Sunday, December 25, 2011

நற்குணங்களை மலையாளிகளிடம் கற்றுக் கொள்ளுங்கள் தமிழர்களே…

“தமிழன் ஒன்றொரு இனமுண்டு. தனியே அவனுக்கொர் குணமுண்டு” என்ற வரிகளை இப்போதுதான் சரியாக புரிந்து கொண்டிருக்கிறேன். அப்படி என்ன குணம் இவனுக்கு இருக்கிறது?
சக தமிழன் யாராவது முன்னேறினால் அவனது காலைப் பிடித்து இழுத்து கீழே விடுவது, சக தமிழன் மீது பொறாமையில் பொங்குவது, இன உணர்வும், மொழி உணர்வும் இருப்பதாக மார் தட்டிக் கொண்டு மேற்படி உணர்வுகளை சொந்த நலனுக்காக விற்பது? இதெல்லாம் தான் தமிழனின் குணங்களாக இருக்கிறது. அறிவை வளர்த்துக் கொள்ளாமல் எல்லாம் தெரிந்தது போல், வெற்று வார்த்தைகளால் பீற்றிக் கொள்வது தமிழனின் கூடுதல் பெருமை!
தமிழர்களின் வசைகளுக்கு இன்று ஆளாகியிருக்கும் மலையாளிகளுக்கு மேற்படி குணங்களில் ஒன்றாவது இருக்கிறதா என்று, என் அனுபவ அறிவைக் கொண்டு யோசிக்கிறேன். ‘ம்ம்ஹும்’. மலையாளிகளிடம் தமிழனிடம் இருக்கும் மேற்படி குணங்களில் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. சும்மா, ஏதோ விரக்தியில் இப்படி எழுதுகிறேன் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். எதையும் ஆதாரத்துடன் பேசுவதுதான் எனக்குப் பிடிக்கும்.
அந்த ஆதாரங்களை பட்டியல் போட்டு விளக்கியிருக்கிறேன். இதைப் படித்து விட்டாவது தமிழன்-மலையாளி இவர்களில் உயர்த்தவர் யார் என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள். இந்த வித்தியாசத்தை தஞ்சாவூர் கல் வெட்டு அருகில் வைத்து உட்கார்ந்து கொண்டால் நமக்குப் பின்னாடி வரும் சந்ததியினரும் பார்த்துப் புரிந்து நடந்து கொள்வார்கள்!(க்ளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கவும்)

இந்தப் பட்டியலில் சேர்க்க மறந்த இன்னொரு விஷயம். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவில் உள்ள தமிழகத் தொழிலாளர்களை அந்த மாநில காவல்துறையினரும் சேர்ந்து தாக்குகிறார்கள். தமிழ்நாட்டில் மலையாள பெரு நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தும் தமிழர்களை தமிழ்நாட்டு காவல்துறையினர் தாக்குகிறார்கள். மொழிப் பற்றில் கேரளா காவல்துறையினருடன் தமிழகக் காவல் துறையினரை ஒப்பிட்டுப் பாருங்கள்.

இப்போதைக்கு இந்தப் பட்டியல் போதும் என்று நினைக்கிறேன். இனிமேலாவது மலையாளிகளைப் பற்றி தவறாகப் பேசுவதை நிறுத்தி விட்டு, நம்மிடம் உள்ள குறைகளை களைவோம்.

-வே.வெற்றிவேல் சந்திரசேகர்

Wednesday, December 21, 2011

அணை போட முடியாத தமிழர் விரோதம்!!


