Sunday, April 18, 2010

பிரபாகரனுக்கு மனம் திறந்த மடல்...


தமிழீழத்தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு,

நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா, இல்லையா என்று எனக்குத் தெரியாது.

இந்த நேரத்தில் அவசரமாக உங்களுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டிய சூழல் வந்துவிட்டதற்காக வருந்துகிறேன். உங்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவா எனக்குள் ஏற்பட்ட போது நீங்கள் போர்க்களத்தில் போரிட்டுக் கொண்டிருந்தீர்கள்.அதற்குப் பிறகு இப்போதுதான் உங்களுடன் பேசவேண்டிய அவசர அவசியம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 16-ம் தேதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட உங்கள் தாயார் உரிய அனுமதியின் பேரில், மருத்துவச் சிகிச்சைக்காக சென்னைக்கு விமானம் ஏற்றப்பட்டார். ஆனால், விமானத்திலிருந்து அவரை தரையிறங்கவிடாமல் அதே விமானத்தில் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். இதில்,கொதித்துப் போன தாயத்தமிழகத்தில் உள்ள உங்கள் நண்பர்கள் விடுத்த பேட்டிகள், அறிக்கைகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.


# “பார்வதியம்மாள் மருத்துவச் சிகிச்சைக்காக சென்னை வந்தே எனக்குத் தெரியாது.
மறுநாள் பத்திரிகை படித்துத்தான் இதை நான் தெரிந்துகொண்டேன். இப்போதும் ஒன்றும் மோசமில்லை. அவர் தரப்பில் என்னிடம் பேசினால் மத்தியஅரசிடம் பேசி அவருக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன்.“

-பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் தமிழினத் தலைவர் முதல்வர் கருணாநிதி கொடுத்த விளக்கம். (அடத்தூ...)

# “பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்குக் காரணமே ஜெயலலிதானதான். 2003-ல்
பிரபாகரன் குடும்பத்தார் இந்தியாவுக்கு வரஅனுமதிக்கப்படக்கூடாது என்று ஜெயலலிதா எழுதிய விண்ணப்பக்கடிதத்தின் அடிப்படையிலேயே இப்போது பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்.”

-இது எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவனின் விளக்கம்.

# “மத்திய அரசுக்கு விசுவாசமாக இருக்கும் அதிகாரிகளே பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.”

- இது திராவிட கழகத்தலைவர் வீரமணி அறிக்கை.

# “பார்வதியம்மாள் அனுப்பப்பட்டதற்கு தமிழக முதல்வர் கலைஞர் காரணமே இல்ல. மத்திய அரசுதான் காரணம்.”

-இது பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை.

# “எல்லாத்துக்கும் காரணம் கருணாநிதிதான் என்று குற்றம் சாட்டுகிறேன்.”

-ம.தி.மு.க. வைகோ மற்றும் (தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்) பழ.நெடுமாறன்...


பிரபாகரன் அவர்களே உங்கள் தாயாருக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பதில் எத்தனை அரசியல் பாருங்கள். உணர்வாளர்களுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக அவரை வரவேற்கச் சென்ற உங்கள் நீண்ட நாளைய நண்பர் நெடுமாறன் அன்ட் கோவினர் உங்கள் தாயாரைத் திருப்பி அனுப்பிய சோனியா அரசை குறை சொல்லத் தயாராக இல்லை. காரணம் ஜெ., காங்கிரஸ் கூட்டணிக்குக் காத்திருக்கிறார். ஜெவுக்கு சமூக நீதித்தாய் என்று பட்டம் கொடுத்த நெடுமாறன், அதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.


இந்திய அரசு விசா கொடுக்கிறது. ஆனால் உள்ளே நுழைய அனுமதி மறுக்கிறது. தமிழகத்தில் நடந்த இந்த மனிதநேயமற்ற செயலுக்கு கருணாநிதியின் மேல் அவதூறு வந்துவிடக்கூடாது என்று உங்கள் நண்பர்கள் திருமா, ராமதாஸ், வீரமணி போன்றோர் குதிக்கிறார்கள்.

இவர்களில் பலரும் நீங்கள் விசிறிய எச்சில் சோற்றைத் தின்றவர்கள் என்று எனக்குத் தெரியும். அதுவும் கொஞ்சம் நஞ்மல்ல கோடிக் கோடியாய் நீங்களும் புலம்பெயர் தமிழர்களும் அவர்களுக்குக் கொட்டிக் கொடுத்தார்கள். இன்றைக்கு சொந்த அரசியல் லாபத்திற்காக உங்கள் தாயாருக்கே தயவு காட்டத் தயங்கிறார்கள். ஆயுதம் தாங்கிய நீங்கள் ஓட்டுப் பொறுக்கிகளை நம்பியதன் விளைவைப் பார்த்தீர்களா?

