Thursday, January 28, 2010

உணர்ச்சி வேகத்தில் முத்துக்குமார் இப்படி செய்து விட்டான்’ -இயக்குநர் ஜனநாதன்




திருப்பூர் கண்காட்சியில் இன்று விற்பனைக்கு வரும் முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாற்று நூல், ‘துருப்புச்சீட்டு’க்கு பேராண்மை இயக்குநர் ஜனநாதன் எழுதிய அணிந்துரை


முத்துக்குமார் பற்றிய ஆவணத்தொகுப்புகள் எந்த வடிவத்திலும் வெளிவருவது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது. உலக முழுவதும் உள்ள தமிழர்கள் நம் தொப்புள் கொடி உறவுகள் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் கருத்து, முத்துக்குமாரின் தியாகத்தால் யாரும் மறுக்க முடியாத உண்மையாக்கிவிட்டது.

உலகத் தமிழர்கள் அனைவரும் ஓர் இனம் என்கிற உணர்வுடன் இருக்கிறோம் என்பதற்கு அடையாளம் - ஆதாரம், முத்துக்குமாரின் மரணம். இந்த இளைஞனின் உயிர்கொடை உலகத் தமிழர்களை ஒன்றிணைத்துவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை. உலகில் எத்தனையோ பேர் அரசியல் தீக்குளிப்புப் போராட்டங்களை முன்னெடுத்து உயிர்க்கொடை செய்திருக்கிறார்கள். ஆனால், தன் உடலையே துருப்புச்சீட்டாக்கி எதிர்கால அரசியலை திட்டமிட்டு உயிர்த்தியாகம் செய்தது அனேகமாக முத்துக்குமார் மட்டும்தான்.

முத்துக்குமார் மரணமடைவதற்கு முன்பே உதவி இயக்குநராக எனக்கு அவர் அறிமுகமாகியிருந்தார். ‘ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் இந்த இளைஞன் இப்படி செய்து விட்டான்’ என்று என்னிடம் சிலர் கூறியிருக்கிறார்கள். பொன்னுசாமி எழுதியிருக்கும் இந்தத் ‘துருப்புச்சீட்டு‘ என்கிற முத்துக்குமாரின் வாழ்க்கை வரலாற்று நூலில் வெளிப்பட்டிருக்கும் முத்துக்குமாரின் அறிவுத்திறன் மற்றும் அவர் வளர்த்துக்கொண்ட தகுதிகள் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவர் வெறும் உணர்ச்சிவயப்பட்டு எதிலும் இறங்குபவர் அல்ல என்பதும் இந்தத் புத்தகம் ஊடாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர். ஆங்கில மொழியறிவு கொண்டவர். மலையாளமும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. வெறும் ஆர்வத்தினால் மட்டுமே சினிமாவுக்குள் நுழைபவர்களுக்கு மத்தியில், சினிமாவை ஒரு தொழிற்கல்வியாகப் பயிலும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். நல்ல புத்தகங்களைத் தேடி வாசித்திருக்கிறார். மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் கட்டணம் வரும் வரைக்கும் இணையத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். உலகப்படங்களைப் பார்த்து தன்னுடைய சினிமா அறிவை மேம்படுத்திக்கொண்டார். உதவி இயக்குநர்களாக முயற்சி செய்யும் பெரும்பாலானவர்களிடம் இவ்வளவு திறமைகளையும், தகுதிகளையும் நான் கண்டதில்லை. ஆக, அவர் வெறும் உணர்ச்சிவயப்படுபவர் என்ற வாதம் பொய்யானது.

முத்துக்குமார் தன் மரணத்துக்கு முன்பு எழுதிய அந்த அரசியல் அறிக்கையில், பல இடங்களில் நையாண்டி கலந்திருந்தது. மன உளைச்சல் மற்றும் உளவியல் ரீதியாக தீக்குளிப்புப் போராட்டத்துக்கு அவர் தூண்டப்பட்டிருந்தால், நிச்சயம் இந்த நையாண்டித்தனங்கள் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. சாகும் தறுவாயில்கூட அவரால் இப்படி எழுத முடிந்திருக்கிறது என்றால், உண்மையிலேயே அவர் மிகத் தெளிவாக இருந்திருக்கிறார்.

