Tuesday, June 15, 2010

“என்ன கொடுமை இது ஞாநி?“ -தாமரை
9-6-2010 குமுதம் ஓ... பக்கங்களில் சீரழிவு என்று தலைப்பிட்டு ஞாநி எழுதியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சர்வதேச இந்திய திரைப்படக் கழகத்தின் (ஐஃபா) விருது வழங்கும் விழாவை வலியப் போய் கொழும்பில் நடத்துவதன் அரசியல் ஞாநிக்குப் புலப்படவில்லை போலும். தென் கொரியாவின் சியோலுக்கு உறுதியளிக்கப்பட்ட நிகழ்வை அவசர அவசரமாகக் கொழும்புக்கு மாற்றியது இனப்படுகொலையின் கரையை மறைத்து வெள்ளையடிக்கத்தான் (அல்லது மூவர்ணம் பூசத்தான்) என்பதே உண்மை!

கொழும்பு விழா வெறும் கலைவிழா அல்ல. காசேதான் கடவுளடா என்று கொலைக்களத்தில் சந்தை தேடிப் புறப்பட்டுள்ள இந்தியப் பெரு வணிகர்களின், பெரு முதலாளிகளின் (FICCI) ஆதாய வேட்டை விழா. பண்பாட்டுச் சீரழிவின் இருமுனைகள் (வணிகத் திரையும், வணிகக் கிரிக்கெட்டும்) இணைந்து பட்டுத் திரையிட்டுப் படுகொலைகளை மறைக்கும் விழா என்பதெல்லாம் ஞாநிக்குத் தெரியாததா?
‘சிலருடைய மிரட்டல் அரசியல்‘ என்கிறார் ஞாநி. ‘குருதி பிசுபிசுக்கும் கொலைக்களத்தில் கூத்துக் கும்மாளமா? தடுக்க வேண்டும் தமிழ்த் திரையுலகம்‘ என்று தமிழ்த் திரைத்துறையினருக்கு வேண்டுகோள் வைத்து முன்கை எடுத்த என் போன்றோருக்கு அரசியல் ஏதுமில்லை. மனிதஉரிமை, மக்கள் பிரச்னை, தமிழர்நலம் தவிர வேறெந்த அரசியலும் நான் செய்கிறேனோ என்று ஞாநி சொல்லட்டும்! நாங்கள் எப்போது யாரை மிரட்டினோம் என்று விளக்கட்டும்! அறப்போராட்டங்களுக்கு மிரட்டல் என்று பெயர் சூட்டலாமா?

ஓராண்டு முன்னால் ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு ராஜபக்சேயின் இனவெறி அரசியலை காரணம் என்பதை மறைத்து பழியில் பாதியைப் புலிகள் மீது சுமத்துகிறார், ஞாநி. என்ன கொடுமை இது? தாக்குகிறவனையும், தாக்கப்படுகிறவனையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுகிற மகா அறிவாளிகளின் பட்டியலில் ஞாநியும் சேர்ந்துவிட்டாரா?
ஒரு லட்சம் மக்களைக் கொன்று இனப்பேரழிப்பை நடத்தியவர், ராஜபக்சே என்று உலகமே அறியும். விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் தமிழ்மக்களை இனஅழிப்பிலிருந்து காப்பாற்ற இயன்ற வரை போராடித் தோற்றார்கள். அவர்கள் தங்கள் ஆயுதங்களை மவுனித்தப் பின்புதான். முள்ளிவாய்க்காலில் முழுப் பேரழிவு நடந்தது என்பதை ஞாநியின் மனசாட்சி அறியாமலிருக்காது.
‘கொடூரங்கள் முடிந்து ஓராண்டு கழிந்தது‘ என்கிறார் ஞாநி. ஓராண்டு என்ன நூறாண்டு ஆனாலும் இந்தக் காயம் ஆறாது. இனக்கொலை புரிந்தவர்களைக் கூண்டில் ஏற்றி தண்டிக்கும் வரை, தமிழ்மக்களுக்கு அவர்கள் விரும்பும்படியான அரசியல் தீர்வுகிட்டும் வரை பன்னாட்டுச் சமூகம் எல்லா வகையிலும் கொழும்பு அரசைத் தனிமைப்படுத்தக் கோருவோம். இந்த நோக்கங்களை அடைவதற்கு சிங்கள மக்களும் ஆதரவு தர வேண்டுவோம்.
இந்த ஐஃபா விழாவைக் கராச்சியிலோ இஸ்லாமாபாத்திலோ இந்திய நட்சத்திரங்கள் நடத்துவார்களா என்று ஞாநி கேட்டுச் சொல்லட்டும்!
சிங்களவர்கள் கண்தானம் செய்வதைப் பாராட்டுகிறார், ஞாநி. வெலிக்கடை சிறையில் குட்டிமணி, தங்கதுரையின் கண்களைப் பிடுங்கிப் போட்டு காலில் மிதித்த சிங்களக் காடையர்களின் இனவெறிக்கு முன்னால் எத்தகைய தானமும் எடுபடாது என்பதைப் புரிந்து கொள்ளட்டும்!