இப்படிக்கு

உங்களைப் போல் தமிழனின் இழிநிலையைப் பார்க்கப்
பொறுக்க முடியாமல் ஆயுதம் (பேனா) தாங்கிய
பத்திரிகையாளன்....

Tuesday, April 13, 2010

கடலோரக் காவல் வடை! -தாமரை



என்னருமை தோழர் கவிஞர் தாமரை எழுதிய
கவிதை இது....

வாரயிருமுறை வரும் இதழ் ஒன்றில் வெளியான
இவரது இந்தக் கவிதையை பலநாட்களாக வலைப்பதிவிட
நினைத்து முடியாமல் போனது...

இன்றைக்குத்தான் சாத்தியமானது...

இந்த நையாண்டிக் கவிதையில்
கவிஞரின் ஆவேசம் அடங்காமல் அதிர்கிறது...


இனி கவிதை வாசியுங்கள்...


‘தம் எல்லைகளையும், தம் மக்களையும்
காத்தலே முதல் கடமை‘ என்ற வரி
கடலோரக் காவல் படையின்
பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை
அல்லது
அது வகுப்பில் சொல்லப்பட்ட போது
க.கா.வீரர்கள் கேன்ட்டீனில்
வடை தின்று கொண்டிருந்திருக்க வேண்டும்...

மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து
வாங்கிய பிரமாண்டக் கப்பல்களில்
உல்லாசப் பயணம் போகிறார்கள்

தேன்நிலவு கொண்டாடுகிறார்கள்
ஒழிந்த நேரங்களில்
தரையோரக் காவல் படையினருக்கு
விருந்து கொடுக்கிறார்கள்...
வடையே முதன்மை பண்டம்!

சிங்களப் படை வந்து தமிழ் மீனவனை
கொத்தாக அள்ளித் தூக்கும்போது
க.கா.வீரர்கள் தங்கள் கப்பல் படையில்
வடைக்கு மாவுத் தட்டிக் கொண்டிருக்கும்படி
பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள்...

முகமெல்லாம் மாவு...
பாவம் தும்மலுக்கு நடுவே
நல்ல வடைக்கு சாத்தியம் நலிவு!

எண்ணெய் குடிக்காத வடையைத் தட்ட
அவர்கள் போராடும் போது
வகையாக வந்து சிக்குகிறான் தமிழ் மீனவன்!
படகு நிறைய அவன் மீன் அள்ளிப்போவதை
எப்படிப் பொறுப்பது?

வலைகளை அறுத்துத் தள்ளுகிறார்கள்
(ஒருவேளை அதில்தான் எண்ணெய் வடிக்கிறார்களே
என்னவோ...!)
மீனவர்களை நிர்வாணப்படுத்துகிறார்கள்
(ஒருவேளை அவர்கள் லுங்கிகள் மாவு
உலர்த்தத்தேவையோ...?)

கண்மூடித்தனமாகத் தாக்குகிறார்கள்
(வடையை சரியாகத்
தட்ட முடியாத வயிற்றெரிச்சல்?)

உச்சகட்டமும் ஒன்றிருக்கிறது...

பொறுக்கிகள் சுடும் வடையும்
பொறுப்பற்றதாகத்தான் இருக்கிறது...

அப்பாவிகள் மீது விழுந்து வெடிக்கிறது...
எண்ணெய் குடிக்காத வடை ரத்தம் குடிக்கிறது!

வகைவகையான வடைகளை கப்பலில்
பார்வைக்கு வைக்கின்றனர்...
அட்மிரல்களும் தளபதிகளும்
உளவுத்துறைகளும் பார்வையிடுகின்றன...

சிறந்த வடை சுட்டவனைத் தேர்ந்தெடுத்து
(கடாய்) பரிசளிக்கின்றனர்...
சிறந்த இந்திய வடை சுட்டவனை அதிசயித்து
சிங்கள மீனவர்கள் படையெடுத்து வந்து
பணயக் கைதியாகக் கொண்டு போகிறார்கள்..

வடை சுடுவதன் தொழில்நுட்ப ரகசியத்தை
அவன் சொல்லும் வரை
‘தட்டி‘ எடுக்கிறார்கள்...

என்னவோ போங்கள்...

வடை சுடவும் வக்கற்ற எனக்கு
வயிற்றெரிச்சலாக இருக்கிறது...

யாரப்பா அங்கே...
கடலோரக் காவல் கடை...?
எனக்கு ரெண்டு வடை .... பார்சல்...!

