Saturday, August 28, 2010

ஜூனியர் விகடனிடம் அடைக்கலமாகும் தினமலர்!ஜூனியர் விகடன் விவகாரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் ஒன்றாக இணைந்து அழகிரி ஆதரவாளர்களுக்கு எதிராக களம் இறங்கியிருப்பது ஆக்கப் பூர்வமான ஆரம்பம். தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தினகரன் நிர்வாகம் அடித்த அல்தர் பல்டிக்கு இது ஒரு பாடம்.

ஜூனியர் விகடன் விவகாரத்தில், அண்மையில் முதல்வரை சந்தித்த பத்திரிகையாளர்கள் குழு, தினமலர் செய்தி ஆசிரியர் (உண்மையில் அப்படியொரு பதவி தினமலரில் யாருக்கும் தரப்படுவதில்லை) லெனின் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியிருந்தார்கள்.தினமலர் மீது ஏன் வழக்குத் தொடரப்பட்டது, எதற்காக லெனின் கைது செய்யப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

நடிகை புவனேஸ்வரி கைது விவகாரத்தைத் தொடர்ந்து பாலியல் தொழில் செய்யும் நடிகைகளின் பட்டியலை தினமலர் வெளியிட்டது. ரஜினி உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க அதிர்ந்து போன தினமலர் மறுநாள் வருத்தம் தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகைகள் சார்பில் ஒட்டுமொத்த நடிகர்களும் இணைந்து தினமலருக்கு எதிராகப் புகார் கொடுக்க தினமலர் உரிமையாளர்கள் பதுங்கிக் கொண்டு, லெனினை போலீசில் காட்டிக் கொடுத்தார்கள். லெனினும் கைது செய்யப்பட்டார்.

இதில் பலருக்கும் தெரியாத ஓர் உண்மை மறைக்கப்பட்டது. அப்படியொரு செய்தியை ஆதாரமின்றி வழங்கியதற்காக செய்தியாளர் விஜய் என்பவர், உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இப்போது திருச்சி காலைக்கதிரில் அவர் வேலை பார்க்கிறார். இதை மறைத்துவிட்டு, அந்தச் செய்தியில் என்ன தவறு இருக்கிறது என்கிற பிரசாரத்தில் இறங்கிய தினமலர், தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்களை (நயவஞ்சகமாக) ஒன்று திரட்டி நடிகர் நடிகைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அந்த நேரத்தில் நடிகர் நடிகைகளும் ஒட்டுமொத்த பத்திரிகை உலகையே கொச்சைப்படுத்தி பேசிய பேச்சும், அனைத்து பத்திரிகையாளர்களையும் கோபம் மூட்டியது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த லெனின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இப்போது அவர் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வரிடம் கோரியிருக்கிறார்கள். முதல்வரோ, “குடும்பத்துடன் வாழும் பெண்களைப் பற்றி இஷ்டத்துக்கு அவதூறாக எழுதியது சரியா? சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரிலேயே நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அவர்களிடம் பேசித்தான் முடிவு எடுக்க முடியும்” என்று மிகச் சரியாகப் பேசியிருக்கிறார்.

தினமலர் அந்த வழக்கிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைத்தால் சம்பந்தப்பட்ட அந்த நடிகைகளிடம் போய், மன்னிப்புக் கேட்டு வழக்கை திரும்பப் பெற கோர வேண்டும். அதைவிடுத்து குறுக்கு வழியில் முதல்வரிடம் முறையிட்டு அதுவும் ஜூனியர் விகடன் விவகாரத்தை சாக்காக வைத்து ஆதாயம் தேட நினைப்பது கோழைத்தனம்.