“அணையை உடைப்போம்” என்கிறார்கள். தடுத்தால், “தமிழனின் மண்டையை உடைப்போம்” என்கிறார்கள். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அணை உடையப் போகிறது என்கிற கேரள அரசின் பொய்யை மலையாள ஊடகங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதே நேரத்தில் உண்மையை உரத்துச் சொல்ல வேண்டிய இடத்தில் உள்ள தமிழ்நாட்டு ஊடகங்களின் நிலை என்ன? (வேறொரு காலகட்டத்தில் எழுதி ஓர் இதழில் பிரசுரமான இக்கட்டுரையை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஏற்பட்ட அனுபவத்தை சேர்த்து மீண்டும் மறுபதிப்பு செய்கிறேன்)
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று சொல்லிக் கொள்வதில் நமக்குத்தான் எத்தனை பெருமை! நகை வியபாரம், துணி வியபாரம், வங்கித்துறை என அயலார்கள் ஆதிக்கம் பெருகி வருவது கண்கூடு. ஆனால் யாருக்கும் தெரியாமல் கொல்லைப் புறத்து வழியாக தமிழகத்தில் ஊடகத் துறையில் வெளியார்கள் வேகமாக படையெடுத்துக் கொண்டிருப்பது பரவலாக அறியப்படவே இல்லை.
ஈழத்தில் நான்காம் கட்ட இறுதிப் போர் நடந்த போது அங்கே அரங்கேறிய மனித குல அவலங்களையும் அதைக் கண்டித்து தமிழகத்தில் எழுந்த எழுச்சியையும் இங்குள்ள ஊடகங்கள் சரியாகப் பதிவு செய்யவில்லை என்றொரு மனக்குறை நம்மெல்லோருக்கும் உண்டு. ஆனால் அப்படி தமிழர்கள் நலன் இருட்டடிப்பு செய்யப்பட்டதன் பின்னணியில் இங்குள்ள தேசிய மற்றும் பிராந்திய ஊடகங்களில் முக்கியப் பொறுப்புகளில் தமிழர்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டிருப்பதும், இங்கெல்லாம் அயலார்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதுமே காரணங்கள். இதே காரணங்களின் பின்னணியில் தான் இன்றைக்கு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஆங்கில தேசிய ஊடங்கள் கேரள அரசுக்கு ஆதரவான பொய்யான செய்திகளை பரப்பி வருகிறது. (ஆதாரம்: http://keetru.com/index.php?option=com_content&view=article&id=17719).
தமிழ்நாட்டில் உள்ள தினமலர் வெளிப்படையாகவே தமிழர் விரோத போக்கைக் கடைப்பிடிப்பது எல்லோரும் அறிந்ததே. பெரியாரை இன்றுவரையிலும் ஈவெரா என்றும் அறிஞர் அண்ணாவை அண்ணாதுரை என்றும் எழுதுவதன் மூலம் தங்களுடைய தமிழர் விரோதப் போக்கை பறை சாற்றி வருகின்றனர். (இவர்கள் இருவரும் தமிழர்களுக்கு அப்படி என்ன நியாயம் செய்து விட்டார்கள் என்று கேட்டால், “அது வேற டிபார்ட்மெண்ட்’’ என்று வடிவேலு பாணியில் தான் பதில் சொல்ல முடியும்!)
தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் திரைப்பட இயக்குநர்களை சினிமாக்காரர்கள் என்று குறிப்பிடுவதும் (எ.கா: சினிமாக்காரர் மணிவண்ணன், சினிமாக்காரர் பாரதிராஜா என்று குறிப்பிடுகிறார்கள். “சினிமாக்காரர் பாலச்சந்தர் சினிமாக்காரர் மணிரத்னம் என்று எழுதுவீர்களா” என்று தினமலர் செய்தியாளர் ஒருவரிடம் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலில்லை)