Monday, April 12, 2010

தண்டகாரண்யம்: இந்திய தேசியம் பேசினால் செருப்பால் அடிப்பேன்டா...,




உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அளப்பறிய சேவைகளை செய்து வருகிறார். அதுவும் தண்டகாரண்யத்தில் அவர் ஆற்றி வரும் சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது. அதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா, போன்றவர்கள் துணையாக நிற்கிறார். மீடியாகளும் ப.சி.க்கு பக்கபலமாக இருந்து வருகிறது.

எதற்கு இந்தப் பாராட்டு என்கிறீர்களா?

மேலே படியுங்கள்...

இந்தியாவின் மையப்பகுதியில் இருக்கும் தண்டகாரண்யம் என்கிற அடர்ந்த வனப்பகுதி ஆந்திரம்,​​ மகாராஷ்டிரம்,​​ சத்தீஸ்கர்,​​ மத்தியப் பிரதேசம்,​​ ஜார்க்கண்ட் மற்றும் ஒரிசா ஆகிய ஆறு மாநிலங்களின் எல்லைகளை உள்ளடக்கியது.​ இதன் மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 40,000 சதுர கிலோ மீட்டர். ​ இந்த வனப்பகுதியில் வாழும் ஆதிவாசிகள் எதற்காகவும் வெளியுலகையோ அரசையோ சார்ந்து வாழ வேண்டிய அவசியமில்லாதவர்கள்.​ இவர்களுக்கு ரேஷன் தேவையில்லை.​ மின்சாரம்,​​ குடிநீர் வசதி,​​ சாலைகள்,​​ பள்ளிக்கூடங்கள்,​​ மருத்துவமனைகள் எதுவுமே வேண்டாம்.​ இயற்கையோடு ஒட்டி வாழும் பழங்குடி மக்கள்.


உலகமயமாக்கல் கொள்கையால் பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை அங்கே குவிந்து கிடக்கும் கனிம வளத்தின் மீது விழுந்தது. அதை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்தால் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கலாம் என பன்னாட்டு நிறுவனங்கள் கணக்குப் போட்டன.

ஓட்டுப் பொறுக்கிகள் அந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் வருகையையும் அவர்களது வளர்ச்சியையும் ஆதரித்து பழங்குடி மக்களை விரட்டி அடிக்கத் தீர்மானித்தனர். தங்களது வாழ்வாதாரம் பறிபோனால் நகரத் தெருக்களில் பிளாட்பாரங்களில் அல்லாட வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அவர்களை வெளியேற்றி கனிம வளங்களைச் சுரண்டி ஏற்றுமதி செய்வதிலிருந்து பின்வாங்க பன்னாட்டு நிறுவனங்களும் தயாராக இல்லை.​ ​இங்கே தான் ஏற்கெனவே தங்களின் அடிப்படை வசதிகளுக்காக போராடிக் கொண்டிருந்த ஆயுதக் குழுக்களின் உதவியை நாடினர், பழங்குடி மக்கள்.


தண்டகாரண்யப் பகுதிகளிலிருந்து கனிம வளங்களை வெட்டி எடுக்கும் முடிவை கைவிட்டால்தான் அந்த மக்களும் அந்த மக்களுக்காக களம் காணும் மாவோயிஸ்ட்களும் ஆயுதங்களை கீழே போடுவார்கள். ஆனால் அந்தக் கனிம நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் ப.சிதம்பரம் (அந்த நிறுவனங்களின் சட்ட ஆலோசகர் நளினி சிதம்பரம்) ​​ விமானத் தாக்குதல் மூலம் மாவோயிஸ்டுகளை அழிக்கும் சாக்கில் ஆதிவாசிகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். இது காடுகளை அழித்து பன்னாட்டு கனிம நிறுவனங்களுக்கு தாரை வார்த்துவிட்டு இயற்கையோடு இணைந்து வாழும் பழங்குடி மக்களை நகரங்களில் பிச்சை எடுக்க வைப்பதுதான் ப.சிதம்பரத்தின் லட்சியம். இதை மன்மோகன் சிங் வேடிக்கை பார்க்கிறார். சோனியா காந்தி வேடிக்கை பார்க்கிறார். விளிம்பு நிலை மனிதர்களுக்காகப் போராடும் கனிமொழி, திருமா போன்றவர்களும் வேடிக்கைப் பார்க்கிறார்கள். இதைத் தட்டிக் கேட்க வக்கில்லாத மீடியாகள் இதைவிட கூட்டிக் கொடுக்கும் வேலையை செய்யலாம். (அதைத்தானே இப்போதும் செய்து வருகிறது)

எங்கோ காட்டில் நிம்மதியாக வாழும் அந்த மண்ணின் மைந்தர்களை அழிக்கும் உங்கள் இந்திய தேசியம் வாழ்க... இதற்கு மேலும் எவனாவது தேசப்பற்று பத்தி பேசினால் செருப்பால அடிப்பேன்.... ப.சி.யை செருப்பால் அடித்து புண்ணியம் கட்டிக் கொண்ட சீக்கிய பத்திரிகையாளனுக்கு என் வீரவணக்கங்கள்...

