Friday, April 20, 2012






சவப்பெட்டி!! 



தொலைக்காட்சித் தொடரில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். கதை விவாதம் நள்ளிரவு தாண்டியும் அதிகாலை வரை தொடர்கிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் நிலைமை பரிதாபமானது! போட்டி நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்து அதிலிருந்து மக்களை தங்கள் பக்கம் திருப்புவது எப்படி என்கிற போட்டியில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். இந்தப் போட்டி ஆரோக்கியமானதா? இன்றைக்கு 24 மணிநேரமும் தொலைக்காட்சிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. 200 தொலைக்காட்சி சேனல்களாவது இருக்கும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு சேனல்களும் மக்களை ஈர்ப்பது எப்படி என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றன. “நான் எந்த ஆயுதத்தை ஏந்துவது என்பதை எதிராளிதான் முடிவு செய்கிறான்” என்று சொல்வார்களே. அப்படித்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் நிலைமை இருக்கிறது.

போட்டி நிகழ்ச்சிகளைப் பார்த்து தங்களுடைய நிகழ்ச்சிகளின் தரத்தை, வடிவத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். எதையாவது புதிதாக உருவாக்கி, அதை பார்வையாளர்களுக்கு படைக்க வேண்டிய அவசர அவசியம் அவர்களுக்கு. இப்படி யாரோ ஒருவர் பணம் பண்ண செய்யும் முயற்சிக்கு மக்கள் தொலைக்காட்சி முன்பு அடிமை ஆக்கப்படுகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய வேதனை. பாவம். அவர்களும் என்னதான் செய்வார்கள்.

24 மணி நேரமும் நிகழ்ச்சிகளை வழங்கியே ஆகவேண்டும். எதையாவது மக்களுக்குத் திணித்துக் கொண்டே இருக்க வேண்டும். மக்களை தொலைக்காட்சிப் பெட்டியோடு கட்டிப் போட வேண்டும்.

இந்தப் போட்டியின் விளைவு என்ன? யார் யாரை எல்லாம் நம் வீட்டுக்குள் நுழைய விட மாட்டோமோ அவர்கள் நம் வரவேற்பு அறைக்குள் வந்து விடுகிறார்கள். பேய், பிசாசு, காமுகர்கள், குடிகார்கள், கொலைகாரர்கள், எண் கணித ஜோதிடர்கள் என ஒட்டுமொத்த அயோக்கியர்கள் நம் வீட்டுக்குள் தொலைக்காட்சி வழியாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். பெண்கள் விரும்புவது எல்லாம் நெடுந்தொடரில் நடக்கின்றன. அதைப் பார்த்து அவர்கள் திருப்தி பட்டுக் கொள்கிறார்கள். ஒரு தொடரில் மாமியாரை மருமருகள் பழிதீர்க்கிறார். அதைப் பார்த்து மருமகள்கள் திருப்தி பட்டுக் கொள்கிறார்கள். இன்னொன்றில் மருமகளை மாமியார் பழிவாங்குகிறார். அதைப் பார்த்து மாமியார்கள் திருப்தி பட்டுக் கொள்கிறார்கள்.

குழந்தைகளின் தொலைக்காட்சி உலகத்தில் குண்டு வீசுகிறார்கள். துப்பாக்கியில் சுடுகிறார்கள். வாள் சண்டை போடுகிறார்கள். அதைப் பார்த்து பார்த்து நம் பிள்ளைகள் வன்முறைக்கு வாழ்க்கைப் பட்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த பெண்மணி ஒருவர் தன் மகனின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக சென்றிருந்தார். ஒவ்வொரு வீட்டிலும் அழைப்பிதழை வழங்க அரை மணி நேரம் எடுத்துக் கொண்டார். “ஏன் இவ்வளவு நேரம் ஆகிறது” என்று கேட்டதற்கு, அவர் சொன்ன பதில்தான் அதிர்ச்சிகரமானது. அழைப்பிதழ் கொடுக்கும் பணியால் தினமும் பார்க்கும் நெடுந்தொடரை இழக்க வேண்டியிருக்கிறதாம். எனவே அழைப்பிதழை கொடுத்துவிட்டு அந்த வீட்டிலேயே அமர்ந்து ஒரு தொடரை பார்த்து விடுவது. அடுத்த வீட்டுக்குப் போய் இன்னொரு தொடரைப் பார்த்துவிட்டு அழைப்பிதழைக் கொடுப்பது என்று முடிவெடுத்து அதை செயல்படுத்தியிருக்கிறார் அந்தப் பெண்மணி.