தினமலரின் சென்னைப் பதிப்பில் முக்கிய பொறுப்பில் பிகாரைச் சேர்ந்தவர் உள்ளார். (“ ‘தமிழ்நாடு என்று எழுதாதே. இவனுகளுக்கு என்ன நாடு வேண்டிக் கிடக்கு? தமிழகம் என்று எழுது’ என்று சக ஊழியர்களிடம் அவர் ஆவேசப்படுவதை அவ்வப்போது பார்க்க முடியும்” என்கிறார்கள் அங்குள்ளவர்கள்)
அதேபோல் தினமலரின் முக்கிய பொறுப்புகளில் மலையாளிகளை நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். உதகை தினமலரில் செய்தியாளராக இருந்த ஒரு மலையாளியை மலையிறக்கி தினமலர் பதிப்புகளில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. அவரது முற்றும் முதலுமாக தமிழர்களுக்கு எதிரானவர். சக ஊழியர்களில் யாருக்காவது தமிழுணர்வு உண்டு என்பது தெரிந்தால் அவர்களுக்கு தொடர்ந்து மனரீதியான தொந்தரவுகள் அளித்து ஓரம் கட்டுவார்.
அதுமட்டுமின்றி தினமலருக்கு புதிதாக செய்தியாளர் பணிக்கு வரும் தமிழ் இளைஞர்களில் யாருக்காவது தப்பித் தவறியும் தமிழுணர்வு இருந்துவிட்டால் அதை லாவகமாகக் கையாண்டு அந்த உணர்வை அவர்களுக்குள்ளேயே குழி தோண்டிப் புதைக்கும் வேலைகளை செவ்வனே செய்து முடித்து விடுவார்கள்.
இன்றைக்கு தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியினால் என்டிடிவி, டைம்ஸ் நவ், ஹெட்லைன்ஸ் டூடே, என்டிடிவி இந்து என சுமார் பத்துக்கும் மேற்பட்ட தேசிய ஊடகங்களான (தொலைக்காட்சிகள்) ஆங்கில ஊடகங்கள் தமிழ் நாட்டிற்குள் நுழைந்துவிட்டன. இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் செயல்படும் இந்தச் செய்தி தொலைக்காட்சிகளில் செய்திப் பிரிவுகளிலும், செய்தியாளர் பணிகளிலும் அந்தந்த மாநிலத்தவர் களுக்கு முன்னுரிமை கொடுத்து பணியமர்த்தி உள்ளது.
ஆனால் தமிழகத்தில் மட்டும் நிலை தலைகீழ். எந்தச் செய்தியைப் போடுவது, எதை விடுவது என்கிற முக்கிய முடிவுகள் எடுக்கும் பதவிகளில் பெரும்பாலும் அயலாரையே (குறிப்பாக மலையாளிகளையே) பணியமர்த்துகின்றனர். இது தற்செயலாக நடப்பதில்லை. திட்டமிட்டே ஊடகங்களில் இப்படியொரு நிலை உருவாக்கப்படுகிறது. உதாரணமாக சேலம், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேசிய ஆங்கில செய்தித் தாள்கள், செய்தித் தொலைக்காட்சிகளின் முக்கியப் பொறுப்புகளில் மட்டுமின்றி செய்தியாளர்களாகவும் மலையாளிகளே நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
அந்த ஊர்களில் பணியாற்ற தமிழ்த் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஆனால், அவருக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. ஆங்கிலமும் மலையாளமும் மட்டுமே அவருக்குத் தெரியும். சென்னையைத் தவிர்த்து பிற நகரங்களில் பெரும்பாலான அரசு அதிகாரிகள் தமிழில்தான் பேட்டி அளிப்பார்கள். ஆங்கிலத்தில் கேள்வி கேட்கப்பட்டாலும் தமிழில்தான் பதிலளிப்பார்கள். இது தெரிந்தும் தமிழ்த் தெரியாதவர்களை தேசிய ஆங்கில ஊடகங்கள் அங்கே பணியமர்த்துவதன் நோக்கம் என்ன?
அதே செய்தி தொலைக்காட்சியின் கேரளாவின் அனைத்து நகரிலும் மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள்.