Tuesday, April 6, 2010

சென்னைப் பல்கலைக் கழக துணை வேந்தர் திருவாசகத்துக்கு செருப்படி!


திண்ணைப் பள்ளிகளாகும் பல்கலைக்கழகங்கள்!

பழ.​ கருப்பையா (தினமணி கட்டுரை)


ஒரு காலத்தில் ஒரே ஒரு பல்கலைக்கழகம்தான் தமிழனுக்கு உயர்கல்வி வழங்கும் பல்கலைக்கழகமாக இருந்தது.​ கங்காரு தன்னுடைய குட்டியைத் தன் உடற்பையில் பொத்தி வைத்துப் பாதுகாப்பதுபோல் ஏ.எல்.​ முதலியார் போன்றவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தைத் தங்களின் நெஞ்சோடு சேர்த்துப் பொத்தி வைத்துக் காத்தார்கள்.
நீதியும் நிர்வாகமும் அரசியல் சாசனப்படி பிரிக்கப்பட்டிருந்தன.​ அவைபோல் இல்லையென்றாலும் கல்வி அரசியலிலிருந்து தனித்தொதுங்கி,​​ அறிவை நோக்கமாகக் கொண்டு தன்போக்கில் வளர அன்றைய பெருந்தன்மையான அரசியல் இடமளித்தது.
இடைநிலைப் பள்ளி ஆசிரியரிலிருந்து துணைவேந்தர் வரை "தட்சிணை' வைக்காமல் இன்றைய அரசு அமைப்பில் எதுவும் நடக்காது என்பதால் கல்வியாளர்கள் சத்துணவு ஆயாக்கள் நிலைக்குத் தாழ்ந்து விடுவது தவிர்க்க இயலாததாகி விட்டது.​


சின்னத்தனமான அரசியல்,​​ எல்லா உயர்பதவிகளிலும் சின்னத்தனமானவர்கள் ஏறக் காரணமாகி விட்டது. கடந்த மாதம் "அப்பாவுக்குத் தப்பாது பிறந்த பிள்ளை' என்னும் நூல் வெளியீட்டு விழாவுக்கு மதுரை சென்ற சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம்,​​ அழகிரியைப் பார்த்து மிகவும் பரவசநிலை அடைந்து,​​ தன்னை மறந்து பேசியிருக்கிறார்.
''முன்பெல்லாம் கோயிலுக்குச் சென்று திருவாசகம் பாடுவேன்!​ ஆனால் அழகிரியைச் சந்தித்த பிறகு இப்போது அழகிரிவாசகம்தான் பாடுகிறேன்.​ அண்ணனின் "காலைப் பிடித்துக் கொண்டிருப்பதுதான்' எனக்கு எப்போதும் சந்தோஷம்!''
என்னுடைய நாக்கால் மனிதனைப் பாட மாட்டேன் என்றார் நம்மாழ்வார்.​ என்னுடைய நாக்கால் கடவுளைப் பாடிய மடைமையை விட்டொழித்துவிட்டு அண்ணன் அழகிரியைப் பாடுகிறேன்;​ வீடு பேறு அளிக்க வல்லதாகச் சொல்லப்படும் தில்லைக் கூத்தனின் ''தூக்கிய திருவடியை''ப் பற்றிக் கொள்வதைவிட,​​ துணைவேந்தர் பதவியை அளிக்க வல்ல அண்ணன் அழகிரியின் திருவடியைப் பற்றிக் கொள்வதுதானே,​​ நடைமுறை வாழ்க்கைக்கு நம்பகமானது என்று அண்ணன் அழகிரியின் திருவடிப் புகழ்ச்சி பாடுகிறேன் என்கிறார் துணைவேந்தர் திருவாசகம்.


