Saturday, January 28, 2012

முத்துக்குமார் சாதித்தது என்ன?




என் கைப்பேசிக்கு அந்த அழைப்பு வரும் போது நேரம் நண்பகல் 12 மணிக்கு மேல் (2009, சன.29) இருக்கும். அன்று வியாழக்கிழமை. அப்போது நான் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ செய்தியாளர். வார இருமுறை வரும் அந்தப் பத்திரிகையின் அந்த இதழுக்கான இறுதிக் கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.

என்னிடம் பேசிய ஒரு செய்தியாளர், ‘பெண்ணே நீ’ பத்திரிகையில் நிருபராகப் பணியாற்றும் செய்தியாளர் ஒருவர் இலங்கைப் பிரச்னைக்காக நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவன் வளாகத்தில் தீக்குளித்துவிட்டார் என்ற தகவலை சொன்னார். அந்த இதழுக்கான ‘வம்பானந்தா’வை (அரசியல் கிசுகிசு) மும்முரமாக எழுதிக் கொண்டிருந்த இணையாசிரிடம் போய் சொன்னேன். “சரியான பைத்தியகாரனா இருப்பான் போல,.. சரி.. எதுக்கும் எடிட்டரிடம் சொல்லிப் பாருங்கள். தீக்குளிப்பைப் பற்றி எழுத இடம் நிச்சயம் இருக்காது” என்றார். ஆசிரியரிடம் போனேன். பிழை திருத்திக் கொண்டிருந்தார். குனிந்த தலை நிமிராமல் சொன்னார்: “இந்த இஸ்யூல சேக்க முடியாது. வம்பானந்தாவில் முடிஞ்சா சேக்கலாம். எதுக்கும் போட்டோகிராபரை மட்டும் அனுப்பி வைங்க”.

திரும்பவும் இணையாசிரியரிடம் வந்தேன். “சரி, அப்போ போட்டோகிராபரை அனுப்புங்க.” என்றவரிடம், “நானும் போகட்டுமா சார்” என்றேன். “எதுக்கு வேஸ்ட்டா? செய்தி போட மாட்டாங்க. சரி சும்மா போயிட்டு வாங்க”.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நான் அடைந்த போது பகல் ஒரு மணி இருக்கும் என்று நினைக்கிறேன். மருத்துவக் கல்லூரி முதல்வர் அறை முன்பு பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சி நிருபர்கள், காமிராமேன்கள் குவிந்திருந்தார்கள். முதல்வர் “அந்தப் பையன் பேரு முத்துக்குமாராம். சிக்ஸ்டி பர்சேன்ட் பர்னிங். இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. எங்க ஸ்டாஃப் கிட்ட சொல்லிவிட்டேன். நீங்கள் போய் அந்தப் பையனை விஷ்வல் எடுத்துக்கலாம்” என்று அனுமதித்தார். அடுத்த சில வினாடிகளில் குறுகலான அந்த மாடிப்படிகளைக் கடந்து முதல் மாடியில் இரும்புக் கேட்டுக்கு முன் நின்றோம்.

அங்கிருந்த சில போலீஸ்காரர்களும், மருத்துவமனை ஊழியர்களும் “டீன் சொன்னாரு.. ஒவ்வொருத்தரா அனுப்பறோம். எடுத்திட்டு வந்திடுங்க” என்று ஒவ்வொருவராக அனுப்பிக் கொண்டிருந்தார். பத்து நிமிடங்கள் கடந்திருக்கும் திபுதிபு என போலீஸ் உயரதிகாரிகள் காவலர்கள் படை சூழ அங்கு வந்தார்கள்.

உள்ளே முத்துக்குமாரின் கருகிய தேகத்தை படம் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். இனி யாரும் படம் எடுக்க முடியாது என்பது எங்களுக்குப் புரிந்து போனது. அதற்கான காரணமும் வந்து சேர்ந்தது.

முத்துக்குமார் தீக்குளித்த இடத்தில் இருந்து அவன் எழுதிய கடிதம் கிடைத்திருக்கிறது. இனி கெடுபிடிகள் அதிகரிக்கும் என்பது புரிந்தது. அடுத்த சில நிமிடங்களில் முத்துக்குமார் இறந்து விட்டான்.

வெள்ளை துணி போர்த்தப்பட்ட முத்துக்குமார் உடல் மார்ச்சுவரியில் கொண்டு செல்லப்பட்டது.