அதுமட்டுமல்ல கேரளாவில் எந்த தேசிய ஊடகத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் முக்கியப் பொறுப்புகளிலோ செய்தியாளராகவோ பணியமர்த்தப்படுவதில்லை. ஆனால் தமிழகத்தில் உள்ள இந்தச் செய்தி தொலைக்காட்சிகளில் முக்கியப் பொறுப்புகளில் மட்டுமின்றி செய்தியாளர்கள் பணிகளிலும் பெரும்பாலும் அயலாரையே நியமித்திருக்கிறார்கள். இதை வீட்டில் அமர்ந்தபடி தேசிய செய்தி சேனல்களில் வரும் தமிழ்நாட்டுச் செய்திகளை கவனித்தாலே தெரிந்து கொள்ள முடியும்.
ஆங்கிலம் தெரிந்த (இத்தனைக்கும் மலையாளிகளை விட தமிழர்கள் மிகச்சரியாக ஆங்கிலம் பேசக்கூடியவர்கள்) தகுதியான தமிழர்கள் பத்திரிகைத் துறையில் எத்தனையோ பேர் இருக்கும் போது தேசிய ஆங்கில ஊடகங்கள் அவர்களுக்கு வாய்ப்பளிப்பது கிடையாது. அப்படி வாய்ப்பளிக்கப்பட்டு அங்கே பணிபுரியும் ஊழியர்களும் அங்கே நடக்கும் தமிழர் விரோத போக்கால் நொந்து கொண்டிருக்கிறார்கள். (ஆதாரம்: கீற்று இணையதளத்தில் வெளியாகியிருக்கும் ராதிகா கிரி கட்டுரை)
செய்தி தொலைக்காட்சிகள் என்றில்லை தமிழில் ஒளிப்பரப்பாகும் பொழுது போக்கு தொலைக்காட்சிகளிலும் இதே நிலைதான். அயலாளர்கள் அங்கே கூடி கும்மி அடிப்பதால் தான், நடனப் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென்றாலும் கூட பரதநாட்டியம் தெரிந்திருக்க வேண்டும் என்றும் பாட்டுப் போட்டிகளிலும் பங்கற்க கர்நாடக இசை தெரிந்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்படுகிறது. நடனப் போட்டி அவர்கள் ஆடப்போவது ஆபாச அசைகளுடன் சினிமாப் பாடல்களுக்குத்தான். பாட்டுப் போட்டிகளில் பாடப் போவதும் சினிமாப்பாடல்கள் தான். அதற்கு எதற்கு பரதமும், கர்நாடக சங்கீதமும்? தமிழ்நாட்டில் சொற்ப மக்களால் புரிந்து கொள்ளப்படும் இந்தக் கலையை பொதுவானதாக உருவாக்க முயல்வது, தமிழ்த் தொலைக்காட்சிகளில் உள்ள அயலார்களின் வேலையே!
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு எதிரான போக்கை உருவாக்குவது என பல தளங்களில் மறைமுகமான வேலைகள் தொடர்ந்து நடக்கின்றன. இதில் ஒன்றுதான் ஊடகங்களில் அயலார்களின் ஆதிக்கம்.
பெருகி வரும் தேசிய ஊடங்களும் ஊடங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு அயலார்கள் ஆக்கிரப்பதும் தமிழர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை உணர்த்தி வருகின்றது. ஈழப் போரிலும், முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் இது அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. இதை சரிசெய்ய கடமை தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு இருக்கிறது. (தமிழ்த் தேசியர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதற்கே நேரம் போததில்லை என்பது வேறு விஷயம்).
ஆங்கில பத்திரிகைகள் மற்றும் ஊடங்களுக்குள் தமிழுணர்வு மிக்க தகுதியான தமிழர்களை நுழைய வைப்பதன் மூலம் தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள ஆபத்தைத் தடுத்து நிறுத்த முடியும். அதற்கான பணிகளில் தமிழுணர்வாளர்கள் கமுக்கமாக ஈடுபட வேண்டும்.