இந்தத் தரத்தில் உள்ள துணைவேந்தர்,​​ தான் பதவி வகிக்கும் பல்கலைக்கழகத்தில் "கருணாநிதியின் சிந்தனைகளை' முதுகலைப் படிப்புக்குப் பாடமாக்கப் போவதாகச் சொல்வது வியப்பல்லவே!​ "பேய் அரசு செய்தால் பிணந் தின்னும் சாத்திரங்கள்!'
கணிதம்,​​ அறிவியல்,​​ பொருளாதாரம்,​​ பொறியியல்,​​ மருத்துவம்,​​ மெய்யியல் என்பனவற்றிலெல்லாம் உயர் கல்வி என்பது போய் கருணாநிதியின் சிந்தனைகள்தாம் தமிழ்நாட்டில் உயர்கல்வி என்னும் நிலையில் திருவாசகமாவது தன் பிள்ளைகளை அந்த வகுப்பில் சேர்த்து விடுவாரா?​ கனிமொழியின் மகனாவது அதைப் படிக்க முன்வருவானா?
சங்க காலத்தில் தமிழ்நாட்டுக்கும் கிரேக்கத்துக்கும் நேரடித் தொடர்பு இருந்தது.​ அதே காலகட்டத்தில் சாக்ரடீஸ்,​​ பிளேட்டோ,​​ அரிஸ்டாட்டில் போன்ற எண்ணற்ற அறிஞர்கள் கிரேக்கத்தில் வாழ்ந்தனர்.
பதினான்கு-பதினாறாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா மறுமலர்ச்சி அடையக் காரணம் முன்னாளைய கிரேக்கச் சிந்தனைகள்தாம்.​ கிரேக்கத்தை ரோமாபுரி அடிமை கொண்ட பிறகும் கிரேக்கர்களை அடிமை கொள்ள முடியாமைக்குக் காரணம் அவர்களுடைய அறிவு வலிமைதான்.


​ அவ்வளவு சிறந்த கிரேக்கம் தமிழ்நாட்டோடு உறவு நிலையில் இருந்தது.​ யவனப் பெண்கள் இறக்குமதியானார்கள்;​ யவன மது இறக்குமதியானது;​ யவன வீரர்கள் இறக்குமதியாகி பாண்டியர்களின் அரண்மனைகளில் மெய்க்காப்பாளர்களாக விளங்கினார்கள்.​ ஆனால் யவன அறிவு மட்டும் இறக்குமதியாகவில்லை.
வள்ளுவன் போன்ற நிகரற்ற பேரறிஞர்கள் தமிழ்நாட்டை உலகின் அறிவுத் தரத்துக்கு உயர்த்தி நிறுத்தினார்கள் என்றாலும்,​​ இன்னொரு வகையான சிந்தனைப் போக்குக்கு வாய்ப்பு வந்தும் தமிழர்களால் தேடப் பெறாமல் கடல் பரப்புக்கு அந்தப் பக்கமே நின்றுவிட்டது.
நாம் சங்க காலத்தில் இழந்தது எவ்வளவு பெரிய சிந்தனைகளை என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளைக்காரன் கொண்டு வந்த அறிவு மூட்டையை அவிழ்த்தபோதுதான் தெரிந்தது.


வெள்ளைக்காரன் நமக்குச் செய்த தீமைகள் எண்ணிலடங்காதவை.​ அவனால் ஏற்பட்ட சில நன்மைகளில் ஒன்று திண்ணைப் பள்ளிக்கூடத்திலிருந்த நம்மைப் பெயர்த்தெடுத்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் கொண்டு சேர்த்ததுதான்.​ ஆத்திசூடி மட்டும் படித்த நம்மை அரிஸ்டாட்டிலின் அரசியலையும் படிக்க வைத்ததுதான்.​ ஆனால் துணைவேந்தர் திருவாசகம் பல்கலைக்கழகத்தை மீண்டும் திண்ணைப் பள்ளிக்கூடம் ஆக்கி விடுவார் போலிருக்கிறதே!
​ கருணாநிதியின் ஒரு புகழ்பெற்ற சிந்தனை ''ஸ்ரீரங்கனாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளந்திடும் நாள் எந்நாளோ?''இவர்களுக்கு வடிவங்களின் மீது சினமா அல்லது கடவுளின் மீதே சினமா?​ வடிவங்களின் மீதுதான் சினம் என்றால் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தக் கருணாநிதி ஏன் எழுந்து நிற்கிறார்?​ தேசியக் கொடி தேசம் அல்லவே!​ அதன் அடையாளம்தானே!


