசாமல்) திரும்பியிருக்கிறார். ஹிந்து பத்திரிகையில் இருந்து தலைவரைப் பேட்டி எடுக்கச் செல்லும் ஒரு நிருபர் அந்தத் தலைவருக்கு தர்மசங்கடங்கள் ஏற்படும் என்று முக்கியமான கேள்விகளைக் கேட்காமல் வருவாரா? வந்தால் அதை ஹிந்து ராம் வரவேற்பாரா?ஹிந்துவை தூக்கிப் பிடிப்பவர் நீங்கள் என்றால் அந்த நிலைப்பாட்டை தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்கள்.