Saturday, November 14, 2009

ஜெகத் கஸ்பரின் ‘நாம்’ அமைப்பும், போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பும் விபசாரம் செய்யலாம்!





அந்தப் (கவிதை) புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு நான் போயிருக்கவே கூடாது. போனதோடு நிறுத்தியிருக்கலாம்.
அந்தப் புத்தகத்தை வாங்கியிருக்கக் கூடாது. அதோடு அந்தப் புத்தகத்தைப் புரட்டிய போதே எனக்கு வந்த ஆத்திரம், அதைப் படித்தும் ஆயிரம் மடங்கு அதிகரித்துவிட்டது.

போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் அமைப்பும், ஜெகத் கஸ்பரின் ‘நாம்’ அமைப்பும் இணைந்து, ‘ஈழம் மௌனத்தின் வலி‘ என்ற புத்தகத்தை அந்த நிகழ்வில் வெளியிட்டனர். தமிழ் மக்கள் ஈழத்தில் துடிதுடித்து செத்துப் போனதை படம் போட்டுக் காட்டி அந்தப் படங்களுக்குப் பொருத்தமான கவிதைகளை பிரபலங்களிடம் வாங்கித் தொகுத்திருக்கிறார்கள். கமல் முதல் ரஜினி வரை கவிதை எழுதியிருக்கிறார்கள். (இன்னும் நீங்கள் எதிர்பாராத பலரும் இதில் எழுதித் தள்ளியிருக்கிறார்கள்)

சனிக்கிழமை மாலை நடந்த அந்த நிகழ்ச்சியில் நக்கீரன் கோபால், நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சிவக்குமார், சூர்யா, இயக்குநர்கள், வசந்த், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருடன் சிறப்பு அழைப்பாளராக ஜகிவாசுதேவ் கலந்து கொண்டார். அக்டோபரில் ஆரம்பித்து படிப்படியாக உக்கிரம் அடைந்த போரில் அப்பாவி மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் இவர்கள் எல்லாம் எங்கே போயிருந்தார்கள் என்று தெரியவில்லை. திடீரென இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து இந்த மனிதநேயம் முளைத்தது?

தமிழீழ விடுதலைப் புலிகளை சிலாகித்து நக்கீரன் பத்திரிகையில் எழுதிக் கொண்டே, ‘புலிகள் தவறே செய்யாதவர்கள் அல்ல. அவர்களுக்கு சர்வதேச அரசியல் தெரியவில்லை’ என்று பேசிவரும் ஜெகத் கஸ்பர் இந்த நிகழ்ச்சியின் நாயகன்! ஈழம் பற்றி பேசுபவர்கள் புலிகளை விமர்சிக்கக் கூடாது என்பது அல்ல என் வாதம். கஸ்பர் எதற்காக இந்த இரட்டை வேடம் போடுகிறார் என்பதே என் கேள்வி.

புலம் பெயர்ந்தவர்கள், சிறிதேனும் இயக்கத் தொடர்பு உள்ளவர்களுக்கு இந்த கஸ்பர் யாரென்று பல ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்ததுதான். ஆனால், தமிழ்நாட்டில் ஈழஅவலத்தை முதல் முறையாகக் கண்டு கொதித்துப் போன (என்னைப் போன்ற) இந்தத் தலைமுறையினரை இந்திய அரசுக்கு ஆதரவான ஆட்களாக ஆக்குவதுதான் கஸ்பருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பணி. நக்கீரன் இதழ் மூலம் அதை நன்றாகவே செய்கிறார், கஸ்பர்.

நக்கீரனில் தொடரும் பணியை அடுத்தத் தளத்துக்கு விரைவுப்படுத்தவே இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி. மருத்துவர் எழிலன் தன் நன்றியுரையில், ‘கழிவு நீரும் குடிநீரும் கலந்து வரும் தண்ணீரைப் பருகிக் கொண்டிருக்கும் மக்களுக்காக மழைநீரைப் (வெளியே மழை பெய்து கொண்டிருந்தது) பொருட்படுத்தாமல் வந்த உங்களுக்கு நன்றி’ என்றார். முள்வேலி முகாமில் பாலாறும், தேனாறும் ஓடுகிறது என்று தன் நெருங்கிய தோழி கனிமொழி சொன்னதை மறந்துவிட்டாரா? ‘இலங்கைத் தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலைப் பெற்றுத் தந்த கலைஞருக்குப் பாராட்டு! வாழ்க தலைவர் கலைஞர்’ என்று திமுகவினர் போஸ்டர் அடித்தது, பாவம் எழிலனுக்குத் தெரியாது போலும். (பிரபாகரனுக்கு முட்டாள். கலைஞரைப் பாருங்கள், வெறும் நான்கே நாட்களில் அந்த மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்து விட்டார்) எழிலன் அவர்களே, குறைந்தபட்சம், மருத்துவத் தொழிலையாவது மனச்சாட்சியோடு செய்யுங்கள்.

போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் அமைப்பைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். சினிமாவில், போலீஸ் கிளைமாக்ஸில் வருவது போல, போர் முடிந்து இனஅழிப்பு முடிந்து முனங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென வந்திருக்கிறார்கள் இந்த போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள். இந்த அமைப்பின் அமைப்பாளர் த.செ.ஞானவேல் இத்தனை நாள் எங்கே இருந்தார்? பிரகாஷ்ராஜின் விவகாரத்து வழக்கைக் கவனித்துக் கொண்டிருந்தாரா?

‘ஜெகத் கஸ்பரின் ‘நாம்’ அமைப்பும் சேர்ந்துதான் புத்தகம் வெளியிடுகிறது என்பதை மறைத்து என்னிடம் கவிதை வாங்கி பிரசுரித்திருக்கிறார்கள்’ என்று இயக்குநர் சீமான் சீறியதாகவும் பேசிக் கொள்கிறார்கள். இத்தனையும் செய்துவிட்டு இப்போது புத்தகம் வெளியிட்டு அதற்கு நூறு ரூபாய் விலை வேறு. அதில், ‘மனித நேயர் எவரும் மறுபதிப்பு செய்யலாம்‘ என்று பெருந்தன்மையான விளக்கம் வேறு. (அடுத்தவர்களிடம் ஓசியில் எழுதி வாங்கிக் கொண்டு அதற்கு காப்பி ரைட் வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பார்கள், போலும்!)

இப்படியொரு புத்தகம் வெளியிட்டதன் நோக்கம் என்ன? எதற்காக செய்தார்கள்? எதை மறைக்க இப்படி செய்கிறார்கள்? கலைஞரைத் திட்டக் கூடாது, இந்திய அரசை திட்டக் கூடாது, போராடக் கூடாது, ஆனால் ஈழ மக்களை நினைத்து கண்ணீர் சிந்திக் கொண்டே இருக்க வேண்டும். இதுதானே கஸ்பர் அன்கோவின் விருப்பம். இந்திய அரசு அவருக்கு இட்டிருக்கும் பணி.
ஈழ மக்களின் துயரம் குறித்து பேச முயன்ற மனித உரிமை ஆர்வலரான அமெரிக்கப் பெண் எல்லின் ஷேண்டருக்கு தமிழ்நாட்டில் நுழையவே தடை விதித்தார்கள். அந்தப் பெண்ணின் பேச்சை வீடியோவில் கூட ஒளிபரப்பக் கூடாது என்றது, கலைஞர் அரசு. ஆனால் கஸ்பர் விழாவுக்கு மட்டும் பலத்த போலீஸ் பாதுகாப்போடு ராஜமரியாதை. இதில் இருந்தே தெரிய வேண்டாமா? யார் உண்மையை பேசுகிறார்கள்? யார் பொய் பேசுகிறார்கள் என்று.

‘நம் தொப்புள் கொடி உறவுகள் மீது இனஅழிப்பைப் போரை இந்தியாதான் முன்னின்று நடத்துகிறது’ என்று தொடக்கத்தில் இருந்து கடுமையாக பேசிவரும் கவிஞர் தாமரை போன்ற ஒரு சிலரின் பங்களிப்பும் இந்தப் புத்தகத்தில் உண்டு. அவர்கள் யாரும் என்னுடைய இந்த விமர்சனத்தைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. (உன்னை போல் ஒருவன் படத்தில், ‘தமிழ்நாட்டு மக்கள் ராஜீவ் காந்தி படுகொலையையும், மீனம்பாக்கம் குண்டு வெடிப்பையும் மறந்து விட்டார்கள்’ என்று வாய் கிழிய பேசிய கமலின் கவிதை இந்தப் புத்தகத்தில் முதல் பக்கத்தில் வந்திருப்பதுதான் வேதனையிலும் வேதனையான ஒன்று) கஸ்பர் அய்யா, எழிலன் அய்யா, போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பைச் சேர்ந்தவர்களே.. மனதில் கொஞ்சமேனும் மனிதமும், ஆண்மையும், தைரியமும் இருந்தால் நடந்து முடிந்த இனப்படுகொலைக்குக் காரணமான இந்திய அரசை கண்டித்து ஒரே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்.. உங்களால் முடியவே முடியாது. குமுதம் இணையதளத்தில் அண்மையில் ஜெகத் கஸ்பர் சொன்னதை உங்களை எல்லாம் பார்த்துச் சொல்கிறேன்.. இந்தப் பிழைப்புப் பிழைப்பதைவிட விபசாரம் செய்யலாம்..அடத்தூ..