இன்றைக்கு பெரும்பாலான நம் பெண்களின் நிலைமை இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி பார்ப்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. இவர்கள் எதற்காகவும் நெடுந்தொடர்கள், நிகழ்ச்சிகளைத் தவற விடுவதில்லை. தொலைக்காட்சியை வெறுப்பவர்களை இவர்கள் வெறுக்கிறார்கள். தொலைக்காட்சி இல்லாத வாழ்க்கை வெறுமையானது என்று நினைக்கிறார்கள். சூரியன், பறவைகைள், வண்ணத்துப் பூச்சிகள், மலர்கள், உறவுகள், நட்பு வட்டாரம் என அற்புதங்களை ரசிக்காமல் அற்ப நிழல் வாழ்க்கையில் இளைப்பாறுகிறார்கள். வீட்டிலேயே உட்கார்ந்து சுகமாக எல்லா அனுபவங்களை பெற்றுக் கொள்வது என்பது சரியா? தங்களுடைய வாழ்க்கை நாம் வாழ வேண்டும் என்கிற தைரியம் இல்லாதவர்கள் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியைப் பார்த்து திருப்தி பட்டுக் கொள்கிறார்கள்.

நம்முடைய வாழ்க்கையை மற்றவர்கள் வாழப் பார்த்து திருப்தி பட்டுக் கொள்வது ஒருவிதமான மனநோய் இல்லையா? பார்வையாளர்களுக்காக நடிகர்-நடிகைகள் சிரிக்கிறார்கள். உலாவுகிறார்கள். விளையாடுகிறார்கள். காதலிக்கிறார்கள். அழுகிறார்கள். சுற்றுலா செல்கிறார்கள். இப்படியே போனால் மக்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை. இது வசதியாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால் தொலைக்காட்சிப் பெட்டி கொடுக்கும் இந்த வசதி ஒரு சவப்பெட்டிக்குச் சமமமானது என்பதை உணர்வது எப்போது? 

தொலைக்காட்சியை நமக்கு அளித்த அதே விஞ்ஞானம் தான் அதைக் கட்டுப்படுத்தும் கருவியையும் (ரிமோட் கண்ட்ரோல்) நம் கையில் வழங்கியிருக்கிறது. எதைப் பார்ப்பது எதை தவிப்பது என்கிற அறிவும் வசதியும் நம்மிடமே இருக்கிறது. என்ன செய்யப் போகிறோம்?

(Vetrivel chandrasekar V)

Sunday, April 8, 2012

ஓடி விளையாடு…



அகில இந்திய வானொலியில் விளையாட்டு அரங்கம் என்றொரு நிகழ்ச்சியை எழுதி வாசித்து வந்தேன். இந்த நிகழ்ச்சிக்காக விளையாட்டு செய்திகளை நாளிதழ்களில் இருந்து சேகரிக்கும்போது விளையாட்டு என்றால் இன்றைக்கு கிரிக்கெட் மட்டும்தானோ என்று நினைக்க வைத்துவிட்டது.

என்னுடைய சிறுவயதை நினைத்துப் பார்க்கிறேன். பள்ளி தொடங்குவதற்கு முன்பு காலையிலும் பள்ளி நேரம் முடிந்த பின்பு மாலையில் பள்ளி மைதானத்தில் விளையாடுவோம். கையடக்க பந்தை வைத்துக் கொண்டு கால்பந்து விளையாடுவோம்.
அங்கிருந்து வீட்டுக்கு வந்ததும் விளையாட்டுதான். அந்தக் காலகட்டத்தில் நாங்களும் கிரிக்கெட் விளையாடினோம். அப்போதுதான் சச்சின் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான நேரம். எங்கள் விளையாட்டில் கிரிக்கெட் மட்டுமே பிரதானம் அல்ல. கிளியந்தாண்டு (கில்லி), கோலி குண்டு, பம்பரம், கண்ணாமூச்சி, நொண்டி, கால்பந்தாட்டம், திருடன் போலீசு என கலந்து காட்டி விளையாடுவோம்.

