Friday, January 29, 2010

திருப்பூர் புத்தகக்கண்காட்சியில் ‘இனப்படுகொலையில் கருணாநிதி‘ நூல் வெளியீடு





இளந்தமிழர் இயக்க வெளியீடான இனப்படுகொலையில் கருணாநிதி ஆதாரங்களுடன் ஒரு குற்றப்பத்திரிகை நூல் திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வந்துள்ளது.

நான்காம் கட்ட இறுதிப் போர் தொடங்கியதும், மாங்கொல்லை கூட்டத்தில் பொங்கியெழுந்த கருணாநிதி, சிறிது சிறிதாக சுருதி குறைத்து, பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி, நானே ஒரு அடிமை, காலை டிபனுக்கும், மதிய உணவுக்கு இடையே நான்கு மணி நேர சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தம் கொண்டு வந்தேன், எம்.பி., குழுவை அனுப்பி முப்பதாண்டு இலங்கைப் பிரச்னையை நான்கே நாளில் தீர்த்து வைத்தேன் என்றெல்லாம் சுயபுராணம் பாடிய கலைஞரின் சுயரூபத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது, இந்நூல்.

‘கருணாநிதியின் பக்தர்களால் கூட இதில் உள்ள ஆதாரங்களை மறுத்துப் பேசமுடியாது என்று மணியரசன் அவர்கள் தன் அணிந்துரையில் எழுதியிருக்கிறார். அந்தளவுக்கு நாள், இடம் வாரியாக கலைஞர் ஈழத்திற்கு எதிராக பேசிய எழுதிய கருத்துகளை இந்நூல் பட்டியலிடுகிறது. நான்காம் கட்ட இறுதிப் போரில் தி.மு.க. மற்றும் கருணாநிதியின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகள் இவ்வாறு இருந்தது என்பதை அறிய இது ஒரு வரலாற்று ஆவணம். தி.மு.க அடிவருடிகள் யாராவது இதற்கு மறுப்புப் பேச முடிந்தால் பேசிப் பார்க்கட்டும்!

புத்தகம் வேண்டுவோர், தொடர்புக்கு
இளந்தமிழர் இயக்கம்,
44/1 பஜனை கோயில் தெரு,
முத்துரங்கன் சாலை, தி.நகர்,
சென்னை. கைபேசி: 90950 13809 ,

Thursday, January 28, 2010

உணர்ச்சி வேகத்தில் முத்துக்குமார் இப்படி செய்து விட்டான்’ -இயக்குநர் ஜனநாதன்




திருப்பூர் கண்காட்சியில் இன்று விற்பனைக்கு வரும் முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாற்று நூல், ‘துருப்புச்சீட்டு’க்கு பேராண்மை இயக்குநர் ஜனநாதன் எழுதிய அணிந்துரை


முத்துக்குமார் பற்றிய ஆவணத்தொகுப்புகள் எந்த வடிவத்திலும் வெளிவருவது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது. உலக முழுவதும் உள்ள தமிழர்கள் நம் தொப்புள் கொடி உறவுகள் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் கருத்து, முத்துக்குமாரின் தியாகத்தால் யாரும் மறுக்க முடியாத உண்மையாக்கிவிட்டது.

உலகத் தமிழர்கள் அனைவரும் ஓர் இனம் என்கிற உணர்வுடன் இருக்கிறோம் என்பதற்கு அடையாளம் - ஆதாரம், முத்துக்குமாரின் மரணம். இந்த இளைஞனின் உயிர்கொடை உலகத் தமிழர்களை ஒன்றிணைத்துவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை. உலகில் எத்தனையோ பேர் அரசியல் தீக்குளிப்புப் போராட்டங்களை முன்னெடுத்து உயிர்க்கொடை செய்திருக்கிறார்கள். ஆனால், தன் உடலையே துருப்புச்சீட்டாக்கி எதிர்கால அரசியலை திட்டமிட்டு உயிர்த்தியாகம் செய்தது அனேகமாக முத்துக்குமார் மட்டும்தான்.