(அப்போது எனக்குத் தெரியாது, அடுத்தாண்டு (2010) இதே நாளில் ‘துருப்புச் சீட்டு-முத்துக்குமாரின் வாழ்க்கை’ என்று இவனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக நான் எழுதியிருப்பேன் என்று. குமுதத்தில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், பொன்னுசாமி என்ற புனைப் பெயரில் அந்தப் புத்தகத்தை எழுதி முடித்தேன். இயக்குநர் ஜெனநாதன் முன்னுரை எழுதியிருந்தார். அந்தப் புத்தகம் இன்னும் முறையாக வாசகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படவில்லை என்ற வருத்தம் எனக்குண்டு. தஞ்சையில் நடந்து வரும் புத்தகக் கண்காட்சியில் சனவரி 29 முதல் துருப்புச் சீட்டு விற்பனைக்கு வைக்கப்படும்)

இனி, முத்துக்குமாரின் இறுதி நாளுக்கு வருவோம். நான் வைகோவின் உதவியாளர் பாலனைத் தொடர்பு கொண்டு விவரத்தைச் சொன்னேன். அதிர்ச்சி அடைந்த அவர், தலைவரிடம் சொல்கிறேன் என்றார். மார்ச்சுவரியில் வைக்கப்பட்ட முத்துக்குமாரின் சடலம் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. தலைவர்கள் வைகோ, ராமதாஸ், திருமாவளவன், பழ.நெடுமாறன் ஆகியோர் வந்திருந்தனர்.

அதே நேரத்தில், வழக்கறிஞர்கள் சிலர் பூவிருந்தவல்லி சாலையில் உள்ள பேங்க் ஆஃப் சிலோனை அடித்து நொறுக்கிவிட்டு நேராக மார்ச்சுவரி முன் வந்து கூடினர். முத்துக்குமாரின் மரணசாசனத்தின் நகல்கள் எனக்குக் கிடைத்தன. அதைப் படிக்கத் தொடங்கியதும், வாழ்வில் அதற்கு முன்பு எப்போதும் ஏற்பட்டிராத உணர்ச்சி! கைகள் நடுநடுங்க படித்துக் கொண்டிருந்தேன்.

அது வெறும் கடிதம் அல்ல, ஆயுதம், நகலாயுதம் என்பதை அறிந்த போது நான் சிலிர்த்துப் போனேன். ‘என்னுடைய உடலை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துங்கள்‘ என்று அறைகூவல் விடுத்த முத்துக்குமாரை நினைக்க நினைக்க அழுகையும் நம் இனத்தை இப்படியொரு நிலைக்குத் தள்ளியவர்களை நினைக்க ஆவேசமும் வந்தது.
கண்களில் முட்டிக் கொண்டு வந்த கண்ணீரும், படபடத்த மனதும் கடிதத்தைத் தொடர்ந்து படிக்க விடாமல் செய்தன.

மார்ச்சுவரி வாசலில் காத்திருந்த இயக்குநர் கற்றது தமிழ் ராமிடம் கடிதத்தின் இன்னொரு நகலைக் கொடுத்தேன்.

அலுவலகத்தில் இருந்து ஆசிரியர் பேசினார். முத்துக்குமார் எழுதியிருப்பதை சுருக்கமாகச் சொன்னேன். உடனே வந்து நியூஸை ஃபைல் பண்ணும்படி கேட்டார். அலுவலகத்துக்குப் போய் என் மடிக் கணினியில் மளமளவென செய்தியை தட்டச்சு செய்தேன். அப்போதுதான் கடிதத்தை முழுவதும் படிக்க முடிந்தது. அப்படியொரு உணர்ச்சி வயப்பட்ட நிலையில் எப்படி அந்தச் செய்தியை எழுதி முடித்தேன் என்பது இன்னொருவரை பெரிய ஆச்சர்யம் தான்.
குமுதம் கார்டூனிஸ்ட் பாலா கடித நகலை வாங்கிப் படித்தவர். அதிர்ச்சி விலகாமல், “என்ன வெற்றி, இப்படியொரு பையன் வாழ்ந்திருக்கான்” என்றார்.

