Tuesday, February 21, 2012

இயக்குநர் ‘ஷ’ங்கருக்கு மனம் திறந்த மடல்

அன்பு ‘நண்பன்’ இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு வணக்கம்.

நீங்கள் நலமா? முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு, அணுஉலை எதிர்ப்பு, மூவர் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு என போராட்டக் களங்களில் நாங்களும் நலமாக இருக்கிறோம்.



ஐயா, ஷங்கர் அவர்களே, நீங்கள் தமிழர்கள் மீதும், தமிழ் மொழி மீதும் இந்தளவுக்கு வன்மம் கொள்ள என்ன காரணம்? யாரோ வாங்கும் பட்டத்தை தன் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்ளும் கதாபாத்திரத்துக்கு ‘பாரி வேந்தர்’ என்று தமிழ்ப் பெயர் வைத்திருக்கிறீர்கள். இது உங்கள் கருத்து சுதந்திரமாகவே இருந்து விட்டுப் போகட்டும். ‘சிவாஜி’ படத்தின் பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை பெயர்களை முகத்தில் கரி அப்பியப் பெண்களுக்கு வைத்தும் அதன் மூலம் தமிழர்களை கிச்சுமுச்சு மூட்டி சிரிக்க வைக்க முயன்றதையும் உங்கள் கருத்து சுதந்திரம் என்று எடுத்துக் கொள்ளலாமா?


‘நண்பன்’ படத்தில் ஏழ்மை நிலையால் திருமணம் ஆகாத பெண் கருப்பாக இருப்பதை வைத்து நீங்கள் சிரிக்க வைப்பதை எல்லாம் நகைச்சுவை என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அதே ‘நண்பன்’ படத்தில் பாரிவேந்தர் என்ற பெயரை குடிபோதையில் இருக்கும் கதாநாயகி(!) “பாரிவேந்தராவது பூரிவேந்தராவது” என்று பேசியும், மற்றொரு காட்சியில், “பாரி, பூரி, கக்கூஸ் லாரி” என்றும் களங்கப்படுத்துவார். தமிழ்ப் பெயரின் மீதும் கருப்பு நிறத்தின் மீதும் உங்களுக்கு அப்படியென்ன வெறுப்பு?

அப்படியே நீங்கள் தமிழர்களையும் அவனது நிறத்தையும் வெறுத்தால் அது உங்கள் சொந்த விசயம்தான். ஆனால், அதை வன்மத்துடன் திரைப்படங்களில் புகுத்தி, தமிழர்களின் பொதுப் புத்தியில் உங்கள் கருத்தை திணிக்க முயல்வதை இனியும் நாங்கள் கைகட்டி வாய் மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். இது உங்களுக்கு விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை!!

தமிழ்ப் படங்கள் எடுத்து (நீங்கள் எடுத்த ஒரு இந்திப் படம் ஊற்றிக் கொண்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன்) நீங்கள் சம்பாதித்த ஒவ்வொரு காசும் தமிழர்களுடையது. நீங்கள் கட்டிய வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் தமிழர்கள் கொடுத்த காசில் வாங்கியது. நன்றி மறப்பது நன்றன்று.

வெறும் பெயரில் என்ன இருக்கிறது? என்று, நீங்கள் சமாளிக்கலாம். அல்லது சமாதானம் பேசலாம். உண்மையில் பெயரில் ஒன்றும் இல்லை என்பது உண்மையானால், சங்கர் என்று பெற்றோர், உங்களுக்கு வைத்த பெயரை, ஷங்கர் என்று நீங்கள் மாற்றியது எதற்காக? உங்கள் படங்களில் உள்ள தமிழர் விரோதப் போக்கை அறியாமல் கைதட்டி, ரசிக்கும் அப்பாவி தமிழனுக்கு வேண்டுமானால் ‘ச’-வுக்கும், ‘ஷ’-வுக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல் இருக்கலாம். உங்கள் பெயரில் மாறிய ஒன்றை எழுத்தில் இருக்கும் அரசியலை புரிந்து கொண்டாலே, தமிழ் மொழி மீதான உங்களின் ஒட்டுமொத்த வன்மத்தை கண்டுகொள்ளலாம்.