திடீர் திடீரென எங்களின் விளையாட்டு மாறிக் கொண்டே இருக்கும். எல்லோரும் கோலி குண்டு விளையாடிக் கொண்டிருப்போம். ஏன் எதற்கு என்று தெரியாமலேயே அடுத்து எல்லோரும் பம்பரத்துக்கு மாறியிருப்போம்.
சிகரெட் அட்டை பொறுக்கி வந்து அதை இரண்டாகக் கிழித்து சதுர வடிவில் மடக்கிக் கொள்வோம். ஒவ்வொரு வகை அட்டைக்கும் ஒரு மதிப்பு கொடுப்போம். ஆயிரம், ஐந்தாயிரம், பத்தாயிரம் என. தரையில் வட்டம் போட்டு சிகரெட் அட்டைகளை அடுக்கி வைத்து தட்டையான கல்லை வீசி சிகரெட் அட்டைகளை வட்டத்திலிருந்து வெளியே தள்ளுவோம். என் அண்ணன்கள் தான் இந்த விளையாட்டில் எப்போதும் வெற்றியாளர்கள். ஐந்து லட்சம் மதிப்பிலான (!) சிகரெட் அட்டைகளை வெற்றி பெற்று வைத்திருந்தது என்னும் எனக்கு நினைவில் இருக்கிறது.

உட்கார்ந்த நிலையில் வலது கை கட்டை விரலை தலையில் அழுத்தி வைத்துக் கொண்டு, இடது கையில் உள்ள கோலி குண்டை வலது கை நடுவிரலில் வைத்து குறி பார்த்து அடிப்பது தான் கோலி குண்டு விளையாட்டு. என்னுடன் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ரவி குறி பார்த்து ஒரே அடியில் எதிராளியின் கண்ணாடி குண்டுகளை சில்லு சில்லாக உடைக்கும் திறமை பெற்றிருந்தான்.

மரங்களில் ஏறி கிளைகளில் ஊஞ்சல் ஆடுவோம். விளையாடிய அலுப்பில் மரத்தடி, கோவில் வளாகங்களில் அப்படியே தூங்கிக் கிடப்போம். விளையாடி முடித்து வீட்டுக்குப் போனால் பாதங்களில் குத்திய முற்களை எடுத்து விடுவதுதான் எங்கள் தாத்தாவின் வேலை.
யாராவது புது வீடு கட்டுகிறார்கள் என்றால் அத்தனை விளையாட்டுகளையும் மூட்டை கட்டிவிடுவோம். கட்டுமானப் பணிக்காக குவிக்கப்பட்டிருக்கும் மணலில் ஏறி குதிக்கும் விளையாட்டுக்கு மாறி விடுவோம். வீட்டு உரிமையாளர் குச்சியோடு வந்த அடித்துத் துரத்தும் வரை விளையாடுவோம். மணலில் இருந்து களிமண்களை எடுத்து சிலைகள் செய்வோம்.

கோடை விடுமுறையில் முழுக்க வெறும் விளையாட்டுகள் தான். வெளியூரிலிருந்து விடுமுறைக்கு வரும் உறவுப் பையன்கள் ஏதாவது ஒரு புது விளையாட்டை எங்களுக்கு அறிமுகம் செய்து விட்டுப்போவார்கள். பெண்கள் தரையில் கட்டங்கள் வரைந்து சில்லி விளையாடுவார்கள். நொண்டி அடிப்பார்கள். நொண்டிக் கொண்டே கட்டங்களை தாண்டுவார்கள்.
ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்து பெரியவர்கள் வந்து முதுகில் ஒரு போடு போட்டு இழுத்துப் போகும்வரை விளையாடுவோம்.

இன்றைய சிறுவர்களுக்கு இந்த விளையாட்டுகளைத் தெரியுமா? அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் கிரிக்கெட் மட்டும்தான்.
அண்மையில் திருப்பூர் போயிருந்த போதுதான் கவனித்தேன். நாங்கள் இத்தனை விளையாட்டுகளை விளையாடிய அந்தத் தெரு பள்ளி விடுமுறை நாட்களில் கூட ஆள் அரவம் இன்றி அமைதியாக இருக்கிறது. இத்தனைக்கும் அன்றைக்கு இருந்ததை விட இன்றைக்கு வீடுகளும், சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.
திருப்பூரில் இந்த நிலை என்றால் சென்னை போன்ற பெருநகரங்களைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை. இப்போதெல்லாம் சிறுவர்கள் வீட்டிற்குள் இருந்து வெளியே வருவதே இல்லை.