ஜூனியர் விகடன் ஆளும் கட்சியில் அதிகாரத்தில் இருப்பவர்களின் அடாவடித் தனத்திற்கு எதிராக செய்தி வெளியிட்டு அதற்குக் கிளம்பிய எதிர்ப்பை மிக நேர்மையாக சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நடிகைகள் பாலியல் தொழில் செய்வதாக எந்த ஆதாரமும் இன்றி அந்த நடிகைகளின் புகைப்படத்துடன் (வாடிக்கையாளர்களிடம் படுப்பதற்கு அவர்கள் வாங்கும் தொகையையும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள்) செய்தி வெளியிட்டது எந்த வகையில் பத்திரிகை தர்மத்துக்கு உகந்தது?

பத்திரிகை சுதந்திரம் என்ற போர்வையில் ஜூனியர் விகடனுடன் தன்னை இணைத்துப் பார்க்கும் தகுதி தினமலருக்கில்லை. பத்திரிகை சுதந்திரத்தை தமிழர்களுக்கும், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கும், தலித்களுக்கும் எதிராக தினமலர் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. தினமலருக்கு தைரியம் இருந்தால் அந்த வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்கட்டும். அப்படி சந்தித்தால் ‘சந்தி சிரித்துவிடும்!‘

Friday, August 20, 2010

திருட்டு வி.சி.டி.யில் மட்டும் படம் பாருங்கள்!திரையரங்குக்குள் தின்பண்டம் கொண்டுசெல்வதை திரையரங்கு நிர்வாகம் தடுப்பது முறையல்ல என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. யாரோ ஒரு புண்ணியவான் தொடர்ந்த பொதுநல வழக்கால் மக்கள் தங்களுடைய உரிமையை உணர்ந்திருக்கிறார்கள். சினிமாவில் அநியாயத்துக்கு எதிராகப் பொங்கும் ஹீரோக்கள், திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்காதீர்கள் என்று பொதுமக்களிடம் கெஞ்சுவார்கள். ஆனால் திரையரங்கு நிர்வாகத்தின் கொள்ளை லாபம் பற்றி எல்லாம் வாய் திறக்கவே மாட்டார்கள். உண்மையில் அவர்களால் அது பற்றி பேசவே முடியாது. திரையரங்கு உரிமையாளர்களுக்கும் படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடையே கமுக்கமான உடன்பாடு உண்டு.

அது பற்றி பார்ப்போம். சுறா படத்துக்கு 5 கோடி சம்பளம் வாங்கிய விஜய் அடுத்த படமான காவலனுக்கு 7 கோடி வரை சம்பளம் வாங்கியதாக சொல்கிறார்கள். இத்தனைக்கு சுறா படம் படுதோல்வி. பிறகு எப்படி இது சாத்தியமானது என்கிறீர்களா? இதற்கு மினிமம் கியாரண்டி என்ற வியபார உத்திதான் காரணம். அதாவது தயாரிப்பாளர்கள் தங்களுடைய படத்தை திரையரங்குகளுக்கு குறிப்பிட்ட விலை வைத்து கொடுத்துவிடுவார்கள். அதில் நட்டம் ஏற்பட்டால், அதுபற்றி தயாரிப்பாளர்களுக்குக் கவலை இல்லை. லாபம் கிடைத்தால் அதில் தயாரிப்பாளர்களுக்கு பங்கு தரவேண்டும் என்பதுதான் இந்த மினிமம் கியாரண்டியில் உள்ள சூட்சமம்.

ரஜினி, கமல், அஜித், விஜய், (இப்போது சூர்யாவும்) போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் மினிமம் கியாரண்டியில் வியாபாரம் செய்யப்படுகிறது. வேட்டைக்காரனை விட அதிக விலைக்கு சுறாவையும் சுறாவை விட அதிக விலைக்கு காவலனையும் திரையரங்கு உரிமையாளர்கள் வாங்கியாக வேண்டும். எனவேதான் நடிகர்கள் படத்துக்குப் படம் தங்கள் சம்பளத்தை உயர்த்திக் கொள்ள முடிகிறது.