உங்களது ‘எந்திரன்’ படத்தில் பிரித்தானிய நூலகத்துக்குள் செல்லும் எந்திர மனிதன் அங்குள்ள ஆங்கில புத்தகங்களை படிக்கும். அந்த எந்திர மனிதன் படிக்கும் ஒரே ஒரு தமிழ்ப் புத்தகம் ஆச்சாரக் கோவை! பார்ப்பனர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கையை முறையை (தீண்டாமையை) வலியுறுத்தும் அந்த நூலை கொடுத்து எந்திர மனிதனையும் பார்ப்பனனாக்கும் உங்கள் சாமர்த்தியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதுவும் உங்கள் கருத்து சுதந்திரமா?

உங்கள் முதல் படம் ‘ஜென்டில்மேன்’ தான் தமிழில் முதல் முதலில் வெளியான இடஒதுக்கீட்டுக்கு எதிரான படம் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நேர்மை, ஊழல் எதிர்ப்பு, கருப்புப் பணம் ஒழிப்பு என படங்களில் நீங்கள் வலியுறுத்தும் கருத்துகளுக்காக எல்லோரும் உங்களை பாராட்டுகிறார்கள். ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹாசரேவுக்கு ஆனந்த விகடன் இதழ், இந்தியன் தாத்தா என்று உங்கள் படத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயரை சூட்டி பாராட்டியது. அதற்காக மகிழ்ச்சியில் திளைத்தீர்கள். ஐயா, ஷங்கர் அவர்களே, இந்தியாவில் திரைப்படத் துறையில் தான் அதிகளவில் கருப்புப் பணம் கல்லா கட்டுகிறது என்பது அரசியல் அரிச்சுவடி கூட தெரியாதவர்களுக்கும் புரியும். நேர்மையைக் கொண்டாடும் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் அவர்களே, உங்கள் படங்களின் பிரமாண்டத்துக்குப் பின்னால் ஒளிந்திருப்பது கருப்புப் பணம் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? நீங்கள் சம்பளமாக வாங்கும் ஒவ்வொரு காசுக்கும் அரசிடம் நேர்மையாகக் கணக்கு காட்டுகிறீர்களா? உங்கள் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வழக்கு போட்டார்கள் என்பதை தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்…

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் தமிழைப் பழித்தும், தமிழர்களை இழித்தும் நீங்கள் தமிழ்ப் படங்களைத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்படி உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் உங்கள் பாவத்துக்கு கருட புராணத்தில் நிச்சயம் தண்டனை உண்டு!!

வணக்கங்களுடன்,

பொன்னுசாமி.

(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி (16-29) இதழில வெளியான எனது கட்டுரை) -வே.வெற்றிவேல் சந்திரசேர்

Thursday, February 16, 2012

சீமான் செய்த தவறு என்ன?



நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ததாக வெளியாகியிருக்கும் செய்தியை பெரிய விவாதப் பொருளாக்கி இருக்கிறார்கள். அதில் ஒருசிலர் அடிப்படை நாகரீகம் இன்றி அவதூறாக அவரைப் பற்றி எழுதுகிறார்கள். என் நண்பன் ஜெ.பி. அடிக்கடி என்னிடம் இப்படி சொல்வது உண்டு: Perfection is enemy of good.

சீமானை விமர்சிப்பவர்களும் இதே தவறைத்தான் செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் சீமானுக்குப் பயங்கரவாத இயக்க ஆதரவு முகமூடியை அணிவித்திருக்கிறார்கள். இவர்களுக்கு தமிழ், தமிழ் உணர்வு என்றாலே அலர்ஜி. தினமலர் வாசகர்களாக இருக்கலாம்.