-வே.வெற்றிவேல் சந்திரசேகர்

Wednesday, November 30, 2011

பாலையில் மழை பெய்யட்டும்!!
முகநூல் மற்றும் வலைப்பூவில் எழுதி நிறைய நாட்கள் ஆகிறது. எழுதுவதற்கான அவசியங்கள் இருந்தும் அவகாசம் இல்லாமல் போனதுதான் இதற்குக் காரணம். சினிமா ஆர்வத்தில் சென்னை வந்து வாய்ப்புகள் அமையாததால், செய்தியாளர் ஆனேன். பத்து ஆண்டுகளுக்குப் பின் துணை இயக்குநராக பாலை படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நண்பரும் இயக்குநருமான ம.செந்தமிழன் இயக்கத்தில் பணியாற்றிய அனுபவத்தால் சினிமா மீதான என் காதலும் அறிவும் மேம்பட்டிருக்கிறது. படப்பிடிப்புக்கு முன்பும் பின்பும் அவ்வப்போது வாய்க்கப் பெற்ற எங்கள் வாத்தியார் பாலுமகேந்திராவுடான உரையாடல்களின் போது சினிமாவை பார்க்கவே இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்கிற உண்மை உரைத்தது.
செம்மை வெளியீட்டகம் என்ற நிறுவனத்தின் பெயரில் பாலை தயாரிக்கப்பட்டது. பல்வேறு நண்பர்களின் பண உதவியுடன் ஏறத்தாழ ஓர் ஆண்டு படப்பிடிப்பு மற்றும் பின் தயாரிப்பு வேலைகள் முடிந்து திரைக்கு வந்திருக்கிறது பாலை. (ரூபாய் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கூட நண்பர்கள் அவசர அவசிய நேரங்களில் கொடுத்துதவியதால்தான் எங்களால் பாலையை உருவாக்க முடிந்தது) பாலை உருவாக்கத்தில் என்னுடைய பங்கு ராமருக்கு உதவிய அணில் அளவுக்கே. இதை தன்னடக்கத்திற்காக சொல்லவில்லை. உண்மை அதுவே.
பாலை படத்தைத் திரைக்குக் கொண்டு வருவதில் பெரும் தடைகள் இருந்தன. அதுபற்றி செந்தமிழன் எழுதிய கடிதம் இணைய தளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. (இணைப்பு:http://tamil.webdunia.
com/entertainment/film/article/1111/26/1111126042_1.htm)
தடைகள் கடந்து திரைக்கு வந்த பாலைக்கு கிடைத்த முதல் கட்ட வரவேற்பு (ஓபனிங்) எங்களுக்கு ஆறுதலாகவே இருந்தது. முகமும் முகவரியும் தெரியாத எத்தனையோ பேர் பாலை படத்தைத் தூக்கிப் பிடித்ததும் பிடித்துக் கொண்டிருப்பதும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி! இயக்குநர் பாலுமகேந்திரா படத்தைப் பாராட்டி எழுதிய கடிதமும், படக்குழுவினரை அழைத்துப் பாராட்டியதும் வாழ்வில் மறக்க முடியாத நிமிடங்கள். நானும் செந்தமிழனும் பாலுமகேந்திராவின் மனம் திறந்த பாராட்டால் அழுதே விட்டோம்.
அத்துடன் இயக்குநர்கள் வெ.சேகர், தங்கர் பச்சான், சீமான், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், நண்பர்கள், கார்டூனிஸ்ட் பாலா, மே 17 திருமுருகன் காந்தி போன்றோரின் பாராட்டுகளும் பாலையை கடந்து வந்த எங்கள் பாதங்களுக்கு நிழலாக இருந்தன.
நாங்களே பார்த்து வியந்த செந்தமிழனின் தனித்துவமான சினிமா அறிவால் தரமான ஒலி ஒளி அமைப்புடன் உருவாக்கப்பட்ட பாலைக்கு அதன் தரத்திற்குரிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பதில் எங்களுக்குப் பெரிய வருத்தம். என்ன செய்ய? எங்களால் நல்ல படம் மட்டுமே எடுக்க முடிந்தது. திரையரங்குகளை பணிய வைக்கும் பண மற்றும் அதிகார பலம் எங்களிடம் இல்லை.
இந்த நிலையில் இன்றைக்கு (நவ.30) குமுதம் வாரஇதழில் வெளியாகியிருக்கும் விமர்சனம் பாலை படக்குழுவினரின் நெஞ்சில் பால் வார்த்திருக்கிறது. நல்ல படங்களை அடையாளப்படுத்தி ஆதரிக்கும் ஆனந்த விகடன் விமர்சனமும் நிச்சயம் பாலைக்கான ஆதரவை கூட்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதையெல்லாம் தெரிந்து கொண்டு பாலை படத்தைப் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பரிந்துரைக்க பல ஊர்களில் திரையரங்குகளே கிடைக்கவில்லை என்பதோடு கிடைத்த இடங்களில் தரமான திரையரங்குகளும் இல்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.
நல்ல படத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் நம்முடைய ரசிகர்கள், பாலைக்கும் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. சென்னை தியாகராயர் நகர் கிருஷ்ணவேணியில் எழுத்தாளர் அஜயன் பாலா பாலை படத்தைப் பார்த்ததாக உதவி இயக்குநர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். நட்சத்திர ஹோட்டல்களில் செயற்கையான உபசரிப்புடன் பரிமாறப்படும் பீட்சாவை விட, தெருவோரக் கடையில் கிடைக்கும் நம்மூர் சூடான ஆரோக்கிமான இட்லி உயர்ந்ததுதானே. தரமான படங்களை ஆதரிக்கும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு இடப்பட்ட சவால்களாகவே இதை நான் பார்க்கிறேன்.
இந்தப் படத்திற்குக் கிடைக்கும் வரவேற்பு, சினிமாவில் மீண்டும் ஒரு ஆரோக்கியமான புது அத்தியாயத்தை உருவாக்கும் என்பதை தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன். இனி முடிவு உங்கள் கையில். நீங்கள் பார்த்தால் பாலையில் மழை பெய்யும்.. உங்கள் பார்வைக்காக காத்துக் கொண்டிருக்கிறது. பாலை..

-வே.வெற்றிவேல் சந்திரசேகர்