ஞாநி போகிற போக்கைப் பார்த்தால், ‘மிரட்டலுக்கு அஞ்சாமல் கொழும்பு கொலை விழாவில் கலந்து கொண்ட ‘விவேக் ஓபராய்‘வுக்கு இந்த வாரப் பூச்செண்டும், இராஜபக்சேயின் அன்பான அழைப்பை நிராகரித்த நமீதாவுக்கு இந்த வாரத் திட்டும் தருவார் என எதிர்பார்க்கலாம். எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலையோடு பேசுவது போல் பாசாங்கு செய்யும் ‘போலிநீதிபதி‘களுக்குரிய ‘நரிநாட்டாமை‘ ஞாநிகளுக்கு அழகில்லை.

Thursday, June 3, 2010

மணிமேகலையும் கிரண்பேடியும்
புழல் சிறை டூ திகார் சிறை

'சிறைக்கோட்டமெல்லாம் அறக்கோட்டமாகட்டும்' என்று அட்சயப் பாத்திரத்தோடு புறப்பட்ட காப்பிய நாயகி மணிமேகலை பற்றி நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிட்டால், குற்றவாளிகள் ஏன் உருவாகப்போகிறார்கள்? என்பதுதான் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை உணர்த்தும் உண்மையோ?

குற்றவாளிகளை சமூகத்திலிருந்து பிரித்து அவர்களை நல்வழிப்படுத்தி நல்லவர்களாக உருவாக்கி மீண்டும் சமூகத்தில் உலவவிடுவதுதான் சிறைச்சாலைகள் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் என்று ஏட்டளவில் உண்டு. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் திரும்பத் திரும்ப சிறைக்கு வரும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்று பயமுறுத்துகிறது, ஒரு புள்ளி விவரம். திருந்த வேண்டியவர்கள், மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டிய அவசியம் என்ன? சிறை பற்றி நியாயமாக இருக்க வேண்டிய அச்சம் அவர்களுக்கு இல்லாமல் போனதற்கு என்ன காரணம்? யார் காரணம்?

களி உருண்டையும், அச்சுச் சோறும் கிடைத்துக் கொண்டிருந்த சிறைகளில், வாரந்தோறும் கறிக்குழம்பு, தினமும் காலை பொங்கல், மதியம் அன் லிமிட்டேட் மீல்ஸும் கிடைத்தால் கைதிகள் திருந்துவது எப்படி என்றொரு ஆதங்கத்தை பல இடங்களிலும் கேட்க முடிகிறது. "சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மின்விசிறி வசதி செய்து தரப்படும்" என்ற தமிழக முதல்வர் கருணாநிதி அறிவிப்புக்கு பரவலாக அதற்குக் கிடைத்த எதிர்ப்பே இதற்குச் சாட்சி.

