Wednesday, December 21, 2011

அணை போட முடியாத தமிழர் விரோதம்!!


“அணையை உடைப்போம்” என்கிறார்கள். தடுத்தால், “தமிழனின் மண்டையை உடைப்போம்” என்கிறார்கள். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அணை உடையப் போகிறது என்கிற கேரள அரசின் பொய்யை மலையாள ஊடகங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதே நேரத்தில் உண்மையை உரத்துச் சொல்ல வேண்டிய இடத்தில் உள்ள தமிழ்நாட்டு ஊடகங்களின் நிலை என்ன? (வேறொரு காலகட்டத்தில் எழுதி ஓர் இதழில் பிரசுரமான இக்கட்டுரையை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஏற்பட்ட அனுபவத்தை சேர்த்து மீண்டும் மறுபதிப்பு செய்கிறேன்)
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று சொல்லிக் கொள்வதில் நமக்குத்தான் எத்தனை பெருமை! நகை வியபாரம், துணி வியபாரம், வங்கித்துறை என அயலார்கள் ஆதிக்கம் பெருகி வருவது கண்கூடு. ஆனால் யாருக்கும் தெரியாமல் கொல்லைப் புறத்து வழியாக தமிழகத்தில் ஊடகத் துறையில் வெளியார்கள் வேகமாக படையெடுத்துக் கொண்டிருப்பது பரவலாக அறியப்படவே இல்லை.
ஈழத்தில் நான்காம் கட்ட இறுதிப் போர் நடந்த போது அங்கே அரங்கேறிய மனித குல அவலங்களையும் அதைக் கண்டித்து தமிழகத்தில் எழுந்த எழுச்சியையும் இங்குள்ள ஊடகங்கள் சரியாகப் பதிவு செய்யவில்லை என்றொரு மனக்குறை நம்மெல்லோருக்கும் உண்டு. ஆனால் அப்படி தமிழர்கள் நலன் இருட்டடிப்பு செய்யப்பட்டதன் பின்னணியில் இங்குள்ள தேசிய மற்றும் பிராந்திய ஊடகங்களில் முக்கியப் பொறுப்புகளில் தமிழர்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டிருப்பதும், இங்கெல்லாம் அயலார்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதுமே காரணங்கள். இதே காரணங்களின் பின்னணியில் தான் இன்றைக்கு முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஆங்கில தேசிய ஊடங்கள் கேரள அரசுக்கு ஆதரவான பொய்யான செய்திகளை பரப்பி வருகிறது. (ஆதாரம்: http://keetru.com/index.php?option=com_content&view=article&id=17719).
தமிழ்நாட்டில் உள்ள தினமலர் வெளிப்படையாகவே தமிழர் விரோத போக்கைக் கடைப்பிடிப்பது எல்லோரும் அறிந்ததே. பெரியாரை இன்றுவரையிலும் ஈவெரா என்றும் அறிஞர் அண்ணாவை அண்ணாதுரை என்றும் எழுதுவதன் மூலம் தங்களுடைய தமிழர் விரோதப் போக்கை பறை சாற்றி வருகின்றனர். (இவர்கள் இருவரும் தமிழர்களுக்கு அப்படி என்ன நியாயம் செய்து விட்டார்கள் என்று கேட்டால், “அது வேற டிபார்ட்மெண்ட்’’ என்று வடிவேலு பாணியில் தான் பதில் சொல்ல முடியும்!)
தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் திரைப்பட இயக்குநர்களை சினிமாக்காரர்கள் என்று குறிப்பிடுவதும் (எ.கா: சினிமாக்காரர் மணிவண்ணன், சினிமாக்காரர் பாரதிராஜா என்று குறிப்பிடுகிறார்கள். “சினிமாக்காரர் பாலச்சந்தர் சினிமாக்காரர் மணிரத்னம் என்று எழுதுவீர்களா” என்று தினமலர் செய்தியாளர் ஒருவரிடம் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலில்லை)
தினமலரின் சென்னைப் பதிப்பில் முக்கிய பொறுப்பில் பிகாரைச் சேர்ந்தவர் உள்ளார். (“ ‘தமிழ்நாடு என்று எழுதாதே. இவனுகளுக்கு என்ன நாடு வேண்டிக் கிடக்கு? தமிழகம் என்று எழுது’ என்று சக ஊழியர்களிடம் அவர் ஆவேசப்படுவதை அவ்வப்போது பார்க்க முடியும்” என்கிறார்கள் அங்குள்ளவர்கள்)