‘நிழல்‘ திருநாவுக்கரசு நடத்தும் திரைப்படப் பயிற்சிப் பட்டறைகளில் முத்துக்குமாரை நான் அடிக்கடி பார்த்திருந்தாலும், என் வீட்டில் அவரை இரண்டு மூன்று முறை சந்தித்திருக்கிறேன். முதல்முறையாக நான் அவரைப் பார்த்தபோது ‘படபடப்புடன் சேர்ந்த துறுதுறு இளைஞன்‘ என்று அவரைப் பற்றி நினைத்துக் கொண்டேன். இந்த நூலில் உள்ளது போலவே எப்போதும் புத்தகமும் கையுமாகவே முத்துக்குமாரைப் பார்த்திருக்கிறேன். வீட்டிற்குள் நுழைந்ததும் என் புத்தக அலமாரியை ஆய்வு செய்யத் தொடங்கிவிடுவார்.

புத்தகம் மீதான அவரது ஆர்வத்தைப் புரிந்து கொண்ட நான், சின்ன வயதில் நான் படித்த மாக்ஸிம் கார்க்கியின் ‘ஒரு பிரம்மச்சாரியின் டைரி‘ புத்தகம் அவரிடம் இருக்கிறதா என்று கேட்டேன். அதை எப்படியாவது தேடி வாங்கி வருவதாக என்னிடம் முத்துக்குமார் உறுதியளித்தார். ஆந்திர மாநிலம் தலக்கோனம் என்ற இடத்தில் ‘பேராண்மை‘ படப்பிடிப்பில் இருந்தபோது, எனது துணை இயக்குநரும் அவரது நண்பருமான ஆலயமணியைத் தொடர்புகொண்ட முத்துக்குமார், ‘அண்ணன்கிட்ட சொல்லிடுங்க, ஒரு பிரம்மச்சாரியின் டைரி புத்தகம் கிடைத்துவிட்டது‘ என்று சொல்லியிருக்கிறார். ‘சென்னை வந்ததும் சந்திப்போம்‘ என்று ஆலயமணி கூறியிருக்கிறார். நாங்கள் திரும்பிய சில நாட்களில் முத்துக்குமார் தீக்குளித்து இறந்துபோன செய்தி எங்களுக்கு வந்து சேர்ந்தது. உடனே கொளத்தூர் சென்ற என்னால் அங்கு வைக்கப்பட்டிருந்த முத்துக்குமாரின் கருகிய உடலைத் தான் பார்க்க முடிந்தது. எனக்காக முத்துக்குமார் வாங்கிய ‘ஒரு பிரம்மசாரியின் டைரி‘ புத்தகம், அவரது புத்தக அலமாரியில் இன்னும் இருப்பதாக கேள்விப்பட்டேன். இந்தச் சம்பவம் முத்துக்குமாருக்கும், எனக்குமான ஓர் உணர்வுப்பூர்வமான நெருக்கத்தை உருவாக்கிவிட்டது.

என்னிடம் உதவி இயக்குநராக சேர வேண்டும் என்கிற தனது ஆசையை முத்துக்குமார் என்னிடம் வெளிப்படுத்தவே இல்லை. என் துணை இயக்குநர் ஆலயமணியிடம் கூறியிருக்கிறார். ‘பேராண்மை‘ பட ஸ்கிரிப்டை தட்டச்சு செய்ய முத்துக்குமாரை வரசொல்லிருந்தோம். அப்போது வேறொரு வேலையில் மும்முரமாக இருந்ததால் தன்னால் வரமுடியவில்லை என்று என் உதவி இயக்குநர் ரோகாந்திடம் முத்துக்குமார் கூறியிருக்கிறார்.

சமூக-அரசியல் அறிவோடு, சினிமா கலையையும் முறையாகக் கற்றுத் தேர்ந்திருந்த முத்துக்குமார் உயிரோடு இருந்திருந்தால் அவர் மூலம் மிகச்சிறந்த படைப்புகள் தமிழ்ச் சினிமா உலகிற்குக் கிடைத்திருக்கும்.

முத்துக்குமாரின் அரசியல் அறிக்கையில் உள்ள சில கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு. ஒருசில கருத்துகளில் முரண்படுகிறேன். அதை எல்லாம் மீறி, முத்துக்குமார் எனும் அந்தத் துருப்புச்சீட்டை நாம் சரியாக பயன்படுத்தவில்லையோ என்கிற குற்றஉணர்வு என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது.
இப்படிக்கு

எஸ்.பி.ஜனநாதன்.

1 comment:

  1. செத்தான் சவமும் காசுக்கு வித்தாச் சரிதான் இல்லியா? தூ

    ReplyDelete