உண்மையில் சிறை சுகவாசிகளின் கூடாரமாகிவிடட்தா? சிறைகளில் அடிக்கடி பிடிபடும் பல கிலோ கஞ்சாக்களும், செல்போன்களும் 'சிறையில் எல்லா வசதிகளும் கிடைக்கும் போல' என்றொரு சந்தேகம் பாமரனுக்குள் விதைத்திருக்கிறது. இதை எல்லாத்தையும் விட, பல கோடிகளை சுருட்டிய நிதிநிறுவன அதிபர் கைதாகி சிறைக்குச் செல்லும்போதும், ஊழல் வழக்கில் சிக்கும் முன்னாள் அமைச்சர்களும் ஃபோட்டோகளுக்கு போஸ் கொடுத்துக் கொண்டே காவல்துறை வாகனத்தில் ஏறும் காட்சிகள், இவர்கள் என்ன சிறைக்கு பிக்னிக் போகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. திரைப்படங்கள், ஊடகங்கள் மூலம் சிறையைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் உண்மையில் யதார்த்தத்திற்கு வெகு தொலைவிலிருக்கிறது.

தமிழகத்தைப் பொருத்தவரையில் புழல் (சென்னை), கடலூர், சேலம், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, கோவை என ஏழு மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. பெண்கள் மையச் சிறைகள் புழல், வேலூர், சேலம், திருச்சி என மொத்தம் நான்கு உள்ளன. இதுதவிர மாவட்டச் சிறைகள் ஆறு, கிளைச் சிறைகள் (ஆண்கள்) 98, பெண்கள் கிளைச்சிறைகள் 9, சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஒன்று, திறந்தவெளி சிறைச்சாலைகள் இரண்டு என பல்கலைக்கழகங்களுக்கு இணையான எண்ணிக்கையில் சிறைச்சாலைகளும் உள்ளன. இங்கெல்லாம் தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள் என பல லட்சம் பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அண்டைமாநிலமான கர்நாடகச் சிறையில் கைதிகள் தங்கள் குடும்பத்தாருடன் தினமும் பேசுவதற்காக சிறை வளாகத்தில் தொலைப்பேசி வசதிகூட செய்யப்பட்டுள்ளன!

24 மணிநேரமும் கண்காணிப்பும், அதிகாரிகளின் கண்டிப்பும், வெளியுலகத் தொடர்பின்மையும் சிறையின் அடிப்படை விதிகள். இந்த விதிகள் கடுமையாகும் போதுதான் சிறைச்சாலைகளில் மனநோய்க் கைதிகளுக்கான வார்டுகள் தனியாக உருவாக்கப்படுகின்றன. இன்றைக்கும் சென்னை புழல் சிறைச்சாலை வாசலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் அந்தச் சிறையிலுள்ள மன நோயாளிகளின் எண்ணிக்கை சிறை வாழ்வின் கொடூரமுகத்தைப் பறைசாட்டுகிறது.

அவர்கள் எல்லாம் மனநோயாளிகளாக உள்ளே போனவர்கள் அல்ல. கைதி மனநோயாளிகளாக இருந்தால், அவர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை மனநோயாளிகள் வார்டில் சேர்க்கப்படுவார்கள். கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் கைதிகளுக்கென்று பிரத்யேகமான வார்டு உண்டு என்பதை அறிக.

செய்த தவறுக்கு அல்லது செய்யாத தவறுக்குக் கிடைத்த சிறைவாசத்தை எண்ணி வருந்தும் கைதிகள் மற்றும் தனிமையில் தவிக்கும் கைதிகள் ஆகியோர் மனநோயால் பாதிப்புக்குள்ளாகிவிடுகின்றனர். இவர்களைக் குறிவைத்து ஒருசில ஆன்மிக அமைப்புகள் சிறைக்குள் யோகா, தியானம் மற்றும் அற்புத எழுப்புதல் கூட்டங்களை நடத்துகின்றன. அவற்றின் பலனாக திருந்துவோரின் எண்ணிக்கை எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதற்கான எந்தவொரு புள்ளிவிவரமும் இதுவரை கிடைக்கவில்லை. (இந்த வகுப்புகளை நடத்தியவர்களே பின்னொரு நாள் கைதாகி நிரந்தர சிறை வாசிகளாகிவிடுவதை பார்த்துக் கொண்டுதானிருகிறோம்.)