முத்துக்குமார் மரணமடைவதற்கு முன்பே உதவி இயக்குநராக எனக்கு அவர் அறிமுகமாகியிருந்தார். ‘ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் இந்த இளைஞன் இப்படி செய்து விட்டான்’ என்று என்னிடம் சிலர் கூறியிருக்கிறார்கள். பொன்னுசாமி எழுதியிருக்கும் இந்தத் ‘துருப்புச்சீட்டு‘ என்கிற முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாற்று நூலில் வெளிப்பட்டிருக்கும் முத்துக்குமாரின் அறிவுத்திறன் மற்றும் அவர் வளர்த்துக்கொண்ட தகுதிகள் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவர் வெறும் உணர்ச்சிவயப்பட்டு எதிலும் இறங்குபவர் அல்ல என்பதும் இந்தத் புத்தகம் ஊடாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர். ஆங்கில மொழியறிவு கொண்டவர். மலையாளமும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. வெறும் ஆர்வத்தினால் மட்டுமே சினிமாவுக்குள் நுழைபவர்களுக்கு மத்தியில், சினிமாவை ஒரு தொழிற்கல்வியாகப் பயிலும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். நல்ல புத்தகங்களைத் தேடி வாசித்திருக்கிறார். மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் கட்டணம் வரும் வரைக்கும் இணையத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். உலகப்படங்களைப் பார்த்து தன்னுடைய சினிமா அறிவை மேம்படுத்திக்கொண்டார். உதவி இயக்குநர்களாக முயற்சி செய்யும் பெரும்பாலானவர்களிடம் இவ்வளவு திறமைகளையும், தகுதிகளையும் நான் கண்டதில்லை. ஆக, அவர் வெறும் உணர்ச்சிவயப்படுபவர் என்ற வாதம் பொய்யானது.

முத்துக்குமார் தன் மரணத்துக்கு முன்பு எழுதிய அந்த அரசியல் அறிக்கையில், பல இடங்களில் நையாண்டி கலந்திருந்தது. மன உளைச்சல் மற்றும் உளவியல் ரீதியாக தீக்குளிப்புப் போராட்டத்துக்கு அவர் தூண்டப்பட்டிருந்தால், நிச்சயம் இந்த நையாண்டித்தனங்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. சாகும் தறுவாயில்கூட அவரால் இப்படி எழுத முடிந்திருக்கிறது என்றால், உண்மையிலேயே அவர் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார்.

‘நிழல்‘ திருநாவுக்கரசு நடத்தும் திரைப்படப் பயிற்சிப் பட்டறைகளில் முத்துக்குமாரை நான் அடிக்கடி பார்த்திருந்தாலும், என் வீட்டில் அவரை இரண்டு மூன்று முறை சந்தித்திருக்கிறேன். முதல்முறையாக நான் அவரைப் பார்த்தபோது ‘படபடப்புடன் சேர்ந்த துறுதுறு இளைஞன்‘ என்று அவரைப் பற்றி நினைத்துக் கொண்டேன். இந்த நூலில் உள்ளது போலவே எப்போதும் புத்தகமும் கையுமாகவே முத்துக்குமாரைப் பார்த்திருக்கிறேன். வீட்டிற்குள் நுழைந்ததும் என் புத்தக அலமாரியை ஆய்வு செய்யத் தொடங்கிவிடுவார்.