இரண்டாவது பிரிவினர், மீளா துயரத்தில் இருந்து தமிழர்களையும் தமிழ்நாட்டையும் மீட்க வந்த மீட்பராக சீமானைப் பார்க்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் நாம் தமிழர் கட்சியினராகவோ சீமானின் பேச்சால் கவரப்பட்ட ஈழ ஆதரவாளராகவோ இருப்பார்கள்.
மூன்றாவது பிரிவினர் கவனிக்கத்தக்கவர்கள். தமிழ் உணர்வுடன் சமூக உணர்வுடன் இருப்பார்கள். அல்லது அப்படி இருப்பதாகக் காட்டிக் கொள்வார்கள். இவர்கள்தான் இன்றைக்கு சீமானின் பா.ஜ.க ஆதரவு பரப்புரையை விமர்சிக்கிறார்கள்.

சீமான் பா.ஜ.க.வுக்கு பிரசாரம் செய்ததில் தமிழ் நாட்டுக்கே கேடு நடந்து விட்டதாக குதிக்கிறார்கள். இவர்கள் சீமானை மட்டுமல்ல, வைகோவை, பெ.மணியரசனை, தியாகுவை, நெடுமாறனை யாரையும் விட்டு வைக்க மாட்டார்கள். எல்லோரையும் விமர்சிப்பார்கள்.

அப்படியென்றால் சீமானை விமர்சிக்கவே கூடாதா? சீமான் பா.ஜ.க.வை ஆதரித்து பிரசாரம் செய்ததை வக்காலத்து வாங்குகிறீர்களா? என்று நீங்கள் கேட்கலாம். சீமான் உள்பட யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் நீங்கள் செய்ய விரும்பும் ஒரு பணியை அல்லது நீங்கள் செய்ய முடியாத ஒரு பணியை களத்தில் இருந்து செய்கிறவர் தான் சீமான்.

முன்பு செய்தியாளராக இருந்த போது பேட்டிக்காக பல முறை சீமானை நேரில் சந்தித்திருக்கிறேன். அந்த நேரங்களில் எந்நேரமும் அவரது அலை பேசி ஒலித்துக் கொண்டே இருக்கும். “உடுத்த மாத்துத் துணி கூட இல்லாமல் முள் வேலிக்குள் நிக்கிறோம் அண்ணே. என்ட உறவுகள் லண்டனில் இருக்கிறாங்கள். அவங்களுக்குத் தகவல் சொல்லி எங்களை இங்கிருந்து கூட்டிப் போகச் சொல்லுங்கோ” என்று தமிழ்ப் பெண்கள் கண்ணீர் மல்க பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர்களுக்கு சீமான் இவரது உத்தரவால் தேவையான உதவிகள் போய் சேருவதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள கைவிடப்பட்ட தமிழர்கள் குறிப்பாக ஈழத் தமிழர்கள், திக்கற்று நிற்கும் இந்த சூழலிலும் “தலைக்கு மேலே ஆபத்து என்றால் அண்ணன் இருக்கிறார். அவரிடம் முறையிடுவோம்“ என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். குமுதம் ரிப்போர்ட்டரில் நான் பணியாற்றிய போது வெளிநாடுகளில் இருந்துழ என்னிடம் பேசி சீமானின் அலைப் பேசி எண்ணை வாங்குவார்கள். பிறகு சீமானிடம் தங்கள் துயரங்களை இறக்கி வைத்துவிட்ட நிம்மதியில், எனக்கு நன்றி சொல்லும் போது அவர்களது தழுதழுக்கும் குரல்களில் ஒட்டுமொத்த தமிழினத்தில் சோகமும் வெளிப்படும்.

அங்கே முள்வேலி முகாம், இங்கே அகதிகள் முகாம் என தவிப்போரையும், வெளிநாடுகளில் உள்ள அவர்களின் ரத்த உறவுகளான புலம்பெயர் தமிழர்களையும் இணைக்கும் பாலமாக சீமான் இருந்து வருகிறார். தமிழ்நாட்டிலும் தமிழ் உணர்வோடு நிற்கும் எத்தனையோ இளைஞர்களின் முயற்சிகளுக்கும் முன்னேற்றத்துக்கும் சீமான் பக்கபலமாக நிற்பதை கண்டிருக்கிறேன்.