நீங்கள் ஒரு கந்தையை உயரத்தில் பறக்கவிட்டுத் தேசத்தை அடையாளப்படுத்திக் கொள்வதுபோல,​​ தேவைப்பட்டவன் எங்கும் பரந்து விரிந்து ஊடுருவி நின்று எல்லோரையும் எல்லாவற்றையும் தோற்றுவித்து அழிக்கும் இறையாற்றலை ஸ்ரீரங்கத்தில் "கிடந்த கோலத்தில்' ஒருவன் அடையாளப்படுத்திக் கொண்டால் என்ன குற்றம்?​ சீன எல்லையில் நிறுத்த வேண்டிய பீரங்கியை அவனிடம் கோட்டை விட்டுவிட்டு திருச்சி எல்லையில் நிறுத்துவதாகச் சொல்வதுதான் நவீன சிந்தனையா?


"ஒருவனே தேவன்' என்று திருமந்திரக் கோட்பாட்டைத் தி.மு.க.​ கடன் வாங்கிக் கொண்டதே!​ இவர்கள் தேவன் இருப்பதை அறிந்தது எவ்வாறு?​ இறை மறுப்புவாதிகள் ​ இன்று வரை விளக்கவில்லையே! காணப்படாத ஒன்றை இருப்பதாகச் சொல்வது " உய்த்தறிந்து' சொல்லும் கருதல் அளவை என்னும் தர்க்க வழிப் பட்டதுதானே.
பானை இருப்பதால் அதைச் செய்த குயவன் ஒருவன் இருக்க வேண்டும்;​ அதுபோல் உலகு இருப்பதால் அதைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்க வேண்டும் என்பவை எல்லாம் உய்த்தறிந்து சொல்லப்படுபவைதானே.​ "ஒருவனே தேவன்' என்னும் கோட்பாட்டைத் தி.மு.க.​ கைக்கொண்டது "கருதல் அளவை' என்னும் தர்க்கப்படிதான் என்றால் அண்ணாவுக்கு முந்தைய வரிசையில் பெரியார் படத்தைத் தூக்கி விட்டுத் திருமூலர் படத்தைப் போட்டுக் கொள்ள வேண்டியதுதானே?


கருணாநிதி சிந்தனைகளை முதுகலை வகுப்புக்கு முதன்மைப் பாடமாக வைத்தால்,​​ எவராவது தப்பித் தவறிச் சேர்ந்து விட்டவர் மேற்கண்ட வினாக்களுக்கு நிகரான வினாக்களை எழுப்பினால்,​​ திருவாசகம் என்ன விடை சொல்வார்?​ எவ்வளவோ அறிவான ஆசிரியர்களும் பேராசிரியர்களும் இதே பல்கலைக்கழகத்தில் தரைமட்டத்தில் கிடக்க,​​ ஆங்கில மொழித் தடுமாற்றம் உள்ள என்னை விண்ணளவு தூக்கி நான் வசதியில் மிதக்கக் காரணமான கருணாநிதி என்று திருவாசகம் வெட்கமில்லாமல்கூட விடையிருப்பார்!​ அறிவுலகம் ஏற்குமா?
பாடம் கற்பிப்பவர் குறைபாடுடையவராக இருக்கலாம்;​ பாடமே குறைபாடுடையதாக இருக்கலாமா?​ எது அறிவு?​ நல்லதன் நலனையும்,​​ தீயதன் தீமையையும் உள்ளவாறு உணர்த்துவது அறிவு என்று தமிழ்மொழி கூறும்.



காந்தியின் சிந்தனைகளை முதுகலை வகுப்புக்கு முதன்மைப் பாடமாக வைக்கும்போது,​​ கருணாநிதி சிந்தனைகளை வைக்கக் கூடாதா என்று கேட்கிறார் திருவாசகம்.
சில ஆயிரம் வெள்ளைக்காரர்கள் பல கோடி இந்தியர்களை ஆள முடிவதற்குக் காரணம் தீமையோடு மக்கள் ஒத்துழைப்பதுதான் என்று அவர்களுக்கு உணர்த்தி,​​ ஆயுதங்களைத் திரட்டாமல் மக்களைத் திரட்டியது,​​ உலகு அதுவரை கண்டறியாத போர்முறை அல்லவா!​ ​
காந்தி ஒரு யுகத்தை வடிவமைக்க வந்த சிந்தனையாளர்;​ காந்தியும் கருணாநிதியும் ஒன்றா?
தமிழ்நாட்டில் மாம்பழக் கவிராயர் சீட்டுக்கவி எழுதிக் கொண்டிருந்த காலகட்டத்தில்,​​ ஜெர்மானியச் சிந்தனையாளர் இமானுவேல் காண்ட் தூய அறிவு குறித்த ஆய்வினை மேற்கொண்டிருந்தார்.​ காலமும் வெளியும் நம்முடைய மனத்தின் படைப்புகளே!​ அவை புறப்பொருள்களை ஒழுங்குபட அடுக்கி உணர்வதற்கான மனத்தின் கருவிகள் மட்டுமே என்றார் காண்ட்.