புத்தகம் மீதான அவரது ஆர்வத்தைப் புரிந்து கொண்ட நான், சின்ன வயதில் நான் படித்த மாக்ஸிம் கார்க்கியின் ‘ஒரு பிரம்மச்சாரியின் டைரி‘ புத்தகம் அவரிடம் இருக்கிறதா என்று கேட்டேன். அதை எப்படியாவது தேடி வாங்கி வருவதாக என்னிடம் முத்துக்குமார் உறுதியளித்தார். ஆந்திர மாநிலம் தலக்கோனம் என்ற இடத்தில் ‘பேராண்மை‘ படப்பிடிப்பில் இருந்தபோது, எனது துணை இயக்குநரும் அவரது நண்பருமான ஆலயமணியைத் தொடர்புகொண்ட முத்துக்குமார், ‘அண்ணன்கிட்ட சொல்லிடுங்க, ஒரு பிரம்மச்சாரியின் டைரி புத்தகம் கிடைத்துவிட்டது‘ என்று சொல்லியிருக்கிறார். ‘சென்னை வந்ததும் சந்திப்போம்‘ என்று ஆலயமணி கூறியிருக்கிறார். நாங்கள் திரும்பிய சில நாட்களில் முத்துக்குமார் தீக்குளித்து இறந்துபோன செய்தி எங்களுக்கு வந்து சேர்ந்தது. உடனே கொளத்தூர் சென்ற என்னால் அங்கு வைக்கப்பட்டிருந்த முத்துக்குமாரின் கருகிய உடலைத் தான் பார்க்க முடிந்தது. எனக்காக முத்துக்குமார் வாங்கிய ‘ஒரு பிரம்மசாரியின் டைரி‘ புத்தகம், அவரது புத்தக அலமாரியில் இன்னும் இருப்பதாக கேள்விப்பட்டேன். இந்தச் சம்பவம் முத்துக்குமாருக்கும், எனக்குமான ஓர் உணர்வுப்பூர்வமான நெருக்கத்தை உருவாக்கிவிட்டது.

என்னிடம் உதவி இயக்குநராக சேர வேண்டும் என்கிற தனது ஆசையை முத்துக்குமார் என்னிடம் வெளிப்படுத்தவே இல்லை. என் துணை இயக்குநர் ஆலயமணியிடம் கூறியிருக்கிறார். ‘பேராண்மை‘ பட ஸ்கிரிப்டை தட்டச்சு செய்ய முத்துக்குமாரை வரசொல்லிருந்தோம். அப்போது வேறொரு வேலையில் மும்முரமாக இருந்ததால் தன்னால் வரமுடியவில்லை என்று என் உதவி இயக்குநர் ரோகாந்திடம் முத்துக்குமார் கூறியிருக்கிறார்.

சமூக-அரசியல் அறிவோடு, சினிமா கலையையும் முறையாகக் கற்றுத் தேர்ந்திருந்த முத்துக்குமார் உயிரோடு இருந்திருந்தால் அவர் மூலம் மிகச்சிறந்த படைப்புகள் தமிழ்ச் சினிமா உலகிற்குக் கிடைத்திருக்கும்.

முத்துக்குமாரின் அரசியல் அறிக்கையில் உள்ள சில கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு. ஒருசில கருத்துகளில் முரண்படுகிறேன். அதை எல்லாம் மீறி, முத்துக்குமார் எனும் அந்தத் துருப்புச்சீட்டை நாம் சரியாக பயன்படுத்தவில்லையோ என்கிற குற்றஉணர்வு என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது.
இப்படிக்கு

எஸ்.பி.ஜனநாதன்.

Wednesday, January 27, 2010

திருப்பூர் புத்தகக்கண்காட்சியில் செம்மை பதிப்பகத்தின் முத்துக்குமார் வரலாற்று நூல், ‘துருப்புச்சீட்டு‘!