சிவசேனாக் கட்சித் தலைவர் பால் தாக்ரே மீது நீங்கள் எத்தனையோ விமர்சனங்களை வைக்கலாம். வெளியிலிருந்து பார்த்தால், அவர் ஓர் இந்து அடிப்படை வாதி. ஆனால் மகாராஷ்டிரா மாநில மண்ணின் மைந்தர்களின் பாதுகாவலர் அவர். தமிழ்நாட்டில் இன்றைய சூழலுக்கு மண்ணின் மைந்தர்களின் உரிமையை மீட்க ஒரு பால் தாக்ரே தேவை. சீமான் தமிழ்நாட்டில் பால்தாக்ரேவாக வளர்ந்தால் அதை நான் வரவேற்பேன் என்பதை பகிரங்கமாக அறிவிக்கிறேன்.

இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல… அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திலும் சீமான் பங்கெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். முல்லைப் பெரியாறு போராட்டத்திலும் முன் நிற்கிறார். இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் கூட ஏதாவது ஒரு போராட்டத்தில் அவர் கலந்து கொண்டிருப்பார் அல்லது அதற்கான ஆயத்தங்களில் இருப்பார் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.


காஞ்சி ஜெயேந்திரர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டது. கைதும் செய்யப்பட்டார். முதல்வர் ஜெயலலிதா அந்த வழக்கில் ஜெயேந்திரர் மீது கடுமையாக நடந்து கொண்டார். ஜெயலலிதாவை ஆதரிக்கும் பார்ப்பனர்கள் யாரும் ஜெயேந்திரரை கைவிட்டு விடவும் இல்லை. ஜெயேந்திரர் காலில் விழும் பார்ப்பனர்கள் யாரும் ஜெயலலிதாவுக்கு எதிராக கருணாநிதிக்கு ஒட்டுப் போட்டு விடவும் இல்லை. உதாரணம் எஸ்.வி. சேகர். அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து கொண்டே ஜெயேந்திரர் புகழ் பாடிக் கொண்டிருந்தார்.


பார்ப்பனர்களுக்கு ஜெயலலிதா மீதோ, ஜெயேந்திரர் மீதோ வருத்தம், கோபம், அதிருப்தி எல்லாம் வரலாம். ஆனால் அதை அவர்கள் பொதுத் தளத்தில் விவாதிக்க மாட்டார்கள். “என்ன இருந்தாலும் அவ… நம்ம ஆளுடா” என்று தோளில் கைபோட்டுக் கொள்வார்கள். இந்த ஒற்றுமை ஏன் தமிழர்களிடம் இல்லை என்பதுதான் என் வருத்தம்.

சீமானைப்பற்றி தினமலரில் அவதூறு வந்தால் அதைப் பற்றி கவலைப்பட்டிருக்க மாட்டேன். களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கும் என் அருமை நண்பர்களே சீமானை விமர்சிப்பது வேதனையாக இருக்கிறது. அவரை விமர்சிக்கும் நண்பர்களில் பலர் இந்த இனத்துக்காக சொந்த வாழ்க்கையில் என்ன இழந்தார்கள் என்பதை நான் அறிவேன். அதே போலவே பல இழப்புகளை சந்தித்தவர் தான் சீமானும். சீமான் எத்தனை முறை சிறை சென்றார்? யாருக்காக சென்றார்? எதற்காக சென்றார்? என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

சீமானை களங்கப்படுத்தி காயப்படுத்தி களத்தில் இருந்து வெளியேற்றி விட்டால் அந்த இடத்தில் யார் வருவார்கள் என்று சிந்தியுங்கள். இன்றைக்கு ஆரியப் பெண்மணி ஜெயலலிதாவும், தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்களும் தமிழ்நாட்டில் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு தமிழர்களைப் பற்றிய அக்கறை என்ன இருக்கிறது? பா.ஜ.க.வை ஆதரித்தால் ஒன்றும் குடிமூழ்கி போவது கிடையாது. தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்கிறார், சீமான். ஆமாம் நமக்கான உரிமைக்காக ஜெயலலிதா, விஜயகாந்திகளிடம் போராடுவதை விட ஒரு தமிழனிடம் போராடிப் பெறுவதே மேல் என்பது என் கருத்து.