காண்ட்டைப் படிப்பதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா,​​ இல்லை,​​ கருணாநிதியின் பராசக்தி வசனத்தைப் படிப்பதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா?​ திருவாசகம் சொல்லட்டுமே!
வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறுதான் -​ அடித்துச் சொன்னார் ​ காரல் மார்க்ஸ். உற்பத்திச் சாதனங்களைப் பொதுவுடைமை ஆக்காத சமூகத்தில் பணமே எல்லாமாக விளங்கும்.​ ஆட்சி,​​ சமூக மதிப்பு,​​ தலைமைப் பொறுப்பு அனைத்துமே பணத்தால் தீர்மானிக்கப்படும்.​ பணம் இல்லாத உண்மைகள் உறங்கும்;​ பணமுடைய பொய்மைகள் கோலோச்சும்.​ பணமுடைய முட்டாள் மதிக்கப்படுவார்;​ பணமில்லாத அறிஞர் இழிவுபடுத்தப்படுவார்!


​ திருவாசகங்கள் துணைவேந்தர்களாவார்கள்;​ கருணாநிதிகள் நாடாள்வார்கள் என்று மார்க்ஸ் பெயர் குறிப்பிடாமல் அனைத்தையும் பேசுவது போலில்லையா மேற்கண்ட வாதங்கள்.

​ வர்க்க வேறுபாடற்ற சமூக உருவாக்கத்தைப் பற்றிப் படிக்க பல்கலைக்கழகம் வேண்டுமா?​ கருணாநிதியின் "இல்லற ஜோதி' வசனத்தைப் படிக்கப் பல்கலைக்கழகம் வேண்டுமா?​ திருவாசகம் சொல்லட்டுமே! தாவோயியம்,​​ புத்தர்,​​ வள்ளுவர்,​​ ஏசு,​​ நபிகள் நாயகம்(ஸல்),​​ சங்க இலக்கியம்,​​ எபிகூரியன் கொள்கை,​​ ஸ்டோயிசிசம்,​​ மாக்கிவெல்லி,​​ சாணக்கியன்,​​ உபநிடதங்கள்,​​ ஹாப்சின் லெவியதான்,​​ ஜான் லாக்கின் அரசியல் தத்துவம்,​​ ரூசோ,​​ நீட்சே,​​ ஹியூம் இவர்களோடு நம்முடைய ஊர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களைப் படித்து முன்னேறிச் செல்வதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா?​ "திரும்பிப் பார்' வசனத்தைப் படித்துவிட்டுத் திரும்பி நடப்பதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா?
பல்கலைக்கழகங்களில் முதுநிலை வகுப்பில் கருணாநிதியின் சிந்தனைகளைப் "பணம் வேறு கட்டி'ப் படிப்பதற்குப் பதிலாக அந்தப் பணத்தில் பத்து மாடுகளை வாங்கி வைத்துக் கொண்டு மேய்க்கலாமே!​ பால் வளமாவது பெருகுமே!


மீனாட்சி அம்மன் கோயிலில் செருப்புக் குத்தகையை ஏலம் எடுப்பவர் ஒரு முதுநிலைப் பட்டதாரியாகவும் இருந்தால் அடுத்த துணைவேந்தராகி விடலாம்.​ கூடுதல் தொகைக்கு ஏலம் கேட்பதுதான் முக்கியமானது. திண்ணைப் பள்ளிகளாகின்றன பல்கலைக்கழகங்கள்!

Saturday, April 3, 2010

ஐந்து நாளில் கட்டிமுடிக்கப்பட்ட சட்டப்பேரவை




எதையாவது எழுத வேண்டும் என்பதற்காக நான் பதிவெழுதுவதில்லை.அதே நேரத்தில்
எழுதத்தூண்டும் நேரங்களில் எல்லாம் எழுதிவிடுவதும் இல்லை. எழுதியே ஆக வேண்டும்
என்ற தாக்கமும், அதற்குரிய நேரமும் கிடைக்கும் போது மட்டுமே எழுதுகிறேன்.
ரொம்ப நாட்களாக புதிய தலைமைச் செயலகம் பற்றிய என்னுடைய எண்ணங்களைப்
பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.