திரையரங்கு உரிமையாளர்களும் டிக்கெட் விலையை உயர்த்தியும், ப்ளாக்கில் விற்பது மூலம் கிடைக்கும் கமிஷன், கேண்டீன், பார்க்கிங் வசூல் ஆகியவை மூலமும் லாபம் பார்த்து விடுகின்றனர். நடிகர்கள், தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது. அதன்படி, திரையரங்குகளில் டிக்கெட் விலையை எவ்வளவு உயர்த்தி விற்றாலும் அது பற்றி யாரும் கேள்வி கேட்கக் கூடாது. திரையரங்கு உரிமையாளர்கள் ஆட்சியில் இருப்பவர்களையும் கவனித்து விடுவதால் அவர்களின் அத்துமீறல்கள் கவனிக்கப்பட மாட்டாது. அண்மையில் அபிராமி மால் (மல்டி ஃபிளக்ஸ்) திரையரங்கு தரம் உயர்த்தப்பட்ட போது அதை திறந்து வைத்தவர், நமது முதல்வர்! அங்கு குறைந்த பட்ச டிக்கெட் விலை 100.

அரசும் ஹீரோக்களும் திரையரங்குகளின் அத்துமீறல்களுக்கு எதிராக நிச்சயம் எதுவும் செய்யப் போவதில்லை. எனவேதான் சொல்கிறேன் எல்லோரும் திருட்டு வி.சி.டி.யில் மட்டும் படத்தைப் பார்த்து ரசியுங்கள். திரையரங்கு பக்கம் வரவே வராதீர்கள்.அதுதான் சரி.. என்று எனக்குப் படுகிறது!

Wednesday, August 11, 2010

சீமான் முதல் உமா சங்கர் வரை....

# எதிர்க்கட்சியாக இருக்கும் போதெல்லாம் மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள் என்று தி.மு.க. மார்த்தட்டிக் கொள்ளும். தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்கும் போது தங்களை எதிர்ப்பவர்களுக்கு மிசாவையே காட்டிவிடுவார்கள். சீமானின் தொடங்கி உமா சங்கர், ஜூனியர் விகடன் என போய்க் கொண்டே இருக்கிறது உடன் பிறப்புகளின் அத்துமீறல்.

# பத்திரிகையாளர்கள் மீதான அச்சுறுத்தலை கண்டித்து சென்னையில் செவ்வாய் அன்று நடந்த போராட்டத்தில் நக்கீரன் கோபால் கலந்து கொண்டாரா என்பதை கேட்டுச் சொல்லவும்/ நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

# தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்ட இதழ் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் உள்பட மூன்று பேர் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டுள்ளனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்யாமல் கள்ள மௌனம் சாதிக்கின்றனர்/ இதற்குப் பேருதான் எமர்ஜென்ஸி!

# ஆளும் கட்சி ஜூனியர் விகடன் மீது கடுங்கோபத்திலிருக்கிறது. அப்படியென்றால் மற்ற பத்திரிகைகள் ஆளும் கட்சியினருக்கு ஜால்ரா போடறாங்களா என்று, கேட்காதீர்கள்?

# நான் எழுதிய இனப்படுகொலையில் கருணாநிதி புத்தகங்கள் விற்ற பணம் வரவில்லை என்று என்னுடைய ஆதங்கத்தைப் படித்த பாடலாசியர்-கவிஞர் கவிபாஸ்கர் என்னைத் தொடர்பு கொண்டார். அவ்வப்போது வசூலாகும் தொகையை உடனுக்குடன் கொடுத்து வருபவர் அவர். எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகக் கடை போடலாம் என்று இருவரும் பேசியிருக்கிறோம். (திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் கையை சுட்டுக் கொண்டது போதாக்கும் என்கிறாள் என் மனைவி)

# இந்திய அரசின் போலி ஜனநாயகத்தை ஆதாரங்களுடன் பட்டியலிட்டு புத்தகம் எழுத வேண்டும் என்பது ஆசை. சோம்பேறித்தனத்தால் அந்த வேலை தள்ளிக் கொண்டே போகிறது.