பொழுதுபோக்கு, வெறுங்கூத்து என இன்றைய தலைமுறை இளைஞர்கள் திசை மாறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்கிற விமர்சனத்தை முத்துக்குமாரின் தீக்குளிப்பு மறுஆய்வு செய்யத் தூண்டியிருக்கிறது. தன்னுடைய தலைவனுக்காக உணர்ச்சிவயப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொள்ளும் செயல்பாட்டோடு முத்துக்குமாரின் தீக்குளிப்பைப் பொறுத்திப் பார்ப்பது அபத்தம். சாவதற்கு முன் அவர் விநியோகித்த துண்டறிக்கையில் இருந்த அவரது அரசியல் அறிவின் வீச்சை 26 வயது இளைஞரிடமிருந்து யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இன்றைய தமிழ் இளைஞர்களை சமூகப் போராளியாக மாற்றவன் முத்துக்குமார். அவரது இறுதி ஊர்வலத்தில் கொளத்தூரில் இருந்து மூலக்கொத்தளம் வரை திரண்ட உணர்வாளர்களின் எழுச்சி, தமிழகம் இதுவரை கண்டிராதது. பேரழிவு ஆயுதங்களால் தமிழினத்தை அழித்த ஏகாதிபத்திய நாடுகளை உலுக்கியது இவரது அரசியல் அறிக்கை. தமிழகத்தையே பதற வைத்த இந்த முத்துக்குமார் யார்? தமிழ் இனத்தின் நலன்களுக்காக வேரோடு தன்னைக் கொடுத்த இந்த விருட்சம் எங்கிருந்து வந்தது? பெருமரமென ஓங்கி வளர்வதற்கு முன் விதையாய் இருந்த நாளில் அது கடந்து வந்த பாதை என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடையாய் வெளிவந்திருக்கிறது, முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாற்று நூல், ‘துருப்புச் சீட்டு‘

‘என் உடலையே துருப்புச்சீட்டாக்கிப் போராடுங்கள்’ என்று உலகில் வேறு எவரும் இதற்கு முன்பு அறிவித்ததாக வரலாறு இல்லை. எனவே, இதைவிட வேறொரு தலைப்பு, இந்தப் புத்தகத்திற்குப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றவில்லை. செம்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தகம், ஜனவரி 29-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கும் திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

கடந்தாண்டு இதே நாளில்தான் (ஜனவரி 29–ம் தேதி) தமிழின அழிப்பை எதிர்த்து உயிர்க்கொடை செய்தார், முத்துக்குமார்.

தொடர்புக்கு

செம்மை பதிப்பகம்,
451, அரசம்மை இல்லம்,
விக்டோரியா காலனி – நான்காம் தெரு,
மருத்துவக் கல்லூரி சாலை,
தஞ்சாவூர் -613004.
கைபேசி: 90950 13809 , 0436 2246774

Tuesday, January 19, 2010

இளைஞர்களுக்கு தமிழுணர்வு இல்லையாம் சொல்கிறார், தேர்தல் காலத் தமிழினத் தலைவர் கலைஞர்

இன்றைய இளைய தலைமுறையினர் தமிழில் பெயர் வைக்கத் தயங்குவதாக தேர்தல் காலத் தமிழினத் தலைவர் (முத்துக்குமார் தனது அரசியல் அறிக்கையில் இப்படித்தான் கூறிப்பிட்டிருந்தார்) கலைஞர் வருத்தப்பட்டிருக்கிறார். அதோடு, நிற்காமல் மணமகனின் பிரதீப் என்ற பெயரை மதிவாணன் என்று மாற்றியிருக்கிறார்.

பிரதீப் என்கிற மதிவாணன் இன்றைய தலைமுறைதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் ஒன்றும் தனக்குத் தானே அந்தப் பெயரை வைத்துக் கொள்ளவில்லை. பிரதீபின் தாத்தா, அப்பா ஆகியோர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். அவர்கள்தான் இவருக்கு இந்தப் பெயரை வைத்திருப்பார்கள். ஆக, தமிழினத் தலைவரின் கட்சியில் இருந்து கொண்டே மேடையில் பிழைப்புக்காக தமிழைப் பேசிக் கொண்டே தன்னுடைய வாரிசுக்கு இப்படியொரு பெயரை அவர்கள் வைத்திருப்பார்கள்.