புதிய சட்டப் பேரவை கட்டடம் பற்றிய நிறைய விடங்கள் உண்டு. ஆனால், நான் பேசப் போவது அதில் உள்ள சட்டம் தொடர்பான ஒரு பிரச்னையைப் பற்றி. அதாவது ஒரு கட்டடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டவுடன், அந்த இடத்தில் இப்படித்தான் அந்தக் கட்டடம் இருக்கும் என்ற ப்ளானைக் காட்டி (அப்ரூவல்) அங்கீகாரம் பெற்று கட்டடத்தைக் கட்ட வேண்டும். பெரும்பாலும் அங்கீகாரம் பெறுவதற்கு கொடுக்கப்படும் ப்ளான்படி யாரும் கட்டடம் கட்டுவது கிடையாது. அப்படி கட்டவும் முடியாது. ஒரு கட்டடம் எப்படி இருக்க வேண்டும் என்று சட்டம் நிர்ணயித்துள்ள ஒழுங்குமுறைப்படி கட்டடம் கட்டுவதில் நிறைய பிரச்னைகள் உண்டு. (ஒரு கட்டடத்திற்குள் வந்து போகும் மக்களின் நலனுக்காகவே இதுபோன்ற சட்ட கெடுபிடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் கவனிக்கவேண்டும்)

சென்னைத் தலைமைச் செயலகக் கட்டடத்திற்கும் இதேபோல் ப்ளான் அப்ரூவல் வழங்கப்பட்டிருக்கிறது. அது வழங்கப்பட்ட நாள் 8.3.2010 (அரசாணை எண் MS. NO: 54) ஹவுசிங் அண்ட் அர்பன் டெவலப்பிங் டிபார்ட்மென்ட் சார்பில் அரசாணை வெளியிட்டு தலைமைச் செயலகக் கட்டடத்திற்கான ப்ளானை அப்ரூவல் செய்திருக்கிறார்கள்.

எல்லாம் சரி. ஆனால் இந்த அரசாணை வழங்கப்பட்டு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது, 13.3.2010. அதாவது ஐந்து நாட்களில் அந்த ஏழு மாடி கட்டடத்தைக் கட்டி முடித்திருக்கிறார்களாம். நடந்தது என்னவென்றால், ப்ளான் அப்ரூவலுக்கு முன்பே அந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இது சட்டமீறல்.

இன்னும் கட்டுமானப்பணி நடக்கிறதென்றால், கட்டி முடிக்காத கட்டடத்தில் ஒரு மாநிலத்தின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஏற்கெனவே செயல்பட்டு வந்த கோட்டையிலிருந்து இவ்வளவு அவசரமாக காலி செய்து இங்கே பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த வேண்டிய காரணங்கள் என்ன? ப்ளானிங் அப்ரூவல் இன்றியே ஏழு மாடிக் கட்டடத்தை கட்டி முடிக்க இந்த அரசு சட்ட மீறலை செய்திருக்கிறது. அதுவும் சட்டங்களை இயற்றும் சட்டப் பேரவைக் கட்டடத்தைக் கட்டவே சட்டமீறல் என்றால், அவர்களுக்கு சட்டமியற்ற என்ன அருகதை இருக்கிறது. சட்டத்தை மீறும் இவர்கள் எப்படி சட்டப்படியான நியாயப்படியான அரசை நடத்த அருகதை பெற்றவர்கள் ஆவார்.

பழைய வாடகை கட்டடத்தில் இருந்து சொந்தமான கட்டடத்திற்கு சட்டப் பேரவையைக் கொண்டு வர வேண்டும் என்றால் முறைப்படி, சட்டப்படி உரிய அனுமதி பெற்று ப்ளான் அப்ரூவல் வாங்கி கட்டடம் கட்ட வேண்டியதுதானே. அதற்குள் அவசரம் வேண்டியிருக்கிறது. நாளைக்கே தீவிரவாதிகள் உள்ளே புகுந்து (மும்பை தாஜ் ஹோட்டல் போல்) தாக்குதல் நடத்தினால் இந்தக் கட்டடத்திற்கான உரிய வரைப்படம் (ப்ளான்) இல்லாமல் பாதுகாப்பு அதிகாரிகள் கையைப் பிசைந்து கொண்டு நிற்கத்தான் முடியும்.

(பி.கு) நள்ளிரவில் தன்னைக் கைது செய்து கொண்டுவரப்பட்ட சி.பி.சி.ஐ.டி அலுவலக
வளாகத்தை இடித்துத்தான் புதிய சட்டப் பேரவையைக் கட்டியிருக்கிறார், கலைஞர்.

அதேபோல் தன்னை அடைத்து வைத்திருந்த மத்திய சிறைச்சாலை புழலுக்குக் கொண்டு சென்று விட்டு, மத்திய சிறைச்சாலை கட்டடத்தை இடித்துத் தள்ளிவிட்டுத்தான் அந்த இடத்தில் அரசு மருத்துவமனைக் கட்டிக் கொண்டிருக்கிறார் என்பதையும் கவனிக்கவும்.