Monday, September 6, 2010

ஜோதியை அணைத்த ‘மன்னர் ஜவகர்’கள்!!



பத்தாம் வகுப்பில், 500க்கு 475 மதிப்பெண்கள்! பனிரெண்டாம் வகுப்பில் 1200க்கு 1105 மதிப்பெண்கள்!! நாமக்கல் மாவட்டம் முள்ளக்குறிச்சி அருந்ததியர் தெருவில் வசித்து வந்த 18 வயதான ஜோதி பெற்ற மதிப்பெண்கள் தான் இவை. பத்தாம் வகுப்பு வரை அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் படிப்பு. நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி இவரை இலவசமாக பனிரெண்டாம் வகுப்பு படிக்கவைத்தது.

அரசு ஒதுக்கீட்டில் சென்னை அண்ணா பல்கலையில் பொறியியல் (இசிஇ) படிக்க வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. இதற்கும் அவரது தாத்தா விவசாயக் கூலியாக வேலை பார்க்கும் பண்ணையின் உரிமையாளர் பணஉதவி செய்து பல்கலையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு ஜோதி உயிருடன் இல்லை.

கடந்த மாதம்தான் ஜோதி பல்கலையில் சேர்ந்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்கலை விடுதியிலிருந்து வீடுக்குச் சென்றவர், துப்பட்டாவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கிறார். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஜோதி தமிழ் வழியில் படித்த கிராமத்து மாணவி. சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியாத இவரை கல்லூரியில் சகமாணவர்கள் கேலியும் கிண்டலும் செய்திருக்கிறார்கள். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். ஆனால் “மூன்று ஆண்டுகளாக எங்கள் பல்கலையில் ராக்கிங் கிடையாது. ஜோதியின் தற்கொலைக்குக் காரணம் குடும்பப் பிரச்னைதான்” என்று துணை வேந்தர் மன்னர் ஜவகர் கூறுகிறார். பதினெட்டு ஆண்டுகளாக இல்லாத குடும்பப் பிரச்னை அண்ணா பல்கலையில் சேர்ந்த ஒரு மாதத்திற்குள் வந்தது எப்படி? அதுவும் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குப்போகுமா என்பதை யோசிக்க வேண்டும்.

பத்திரிகைகளும் ஜோதியின் தற்கொலைக்கு ராக்கிங் தான் காரணம் என்று தவறுதலாக எழுதுகிறார்கள். உண்மையில் இது ராக்கிங் கிடையாது. ஆங்கிலம் பேசத் தெரியாத கிராமத்து மாணவ மாணவிகளை கேலி கிண்டல் செய்யும் போக்கிது! இதை சீனியர் மாணவர்கள் என்றில்லை சக மாணவர்களும் கூட செய்திருக்கலாம். மாணவர்கள் என்றில்லை சில ஆசிரியர்களும் ஆங்கிலம் தெரியாத மாணவ மாணவிகளை எளக்காரமாக நடத்துவதை மறுக்கமுடியாது.

தமிழ் வழியில் படித்த அதுவும் கிராமத்து மாணவ மாணவிகள் சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு கல்வி கற்க வரும்போது ஏராளமான சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. இப்போது ஜோதியின் தற்கொலை மூலமாக அந்தப் பிரச்னை வெளிப்பட்டிருக்கிறது. பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்ததால்தான் கிராமத்து
மாணவ மாணவிகள் அதிகளவில் இந்தப் படிப்புகளில் சேர வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதுவும் ஜோதி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இடஒதுக்கீட்டால் மேல்சாதி உயர்த்தட்டு மக்களின் கல்வி வாய்ப்பு மறுக்கப்படுவதாக ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. அதை நகரத்து மேல்தட்டு இளம் மாணவர்களின் மனதில் அவர்களின் பெற்றோர்களும், சில ஊடகங்களும் பதியச் செய்கிறார்கள். இதனாலேயே ஜோதி போன்ற மாணவிகள் ஆயிரம் தடைகளைத் தாண்டி முதல் தலைமுறையாக கல்லூரிகளுக்குள் நுழையும்போது நகரத்தைச் சேர்ந்த சகமாணவர்களாலேயே கேலியும், கிண்டலுக்கும் ஆளாக நேரிடுகிறது.

சமூகவியல் இளங்கலை முடித்துவிட்டு (கோவை பூ.சா.கோ) அதே கல்லூரியில் எம்.ஏ., மாஸ் கம்யூனிகேஷன் மக்கள் தொடர்பியல் துறையில் சேர்ந்தேன். அப்போது துறைத் தலைவரான பிச்சாண்டி, இளங்கலையில் ஆங்கிலம் இலக்கியம் படித்தவர்கள் மட்டுமே மாஸ் கம்யூனிகேஷன் படிக்க முடியும் என்று கூறி மாணவர்களை பயமுறுத்தினார். இதனால் சில மாணவர்கள் பயந்தடித்துக் கொண்டு வேறு துறைகளுக்கு மாறிச்சென்றனர். நானும் அப்படிச் சென்றிருந்தால் அது எனக்கேற்பட்ட மிகப்பெரிய இழப்பாக இருந்திருக்கும். பின்னாளில் ஆங்கில இலக்கியம் படித்த மாணவிகளை விட நான் கூடுதல் மதிப்பெண் பெற்றேன்.

ஜோதியும் பொறுமை காத்திருந்தால் சிறந்த பொறியாளராக வந்திருப்பார். பள்ளிக் கல்வியில் முதல் மாணவியாக சிறந்து விளங்கிய இவரால் அண்ணா பல்கலையில் நேர்ந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்திருக்கிறார். இத்தனையும் மறைத்துவிட்டு “எங்களிடம் தவறில்லை. ஜோதியின் குடும்பத்தினர்தான் தவறு செய்திருக்கிறார்கள்“ என்று வாய்கூசாமல் மன்னர் ஜவகர் பேசுகிறார். மீடியாக்களும் மன்னர் ஜவகரை வழிமொழிகின்றன. முன்னதாக ஜோதியைப் பற்றி காவல்துறை மற்றும் ஊடகங்களிடம் எதுவும் பேசக்கூடாது என்று மன்னர் ஜவகர் தன்னுடைய மாணவர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார். மடியில் கனமில்லை என்றால் வழியில் எதற்குப் பயம்?

ஜோதியின் தற்கொலை, ஏழை-கிராமத்து மற்றும் தமிழ் வழியில் படிக்கும் மாணவிகள் மீது நமது கல்வி முறை ஏவும் வன்முறையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. இந்த உண்மையை மறைக்க முயல்வதை கைவிட்டு, இந்த சமூகக் குற்றத்தை சரிசெய்தால் (கல்வி)ஜோதிகள் அணையாமல் இருந்து தன் சமூகத்துக்கு வெளிச்சம் பாய்ச்சும்!