உண்மை அப்படியிருக்கையில், ஏதோ பிரதீப் என்ற இளைஞர் தனக்குத் தானே பெயர் வைத்துக் கொண்டது மாதிரி கொதித்துப் போய் பேசியிருக்கிறார். அதே மேடையில் கருணாநிதி என்கிற தனது பெயர் வேற்று மொழியில் இருந்தாலும், கடவுளைக் குறிப்பதால் அதை அப்படியே விட்டுவிட்டதாகவும் கலைஞர் கூறினார்.

இன்றைக்கு அவருடைய பேரன், பேத்திகள் திவ்யா, ஆதித்யா, இதயநிதி ஆகியோரின் பெயர்கள் எல்லாம் தூயத் தமிழ்ச் சொல் என்று கருணாநிதி நினைத்துக் கொண்டிருக்கிறாரோ என்று தெரியவில்லை. ஊரான் பெயரை எல்லாம் மாற்றுவார், இவருடைய பேரனின் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ரெட்ஜெயன்ட் இது என்ன தமிழ்ப் பெயரா? ‘தமிழ் படம்’ என்ற பெயரில் அழகிரியின் மகன் எடுக்கும் அந்தப் படத் தலைப்பில் ‘ப்’ என்ற ஒன்று இல்லையே, இது தமிழுக்குச் செய்யும் சேவையா? தமிழுணர்வு மிக்க இன்றைய தலைமுறையினர் (முத்துக்குமார் உள்பட) ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்ததால் அவர்கள் மீது அடக்குமுறையை ஏவியது இதே கலைஞர்தான்.

இதையெல்லாம் எழுத இங்கே எந்தப் பத்திரிகையும் கிடையாது. அது சரி, தி.மு.க. மத்திய அமைச்சரின் லட்சம் கோடி ரூபாய் ஊழலையே கண்டுகொள்ளாத தமிழக ஊடகங்கள் இதையா கண்டுகொள்ளப் போகிறது?

Monday, January 18, 2010

தமிழ்மணம் விருது! நன்றிகள்!!




தமிழ்மணம் வழங்கும் 2009-ம் ஆண்டுக்கான முதல் பரிசு பதக்கம் எனக்குக் கிடைத்திருக்கிறது. தலித் மக்கள் பிரச்சினை, மனித உரிமை, நிறவெறி தொடர்பான கட்டுரைகளுக்கான பிரிவில் முதல் பரிசு வழங்கியிருக்கிறார்கள். ‘ஷாருக்கானுக்கு ஒரு நியாயம், தமிழனுக்கு ஒரு நியாயமா?‘ என்ற கட்டுரைக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

நான் எந்தக் கட்டுரையையும் திட்டமிட்டு எழுதியது கிடையாது. கோபமும், ஆவேசமும் உந்தித் தள்ளும்போது எழுதத் தொடங்குவேன். உண்மையிலேயே பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்த்து போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை.

இப்போதும் ஒரு வார்த்தையை பலமுறை அடித்து திருத்தி எழுதும் அளவுக்கே என்னுடைய மொழி அறிவு இருக்கிறது. அதிலும் முக்கியமான ஒரு புத்தகத்தை விரைவில் எழுதி வெளியிட உள்ள நிலையில் எனக்குக் கிடைத்துள்ள இந்த விருது உண்மையில் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

விருது கிடைத்த செய்தியை என் மனைவியிடம் தெரிவித்ததும் மகிழ்ச்சி அடைந்தாள். நண்பர்களிடம் இன்னும் சொல்லவில்லை (கூச்சமாக இருக்கிறது). நான் எழுதிக் கொண்டிருக்கும் அந்தப் புத்தகம் பற்றிய அறிவிப்பு மிக விரையில் வரும். தமிழ்மணம் எழுத்தாளர்களும், வாசகர்களும் அந்தப் புத்தகத்தை நிச்சயம் படிப்பார்கள். இப்போதைக்கு ரகசியம்!

மறந்தே விட்டேன், என் கட்டுரைக்கு வாக்களித்த முகம் தெரியாத நண்பர்களுக்கு நன்றி.

மீண்டும் சந்திப்போம்.