Wednesday, November 30, 2011

பாலையில் மழை பெய்யட்டும்!!




முகநூல் மற்றும் வலைப்பூவில் எழுதி நிறைய நாட்கள் ஆகிறது. எழுதுவதற்கான அவசியங்கள் இருந்தும் அவகாசம் இல்லாமல் போனதுதான் இதற்குக் காரணம். சினிமா ஆர்வத்தில் சென்னை வந்து வாய்ப்புகள் அமையாததால், செய்தியாளர் ஆனேன். பத்து ஆண்டுகளுக்குப் பின் துணை இயக்குநராக பாலை படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நண்பரும் இயக்குநருமான ம.செந்தமிழன் இயக்கத்தில் பணியாற்றிய அனுபவத்தால் சினிமா மீதான என் காதலும் அறிவும் மேம்பட்டிருக்கிறது. படப்பிடிப்புக்கு முன்பும் பின்பும் அவ்வப்போது வாய்க்கப் பெற்ற எங்கள் வாத்தியார் பாலுமகேந்திராவுடான உரையாடல்களின் போது சினிமாவை பார்க்கவே இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்கிற உண்மை உரைத்தது.
செம்மை வெளியீட்டகம் என்ற நிறுவனத்தின் பெயரில் பாலை தயாரிக்கப்பட்டது. பல்வேறு நண்பர்களின் பண உதவியுடன் ஏறத்தாழ ஓர் ஆண்டு படப்பிடிப்பு மற்றும் பின் தயாரிப்பு வேலைகள் முடிந்து திரைக்கு வந்திருக்கிறது பாலை. (ரூபாய் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கூட நண்பர்கள் அவசர அவசிய நேரங்களில் கொடுத்துதவியதால்தான் எங்களால் பாலையை உருவாக்க முடிந்தது) பாலை உருவாக்கத்தில் என்னுடைய பங்கு ராமருக்கு உதவிய அணில் அளவுக்கே. இதை தன்னடக்கத்திற்காக சொல்லவில்லை. உண்மை அதுவே.
பாலை படத்தைத் திரைக்குக் கொண்டு வருவதில் பெரும் தடைகள் இருந்தன. அதுபற்றி செந்தமிழன் எழுதிய கடிதம் இணைய தளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. (இணைப்பு:http://tamil.webdunia.
com/entertainment/film/article/1111/26/1111126042_1.htm)
தடைகள் கடந்து திரைக்கு வந்த பாலைக்கு கிடைத்த முதல் கட்ட வரவேற்பு (ஓபனிங்) எங்களுக்கு ஆறுதலாகவே இருந்தது. முகமும் முகவரியும் தெரியாத எத்தனையோ பேர் பாலை படத்தைத் தூக்கிப் பிடித்ததும் பிடித்துக் கொண்டிருப்பதும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி! இயக்குநர் பாலுமகேந்திரா படத்தைப் பாராட்டி எழுதிய கடிதமும், படக்குழுவினரை அழைத்துப் பாராட்டியதும் வாழ்வில் மறக்க முடியாத நிமிடங்கள். நானும் செந்தமிழனும் பாலுமகேந்திராவின் மனம் திறந்த பாராட்டால் அழுதே விட்டோம்.
அத்துடன் இயக்குநர்கள் வெ.சேகர், தங்கர் பச்சான், சீமான், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், நண்பர்கள், கார்டூனிஸ்ட் பாலா, மே 17 திருமுருகன் காந்தி போன்றோரின் பாராட்டுகளும் பாலையை கடந்து வந்த எங்கள் பாதங்களுக்கு நிழலாக இருந்தன.
நாங்களே பார்த்து வியந்த செந்தமிழனின் தனித்துவமான சினிமா அறிவால் தரமான ஒலி ஒளி அமைப்புடன் உருவாக்கப்பட்ட பாலைக்கு அதன் தரத்திற்குரிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பதில் எங்களுக்குப் பெரிய வருத்தம். என்ன செய்ய? எங்களால் நல்ல படம் மட்டுமே எடுக்க முடிந்தது. திரையரங்குகளை பணிய வைக்கும் பண மற்றும் அதிகார பலம் எங்களிடம் இல்லை.
இந்த நிலையில் இன்றைக்கு (நவ.30) குமுதம் வாரஇதழில் வெளியாகியிருக்கும் விமர்சனம் பாலை படக்குழுவினரின் நெஞ்சில் பால் வார்த்திருக்கிறது. நல்ல படங்களை அடையாளப்படுத்தி ஆதரிக்கும் ஆனந்த விகடன் விமர்சனமும் நிச்சயம் பாலைக்கான ஆதரவை கூட்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதையெல்லாம் தெரிந்து கொண்டு பாலை படத்தைப் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பரிந்துரைக்க பல ஊர்களில் திரையரங்குகளே கிடைக்கவில்லை என்பதோடு கிடைத்த இடங்களில் தரமான திரையரங்குகளும் இல்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.
நல்ல படத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் நம்முடைய ரசிகர்கள், பாலைக்கும் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. சென்னை தியாகராயர் நகர் கிருஷ்ணவேணியில் எழுத்தாளர் அஜயன் பாலா பாலை படத்தைப் பார்த்ததாக உதவி இயக்குநர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். நட்சத்திர ஹோட்டல்களில் செயற்கையான உபசரிப்புடன் பரிமாறப்படும் பீட்சாவை விட, தெருவோரக் கடையில் கிடைக்கும் நம்மூர் சூடான ஆரோக்கிமான இட்லி உயர்ந்ததுதானே. தரமான படங்களை ஆதரிக்கும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு இடப்பட்ட சவால்களாகவே இதை நான் பார்க்கிறேன்.
இந்தப் படத்திற்குக் கிடைக்கும் வரவேற்பு, சினிமாவில் மீண்டும் ஒரு ஆரோக்கியமான புது அத்தியாயத்தை உருவாக்கும் என்பதை தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன். இனி முடிவு உங்கள் கையில். நீங்கள் பார்த்தால் பாலையில் மழை பெய்யும்.. உங்கள் பார்வைக்காக காத்துக் கொண்டிருக்கிறது. பாலை..

-வே.வெற்றிவேல் சந்திரசேகர்