அதேபோல் தினமலரின் முக்கிய பொறுப்புகளில் மலையாளிகளை நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். உதகை தினமலரில் செய்தியாளராக இருந்த ஒரு மலையாளியை மலையிறக்கி தினமலர் பதிப்புகளில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. அவரது முற்றும் முதலுமாக தமிழர்களுக்கு எதிரானவர். சக ஊழியர்களில் யாருக்காவது தமிழுணர்வு உண்டு என்பது தெரிந்தால் அவர்களுக்கு தொடர்ந்து மனரீதியான தொந்தரவுகள் அளித்து ஓரம் கட்டுவார்.
அதுமட்டுமின்றி தினமலருக்கு புதிதாக செய்தியாளர் பணிக்கு வரும் தமிழ் இளைஞர்களில் யாருக்காவது தப்பித் தவறியும் தமிழுணர்வு இருந்துவிட்டால் அதை லாவகமாகக் கையாண்டு அந்த உணர்வை அவர்களுக்குள்ளேயே குழி தோண்டிப் புதைக்கும் வேலைகளை செவ்வனே செய்து முடித்து விடுவார்கள்.
இன்றைக்கு தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியினால் என்டிடிவி, டைம்ஸ் நவ், ஹெட்லைன்ஸ் டூடே, என்டிடிவி இந்து என சுமார் பத்துக்கும் மேற்பட்ட தேசிய ஊடகங்களான (தொலைக்காட்சிகள்) ஆங்கில ஊடகங்கள் தமிழ் நாட்டிற்குள் நுழைந்துவிட்டன. இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் செயல்படும் இந்தச் செய்தி தொலைக்காட்சிகளில் செய்திப் பிரிவுகளிலும், செய்தியாளர் பணிகளிலும் அந்தந்த மாநிலத்தவர் களுக்கு முன்னுரிமை கொடுத்து பணியமர்த்தி உள்ளது.
ஆனால் தமிழகத்தில் மட்டும் நிலை தலைகீழ். எந்தச் செய்தியைப் போடுவது, எதை விடுவது என்கிற முக்கிய முடிவுகள் எடுக்கும் பதவிகளில் பெரும்பாலும் அயலாரையே (குறிப்பாக மலையாளிகளையே) பணியமர்த்துகின்றனர். இது தற்செயலாக நடப்பதில்லை. திட்டமிட்டே ஊடகங்களில் இப்படியொரு நிலை உருவாக்கப்படுகிறது. உதாரணமாக சேலம், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேசிய ஆங்கில செய்தித் தாள்கள், செய்தித் தொலைக்காட்சிகளின் முக்கியப் பொறுப்புகளில் மட்டுமின்றி செய்தியாளர்களாகவும் மலையாளிகளே நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
அந்த ஊர்களில் பணியாற்ற தமிழ்த் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஆனால், அவருக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. ஆங்கிலமும் மலையாளமும் மட்டுமே அவருக்குத் தெரியும். சென்னையைத் தவிர்த்து பிற நகரங்களில் பெரும்பாலான அரசு அதிகாரிகள் தமிழில்தான் பேட்டி அளிப்பார்கள். ஆங்கிலத்தில் கேள்வி கேட்கப்பட்டாலும் தமிழில்தான் பதிலளிப்பார்கள். இது தெரிந்தும் தமிழ்த் தெரியாதவர்களை தேசிய ஆங்கில ஊடகங்கள் அங்கே பணியமர்த்துவதன் நோக்கம் என்ன?
அதே செய்தி தொலைக்காட்சியின் கேரளாவின் அனைத்து நகரிலும் மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள்.
அதுமட்டுமல்ல கேரளாவில் எந்த தேசிய ஊடகத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் முக்கியப் பொறுப்புகளிலோ செய்தியாளராகவோ பணியமர்த்தப்படுவதில்லை. ஆனால் தமிழகத்தில் உள்ள இந்தச் செய்தி தொலைக்காட்சிகளில் முக்கியப் பொறுப்புகளில் மட்டுமின்றி செய்தியாளர்கள் பணிகளிலும் பெரும்பாலும் அயலாரையே நியமித்திருக்கிறார்கள். இதை வீட்டில் அமர்ந்தபடி தேசிய செய்தி சேனல்களில் வரும் தமிழ்நாட்டுச் செய்திகளை கவனித்தாலே தெரிந்து கொள்ள முடியும்.