இரவு எட்டு மணிக்கு கொளத்தூரில் இருந்தேன். இயக்குநர் ராமின் நண்பர் (மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்) திருமுருகன்காந்தி, முத்துக்குமாரின் மரண சாசனத்தை நகல் எடுத்து வினியோகித்துக் கொண்டிருந்தார். கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்த முத்துக்குமாரின் முகத்தைப் பார்த்தேன்.

அதற்குப் பின் நடந்ததை எல்லோரும் அறிவோம். முத்துக்குமார் தன்னுடைய உடலை துருப்புச் சீட்டாக்கி விட்டுப் போனான். அவன் எதிர்பார்த்த போர் நிறுத்தம் என்பது நிறைவேறா கனவாகி, முள்ளிவாய்க்காலுக்கும் முள்வேலிக் கம்பிகளுக்கும் நம் சொந்தங்களை கொடுத்துவிட்டு கையறு நிலையில் நிற்கிறோம்.

முடிவல்ல இது. முத்துக்குமார், நமது போராட்டத்தின் தொடக்கம். அவன் ஏற்படுத்திய தாக்கம் தமிழ்ச் சமூகம் உள்ளளவும் நிலைக்கும். அவனது இறுதி ஊர்வலத்தில் கூடிய கூட்டமே அதற்கு சாட்சி! முல்லைப்பெரியாறு உரிமை மீட்புப் போரில் தமிழக எல்லையில் தன்னெழுச்சியாக ஒன்று திரண்ட லட்சக்கணக்கான தமிழ் மக்கள் முகங்களில் முத்துக்குமாரும் தெரிந்தான். அணுஉலை எதிர்ப்பு போராட்டங்களில் முன்னின்ற இளைஞர்கள் மனதில் ஏந்தியிருந்தது, முத்துக்குமாரின் அறிவாயுதத்தையும் தான்.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் அநியாயமாக சிறையில் இருக்கும் மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனைக்கு எதிராக இத்தனை ஆண்டுகளாக இல்லாத கூட்டம் இப்போது கூடுவதற்கும் இந்தத் ‘துருப்புச் சீட்டு’தான் காரணம்.

ஆம்!! ஆங்காங்கே சிதறிக் கிடந்த உணர்வாளர்களை ஒன்று சேர்த்தவன், முத்துக்குமார். மொழி உணர்வு என்பது குறுகிய மனப்பாக்கு என்பதை உடைந்தெறிந்து இன்றை இளைய தலைமுறையினர் இடையேயும் தாய்த் தமிழ்ப் பற்றை விதைத்தவன், முத்துக்குமார். இப்போதெல்லாம் இளைஞர்கள் குறிப்பாக திரைப்பட உதவி இயக்குநர்கள் தமிழ் உணர்வோடு பேசுவதும், இயங்குவதும் முத்துக்குமார் போட்டுத் தந்த பாதையில் தான்.

வெறும் உணர்வில் மட்டுமல்ல அறிவுத் தளத்தில் அவன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப்பெரியது. தமிழ்நாட்டில், தமிழ் இளைஞர்கள் இடையே ஏற்பட்டிருக்கும் பரந்த வாசிப்புப் பழக்கத்திற்கு முத்துக்குமார் ஓர் உந்து சக்தி. அவன் எழுதிய கடிதத்தில் தெறிந்த விஷய ஞானம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் அறிவுத் தேடலை தொடங்கி வைத்திருக்கிறது. முத்துக்குமார் மரணத்துக்கு முன்னும் பின்னும் தமிழகத்தில் பதிப்பான விற்பனையான புத்தகங்களின் எண்ணிக்கையை முறையாக ஆய்வு செய்தால் இந்த உண்மை நிரூபணம் ஆகும்.

முத்துக்குமார் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் நான் வாழும் வரை என்னோடும் எனக்குப் பின்னால் என் மூலம் என் ரத்த உறவுகளோடும் தொடரும். இப்படி ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும் முத்துக்குமார் வாழ்ந்து கொண்டுதான் இருப்பான். அவன் ஏற்றிய விளக்கு அணையாது. இந்த விளக்கு பெரும் தீயாய் மாறும். அந்த நெருப்பில் தமிழினத்தின் மீது படர்ந்திருக்கும் இருள் உடையும்!!

‘துருப்புச் சீட்டு-முத்துக்குமார் வாழ்க்கை’ புத்தகம் வேண்டுவோர்
தொடர்புக்கு-மு.நியாஸ் அகமது, 098945 61336