கிரிக்கெட் தவிர்த்து கணிப்பொறியில், தொலைக்காட்சியில் காணொளி விளையாட்டுகளை (வீடியோ கேம்) பெரும்பாலும் தன்னந்தனியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பெரியவர்கள் யாராவது சற்று நேரம் கைப்பேசியை கீழே வைத்தாலே அதை எடுத்து காணொடி விளையாட்டுகளை விளையாடத் தொடங்கிவிடுகிறார்கள். தெருவில் சின்ன சந்து பொந்துகளில் நாலு பேர் சேர்ந்தால் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்.

துப்பாக்கி இல்லாத காணொளி விளையாட்டுகளே (வீடியோ கேம்கள்) இல்லை. எல்லாம் விளையாட்டுகளிலும் வன்முறை நிரம்பி வழிகிறது. ஒன்பதாம் வகுப்பு மாணவன் பள்ளி ஆசிரியை குத்திக் கொலை செய்யும் கலாசாரம் இங்கிருந்துதான் தொடங்கியிருக்கிறது. சிறு வயது குழந்தைகளைக் கூட இருதய நோய், நீரிழிவு நோய் தாக்குகின்றன. நகர்ப்பகுதிகளில் மாதவிடாய் சிக்கல் இல்லாத இளம்பெண்களே இல்லை என்கிற நிலை.

இப்போதெல்லாம் அதிக செலவு பிடிக்கும டென்னிஸ், வில் வித்தை, துப்பாக்கிச் சுடுதல், குத்துச் சண்டை, ஸ்கேட்டிங் போன்ற போட்டிகள் மட்டுமே முன்னிறுத்தப்படுகின்றன. சாதாரண குடும்பப் பின்னணி உள்ளவர்கள் நெருங்க முடியாத விளையாட்டுகள் இவை. இவற்றில் நகர மக்களே பங்கேற்பாளர்களாகவும், பார்வையாளர்களாகவும் இருக்கிறார்கள். நகர மக்களை குறிவைக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய இந்தப் போட்டிகளையும் இவ் விளையாட்டு வீரர்களையும் பயன்படுத்திக் கொள்கின்றன. இதனால் விளையாட்டு வீரர்கள் அழகாகவும் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகிவிட்டது.

இளைய தலைமுறையினர் விளையாடுவதைவிட விளையாட்டைப் பார்க்கவே விரும்புகிறார்கள். குடும்பம் குடும்பமாக அமர்ந்து கிரிக்கெட் பார்க்கிறார்கள். விளம்பர இடைவெளியில் பன்னாட்டு நிறுவனங்களின் குப்பைகளை வீரர்கள் கூவிக் கூவி விற்கிறார்கள். தொலைக்காட்சியில் வரும் நொறுக்குத் தீனிகளை தொலைக் காட்சிகளை பார்த்துக் கொண்டே உட்கார்ந்த இடத்தில் தின்று கொண்டே இருக்கிறார்கள்.

சின்னப் பசங்களும் தொப்பையும் தொந்தியுமாக திரிகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் நொறுக்குத் தீனிகள் பலவண்ணப் பொட்டலங்களில் தொங்காத பெட்டிக் கடைகளே இல்லை.
உடல் திறன்களை மேம்படுத்திக் கொள்ள விளையாட்டு ரொம்ப முக்கியமானது. உடல் வலிமையை, தாங்கும் திறனை, வேகத்தை, சுறுசுறுப்பை மேம்படுத்த விளையாட்டுகள் உதவுகின்றன. உடலைப் பயன்படுத்தினாலும் விளையாட்டில் சிறப்பாக ஈடுபட ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் மனதை ஒருமுகப்படுத்துவதும் முக்கியமானது. விளையாட்டு நல்ல நட்பை அறிமுகப்படுத்துகிறது. வெற்றி தோல்வியைப் புரிய வைக்கிறது. போராடக் கற்றுத் தருகிறது.

வெறும் படிப்பில் இவை எல்லாம் கிடைத்து விடாது. வெயிலில் களைத்துப் போகும் அளவுக்கு விளையாடும் குழந்தையை எந்த நோய் என்ன செய்துவிட முடியும்? வீட்டுக்குள் ஒடுங்கிக் கிடக்கும் குழந்தைகள் நோயாளியாகவும் சில நேரங்களில் மனநோயாளியாகவும் மாறத்தானே வாய்ப்பிருக்கிறது.
குழந்தைகளுக்கு விளையாட்டைச் சொல்லித் தருவோம். அவர்களை விளையாட விடுவோம்.
(வே.வெற்றிவேல் சந்திரசேகர்)