சிறைச்சாலைகளுக்குள் இயங்கும் திறந்த வெளிப் பல்கலைக்கழகங்கள் விருப்பமும், தகுதியுமுள்ள கைதிகளுக்கு வகுப்பெடுத்து, தேர்வுகள் நடத்தி பட்டதாரிகளாக்கி வருகிறார்கள். இதெல்லாம் சரி, அடிக்கடி சிறைச்சாலைக்குள் அதிகாரிகளின் சோதனைகளில் சிக்கும் செல்போன்களும், கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் உள்ளே போனது யாருக்காக? எதற்காக? எப்படி? என்று சாக்ரடீஸ் பாணியில் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களில் (பிஸ்கட், பழம், பவுடர், சோப் உள்ளிட்ட பொருட்களை கைதிகளுக்கு அவர்களின் உறவினர்கள்,நண்பர்கள் மூலம் கொடுக்கலாம்) மறைத்து வைத்து சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருகிறார்கள் என்று சிறை அதிகாரிகள் சொல்லலாம். ஆனால் சிறைக்குள் சென்று வருவது என்றாலே சோதனை என்ற பெயரில் சல்லடையாக துளைத்து எடுத்து விடுகிற நிலையில் சிறைக் காவலர்களுக்குத் தெரியாமல் அந்தப் பொருட்கள் உள்ளே கொண்டு செல்லப்படுகிறது என்பதை ஒப்புக் கொள்ளவே முடியாது. தவறு செய்ததாக அவ்வப்போது சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவங்களே இதற்கு சாட்சி. ஆனால் பெரும்பாலும் தவறிழைக்கும் காவலர்கள், அதிகாரிகள் தவிர்த்து கைதிகள் மட்டுமே சிக்குகிறார்கள்.

உலகம் முழுவதும் மனித உரிமைகள் மீதான பார்வை மாறிவரும் சூழலில் சிறை வாசிகளுக்கு சில வசதிகள் கிடைக்கத்தான் செய்கின்றன. ஆனால் வெளியே நடக்கும் கோஷ்டி மோதல்களுக்கு சற்றும் குறைவில்லாத வகையில் சிறைக்குள் நடக்கும் கலவரங்களும் கொலைகளும் தவறு செய்தவர்களை திருந்தக் கூடிய இடம் சிறைச்சாலை என்கிற மாயையை சுக்கு நூறாக்கிவிடுகின்றன. பணமும், ஆள்பலமும் கொண்ட கைதிகள் சிறைக்குள்ளும் கோலோட்சி வரும் செய்திகளை முற்றிலும் வதந்தி என்று ஒதுக்கிவிடமுடியாது. சிறையிலிருந்து பகத்சிங் (எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன்?), சி.என்.அண்ணாதுரை, கருணாநிதி வைகோ ஆகியோர் படைத்த இலக்கியங்களுக்கு இணையாக சிறைக்குள் மிகப் பெரிய கொலை, கொள்ளைத் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கினற்ன. ஆபாசப் படங்கள் எடுத்து இணைய தளங்களில் உலவவிட்ட டாக்டர் பிரகாஷ் (தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் கைதான முதல் நபர்) கூட நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதிவிட்டாராம்.

வசதிகள் பெருகிக் கொண்டே போனாலும் வானமே எல்லை என சுதந்திரமாக வாழும் உலக வாழ்க்கையோடு சிறை வாழ்க்கையை ஒப்பிட முடியாது. சிறைக்கோட்டங்கள் அறக்கோட்டங்கள் ஆகட்டும் என்ற காப்பிய நாயகி மணிமேகலையின் கனவை ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பேடி திகார் சிறையில் நடைமுறைப்படுத்தினார் என்பதை காலம் பதிவு செய்திருக்கிறது. மணிமேகலைகளும், கிரண்பேடிகளும் உருவானால் சிறைச்சாலைகள் இல்லாத கைதிகள் இல்லாத ஒரு சமூகம் நிச்சயம் உருவாகும்.

-பொன்னுசாமி (நன்றி:www.earangam.com)