# எந்திரன் படத்தின் தெலுங்கு பதிப்பான ரோபோவின் உரிமை தன்னிடம் இருப்பதாகப் போலி ஆவணங்களைக் காட்டி ஆந்திர தியேட்டர் உரிமையாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிய இயக்குநர் ஷங்கரின் அலுவலக மேலாளர், உதயகுமார் கைது. நீங்கள் வருமான வரித்துறையை ஏமாற்றுகிறீர்கள். உங்களை ஒருவன் ஏமாற்றுகிறான். ஏமாத்துக்கு ஏமாத்து சரியா போச்சுப்போ...

Sunday, August 8, 2010

இனப்படுகொலையில் கருணாநிதியும் இயக்குநர் ஷங்கரும்!# நான் எழுதிய இனப்படுகொலையில் கருணாநிதி (ஆயிரம் புத்தங்கங்கள்) விற்றுத் தீர்ந்து விட்டன. ஆனால் விற்பனைத் தொகைதான் கைக்கு வந்தபாடில்லை.

# த்ரி இடியட்ஸ் படத்தை தமிழில் ஷங்கர் இயக்கலாம் என்கிறார்கள். எந்திரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் எல்லோரும் ஷங்கரைப் புகழ்ந்து தள்ளினார்கள். இடியட்ஸ்!

# தோள்பட்டை சவ்வில் ஏற்பட்ட பாதிப்பால் அறுபத்து சொச்சம் வயதான என் தாய் புஷ்பம் கடுமையான வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். காலையில் கைப்பேசி வழியாக ஊரிலிருந்து வந்த இந்தத் தகவல் மனசஞ்சலத்தை ஏற்படுத்திவிட்டது. 87 வயதில் முதல்வர் பணியை செய்யும் ஓய்வறியா சூர்யன் இருக்கும் தமிழ்நாட்டில் என் தாய்க்கு ஏனிந்த கொடுமை?

# பதிவெழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. சமூக அரசியல் சர்ச்சைகள் குறித்து குறுந்தகவல் அனுப்புவது, இணைய தளங்களில் எழுதுவது போன்றவற்றால் தங்கள் சமூகக் கடமை தீர்ந்து விட்டதாக இன்றைய இளைய தலைமுறை நினைக்கிறது. நம்முடைய மதிப்புமிக்க நேரத்தை யும் இணையம் வீணடித்து வருகின்றன. நானும் இவற்றிலிருந்து முழுவதுமாக விடுபட்டு விட்டேன் என்று சொல்வதற்கில்லை. அதேநேரத்தில் இணைய தளங்களில் எழுதுவதோடு என் அரசியல் நடவடிக்கைகளை முடிந்து போவதில்லை.

# அமானுஷ்யத்தைக் கருவாகக் கொண்ட நெடுந்தொடருக்கு கதை, திரைக்கதை தயாரித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கிடையே அரசியல் வேலைகளும் பத்திரிகைப் பணிகளும் போய்க் கொண்டிருதானிருக்கிறது.

# ஒரு சொந்தத் தொழில் அமைந்து விட்டால், முழுமையாக சினிமாவில் இறங்கிவிடலாம். என் ஆசைக்காக மனைவியை கஷ்டப்படுத்தக் கூடாதல்லவா?

# ஜெயமோகனின் லோகி, எமர்ஜென்ஸியில் நடந்தது என்ன?, ஜே.ஜே.சில குறிப்புகள் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே நேரத்தில வெவ்வேறான புத்தகங்களை மாறி மாறிப் படிப்பது (திட்டமிடாத) பழக்கமாகிவிட்டது.# லோகியின் கிரீடம் பார்த்தேன். அற்புதம். மலையாளம் சாந்துப் பொட்டு பார்த்தேன். தமிழில் விக்ரம் அல்லது சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும்.