Wednesday, December 30, 2009

புத்தகக் கண்காட்சியில் எனது புத்தகம்!


அண்மையில் நான் எழுதிய ‘மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம்-இந்திய அரசின் கொள்ளைத் திட்டம்’ என்ற சிறு நூல், புத்தகக் கண்காட்சி அரங்கு (பூவுலகின் நண்பர்கள்) எண் இருநூற்றி முப்பத்தி மூன்றில் கிடைக்கிறது. (விலை ரூ.எட்டு மட்டுமே)


அதே அரங்கில், ‘நெய்தல்- கண்ணீரும் கண்ணீரும் சார்ந்த இடமும்’ என்ற ஆவணப் படமும் கிடைக்கும். மீன்பிடி சட்டத்தின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், உள்ளாட்டு மீனவர்களை மீன்பிடித் தொழிலில் இருந்து வெளியேற்றும் போக்கையும் கடைபிடிக்கும் இந்திய அரசின் முகத்தைக் கிழிக்கிறது, இந்த ஆவணப் படம். விலை ரூ.ஐம்பது.

Tuesday, December 8, 2009

“குஷ்பு சொன்னா சரி…” ஜொள்விட்ட கலைஞர் - துடைத்துவிட்ட ரஜினியும் கமலும்...


காலையில் தினத்தந்தியைப் பார்க்க நேரிட்டது. திரைப்படத் துறையினருக்கான தமிழ்நாடு அரசு விருது வழங்கும் விழா நேற்று நடந்திருக்கிறது. ரஜினிக்கு சிறந்த நடிகர் விருது, கலைஞர் தனக்குத்தானே தந்துகொண்ட சிறந்த உரையாடல் ஆசிரியர் (உளியின் ஓசைக்காம்) விருது போன்ற அபத்தங்களைப் பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? (வெட்கம் கெட்ட ஜென்மங்கள்)

விருது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் குஷ்பு! பெரியாரின் கொள்கைகள் என்பதை “பெரியாரின் கொள்ளைகள்” என்றும், உளியின் ஓசை என்பதை “ஒலியின் ஓசை” என்றும், குத்தகைதாரர் என்பதை “குத்துகைதாரர்” என்றும் பேச பார்வையாளர்கள் தரப்பில் இருந்து ஒரே கூச்சலாம். சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதுக்கு கலைஞர் பெயர் அறிவிக்கப்படும்போது, கலைஞர் பற்றிய புகழுரையை வாசிக்க முயன்ற குஷ்புவைத் தடுத்த அமைச்சர் பரிதி இளம்பழுதி (எங்கே சொதப்பிவிடுவாரோ என்ற பயத்தில்) தானே கலைஞரைப் புகழ்ந்து பேசி விருதை வழங்க ரஜினி, கமலை அழைத்திருக்கிறார். யாராக இருந்தாலும் பெரியாரைப் பற்றி தவறுதலாகப் பேசலாம். கலைஞரைப் பற்றி தவறாகப் பேச அனுமதிக்க முடியுமா, என்ன?
அதன்பின்பு குஷ்புவுக்குப் பதில் அவரே நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாறிவிட்டாராம். (அந்த ஆளு அமைச்சராக இருப்பதற்கு இது எவ்வளவோ தேவலை) நிகழ்ச்சியில் பேசிய கமல், “குஷ்பு சிறப்பாகத் தமிழ்ப் பேசுவதை கலைஞர் என்னிடம் குறிப்பிட்டார். குஷ்புவுக்கு வாழ்த்துகள்” என்று சொல்லி யிருக்கிறார். பெரியாரைக் கொள்ளையன் என்று சொன்னால் கலைஞருக்கு நிச்சயம் பிடிக்கும். அதுவும் குஷ்பு வாயால் என்ன சொன்னாலும் பெரியவர் கலைஞருக்கு பிடிக்காமல் போகாது. முத்தமிழ் அறிஞர், முத்தமிழ் வித்தகர், தமிழினத் தலைவரே சொல்லிவிட்டார், குஷ்புவின் தமிழ் சிறப்பானது என்று. எனவே, குஷ்வின் தமிழை ஏற்றுக்கொள்ள முடியாமல் கூச்சலிட்ட பார்வையாளர்கள் எல்லாம் அ.தி.மு.க.வினராகத்தான் இருக்க வேண்டும்.

விழாவில் பேசிய ரஜினி, “கலைஞர் யாரை சேர்த்துக் கொண்டாலும் அவர்கள் பெரிய ஆளாகிவிடுவார்கள். இல்லையென்றால் சாய்பாபா அவரை வீட்டிற்கே வந்து சந்தித்திருப்பாரா?” என்று பேசியிருக்கிறார். வெறும் கைகளில் விபூதி கொண்டு வரும் மாயாஜாலக்காரர், கடவுளின் அவதாரம் சாய்பாபாவைப் பெரிய ஆளாக நினைக்கும் ரஜினியின் பகுத்தறிவை நினைக்கும் போது புல்லரிக்கிறது. வெறும் கைகளில் தங்க சங்கிலி கொண்டு வரும் சாய்பாபாவிடம் சொல்லி, தன் மகள் வாங்கிய கோடிக்கணக்கான கடனையும் அவர் மீது நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கையும் ஒன்றும் இல்லாமல் செய்ய ரஜினி முயன்று கொண்டிருப்பாரோ?
உலகத் தரத்துக்கு தமிழ் சினிமாவை உயர்த்தத் துடிக்கும் கமலும் – மூவாயிரம் ஆண்டுகள் உயிர்வாழும் பாபா தரிசனம் கிடைத்த ஆன்மீனகவாதி ரஜினியும் உளியின் ஓசை படத்துக்கு சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதுக்கு கலைஞர் தகுதியானவர் என்று சொன்னால் மிகச் சரியாகத்தான் இருக்கும். பாபாவை வணங்குபவர்கள், யோகா, தியானம் செய்பவர்கள் பொய்யே பேசமாட்டார்கள். (ஆனால் தான் வாங்கும் சம்பளத்தை மட்டும் வெளியே சொல்லவே மாட்டார்)
கலைஞர், குஷ்பு, ரஜினி, கமல், அவர்கள் எல்லாம் தமிழனையும், தமிழ்நாட்டையும் உயர்த்தாமல் உறங்க மாட்டார்கள். வாழ்க தமிழினம், வளர்க தமிழ்.