அமெரிக்காவுக்கே சென்று அந்நாட்டு அரசை நேருக்கு நேர் எதிர்க்கும் அருந்ததி ராய்தான் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பற்றி கருத்து சொல்ல மறுத்தார் என்பதை மறந்து விடாதீர்கள். நமக்கு நாமேதான் இங்கே துணை. எனவே நம் கைகளால் நம் கண்களை குத்திக் கொள்ள வேண்டாமே.. ப்ளீஸ்!!


சீமான் என்றில்லை தமிழினத்துக்காக களத்தில் நிற்கும் எந்தத் தமிழனையும் விமர்சனம் என்ற பெயரில் களங்கப்படுத்தாதீர்கள்.. ஏனெனில், Perfection is enemy of good.

-வே.வெற்றிவேல்சந்திரசேகர்

Saturday, February 11, 2012

நார்வே விருது அறிவிப்பு நிகழ்ச்சியில் நான் பேசியது...




கடந்த இரண்டு வருடமாக நடைபெற்று வரும் ‘நோர்வே தமிழ்த் திரைப்பட விழா’ மூன்றாவது முறையாக 2012, ஏப்ரல் 25ஆம் தேதி துவங்கி 29ஆம் தேதி வரை நோர்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற இருக்கிறது.

அழகர்சாமியின் குதிரை, வெங்காயம், வாகைசூட வா, கோ, ஆரண்ய காண்டம், எங்கேயும் எப்போதும், போராளி, மயக்கம் என்ன, பாலை, உச்சிதனை முகர்ந்தால், வர்ணம், மகான் கணக்கு, நர்த்தகி ஆகிய தமிழகத்தில் உருவான படங்களும், பிரான்சில் உருவான் தீரா நதி மற்றும் கனடாவில் உருவான ஸ்டார் 67 ஆகியப் படங்களும் விழாவில் திரையிடப்பட இருக்கின்றன.

இந்த அறிவிப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. திரைப்பட விழாவிற்கு தேர்வான படங்களின் நடிகர், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் இயக்குநர் பாலுமகேந்திரா. பாலை படத்தின் சார்பில் அதன் துணை இயக்குனரான நானும் பங்கேற்றேன். அதில் இயக்குநர் பாலுகேந்திரா பேசுகையில், “எது நல்ல படம்? என்று கேட்பது எது நல்ல உணவு? என்று கேட்பது போலவே. எவ்வளவோ சிறந்த உணவுகளை நாம் சாப்பிட்டு இருந்தாலும் அம்மா கையால் சாப்பிடும் உணவுதான் நமக்கு மிகவும் பிடிக்கும். ஏனேன்றால் அம்மா சமையலில் அவரது கரிசனமும் இருக்கும். அந்த உணவு நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் ஏற்றதாகவும் ஆரோக்யமாகவும் இருக்கும். அந்த வகையில் நமது கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும் பார்ப்பவர்கள் மனதில் நச்சினை விதைக்காமலும் அவர்களுக்குள் ஒரு மிருகத்தை தட்டியெழுப்பாமலும் இருக்கும் அனைத்துப் படங்களுமே நல்ல படங்கள்தான்” என்றார். அது சரி அந்த நிகழ்ச்சியில் நான் என்ன பேசினேன் என்பதை சொல்லிவிடுகிறேன். “பாலை திரைப்படத்தைத் தேர்வு செய்த நார்வே திரைப்பட விருது குழுவினருக்கு பாலை குழுவினரின் சார்பில் நன்றிகள்” சொன்னேன்.

-வே.வெற்றிவேல்சந்திரசேகர்.