ஆங்கிலம் தெரிந்த (இத்தனைக்கும் மலையாளிகளை விட தமிழர்கள் மிகச்சரியாக ஆங்கிலம் பேசக்கூடியவர்கள்) தகுதியான தமிழர்கள் பத்திரிகைத் துறையில் எத்தனையோ பேர் இருக்கும் போது தேசிய ஆங்கில ஊடகங்கள் அவர்களுக்கு வாய்ப்பளிப்பது கிடையாது. அப்படி வாய்ப்பளிக்கப்பட்டு அங்கே பணிபுரியும் ஊழியர்களும் அங்கே நடக்கும் தமிழர் விரோத போக்கால் நொந்து கொண்டிருக்கிறார்கள். (ஆதாரம்: கீற்று இணையதளத்தில் வெளியாகியிருக்கும் ராதிகா கிரி கட்டுரை)
செய்தி தொலைக்காட்சிகள் என்றில்லை தமிழில் ஒளிப்பரப்பாகும் பொழுது போக்கு தொலைக்காட்சிகளிலும் இதே நிலைதான். அயலாளர்கள் அங்கே கூடி கும்மி அடிப்பதால் தான், நடனப் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென்றாலும் கூட பரதநாட்டியம் தெரிந்திருக்க வேண்டும் என்றும் பாட்டுப் போட்டிகளிலும் பங்கற்க கர்நாடக இசை தெரிந்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்படுகிறது. நடனப் போட்டி அவர்கள் ஆடப்போவது ஆபாச அசைகளுடன் சினிமாப் பாடல்களுக்குத்தான். பாட்டுப் போட்டிகளில் பாடப் போவதும் சினிமாப்பாடல்கள் தான். அதற்கு எதற்கு பரதமும், கர்நாடக சங்கீதமும்? தமிழ்நாட்டில் சொற்ப மக்களால் புரிந்து கொள்ளப்படும் இந்தக் கலையை பொதுவானதாக உருவாக்க முயல்வது, தமிழ்த் தொலைக்காட்சிகளில் உள்ள அயலார்களின் வேலையே!
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு எதிரான போக்கை உருவாக்குவது என பல தளங்களில் மறைமுகமான வேலைகள் தொடர்ந்து நடக்கின்றன. இதில் ஒன்றுதான் ஊடகங்களில் அயலார்களின் ஆதிக்கம்.
பெருகி வரும் தேசிய ஊடங்களும் ஊடங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு அயலார்கள் ஆக்கிரப்பதும் தமிழர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை உணர்த்தி வருகின்றது. ஈழப் போரிலும், முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் இது அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. இதை சரிசெய்ய கடமை தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு இருக்கிறது. (தமிழ்த் தேசியர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதற்கே நேரம் போததில்லை என்பது வேறு விஷயம்).
ஆங்கில பத்திரிகைகள் மற்றும் ஊடங்களுக்குள் தமிழுணர்வு மிக்க தகுதியான தமிழர்களை நுழைய வைப்பதன் மூலம் தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள ஆபத்தைத் தடுத்து நிறுத்த முடியும். அதற்கான பணிகளில் தமிழுணர்வாளர்கள் கமுக்கமாக ஈடுபட வேண்டும்.


-வே.வெற்றிவேல் சந்திரசேகர்

1 comment:

 1. Dear Sir....This is absolutly what i thinking in my heart for so long...why this situation in whole media insulting tamil's...
  First they came through The Big Screens(cinema's)and by TV mediams...
  See every channel's serial's actors and technicians mainly they are keralite's
  See every Advt's mainy they are Keralite's
  See every Dance and Competition's there also keralite's....
  What is Going on in Tamilnadu
  Why this self demoralising..
  Tamil's always fall in the lights of glamour...

  That's why all the evil happenings today...

  First tamil's must should love fellow tamil's in every field...otherwise it's going to challange tamil's in tamilnadu itself

  sorry ...my tamil fonts not working

  ReplyDelete