Sunday, November 21, 2010

மனம் திறக்கிறேன்...!சரிகாஷா என்ற பெயரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். ஈவ் டீசிங்-க்கு எதிராக சட்டப்பேரவையில் தனிச்சட்டம் கொண்டுவரக் காரணமான பெண். வன்பகடிக்கு தன் உயிரையே பறிகொடுத்தவள். அந்தக் காலகட்டத்தில் எங்கு திரும்பினாலும் சரிகாஷாதான். ஒரு பெண்ணின் மரணம் தமிழகத்தில் இந்தளவுக்கு இதற்கு முன்பு பேசப்பட்டிருக்குமா என்பது சந்தேகம் தான். இதற்கு என்ன காரணம்?

அந்தச் சம்பவம் நடந்ததும் சரிகாஷாவின் முகம் பத்திரிகைகளில் வெளியானது. ஈவ் டீசிங் பற்றி அப்போது யார் பேசினாலும் அந்த முகம் ஞாபகம் வந்து போகும் அளவுக்கு அழகு வடியும் முகம் அந்தப் பெண்ணுக்கு. குமரி மாவட்டத்தில் ஈவ் டீசிங்கிற்கு சரிகாஷாவுக்கு முன்பும் பின்பும் பல இளம் பெண்கள் பலியானார்கள். பாதிக்கப்பட்டார்கள். ஆனாலும் சரிகாஷாவுக்குக் கிடைத்த அனுதாபமும் கவனிப்பும் அவர்களுக்கெல்லாம் கிடைக்கவில்லை.

அதே குமரி மாவட்டத்தில் என்று நினைக்கிறேன், காதலிக்க மறுத்த அக்காள் தங்கை மீது ஆசிட் ஊற்றப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பணஉதவி அளித்த கதையெல்லாம் கூட நடந்தது. அந்தப் பெண்களின் முகமோ, பெயரோ நமக்கு இப்போது ஞாபகமில்லையே?

‘சிகப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்‘ என்ற வடிவேலு டைலாக்கை இந்த இடத்தில் ஞாபகப்படுத்துவது சரியாக இருக்கும் . பாதிக்கப்படும் பெண்கள் அழகாக இருந்துவிட்டால் அவர்கள் எப்போதும் கூடுதல் கவனத்தைப் பெறுவார்கள் என்பதை யாராவது மறுக்க முடியுமா? பத்திரிகைகளும் அழகான பெண்கள் என்றால் அவர்களின் புகைப்படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பத் திரும்ப பிரசுரிக்கத் தயங்கியதில்லை. சரிகாஷா விஷயத்திலும் அதுதான் நடந்தது.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். செங்கற்பட்டில் சாலையோரம் கட்டுமானத் தொழிலாளர்கள் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு தொழிலாளியின் பெண் குழந்தையை தூங்கிச் சென்ற அவ்ர்களில் ஒரு காமுகன், அந்தக் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்த பாறையில் அடித்துக் கொண்டிருக்கிறான். பின்னர் ஒன்றும் தெரியாதவன் போல் வந்து அதே இடத்தில் படுத்துக் கொண்டான். அடுத்த நாள் அவனும் அந்தக் குழந்தைகயை தேடுவது போல் நடித்திருக்கிறான். குழந்தையின் சிதைந்த சடலம் கிடைக்க போலீஸ் விசாரணையில் அந்தக் காமுகனும் சிக்கினான்.

இப்போது அனேகமாக அவன் சிறையில் இருப்பான் என்று நினைக்கிறேன். இந்தச் செய்தி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? எத்தனை பத்திரிகைகள் அது பற்றி எழுதின. அந்தக் குழந்தையின் இறுதி ஊர்வலத்தில் செங்கற்பட்டு மக்கள் கூட்டமாக கலந்து கொள்ளவில்லையே ஏன்?

ஒரே நேரத்தில் கட்டுமானத் தொழிலாளியும் ஜவுளிக்கடை நடத்தும் பணக்கார மார்வாடியும் தங்கள் குழந்தைகளைக் காணவில்லை என்று காவல் துறையினரிடம் புகார் கொடுக்கச் சென்றால் யாருடைய புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்? மார்வாடி போலீஸ்காரர்களை தன்னுடைய சொந்தக் காரில் உட்காரவைத்து குழந்தையைத் தேடிச் செல்வான். கட்டுமானத் தொழிலாளி? இதுதானே யதார்த்தம்!

கோவை சம்பவத்திலும் இதேதான் நடந்தது. மார்வாடி, பணக்காரனும் கூட. காணாமல் போன அந்தக் குழந்தைகளின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டன. கோவை மக்களின் ஒட்டுமொத்த அனுதாபமும் கவனிப்பும் அந்தக் குழந்தைகளின் மீது விழுந்தன. அவர்களின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டனர். அந்த அனுதாபம் கொலையாளி மீது வெறுப்பாக மாறியது.

மார்வாடிகளின் கோரிக்கை போலீசின் காதுகளில் விழும். அவர்கள் என்ன தொழிலாளிகளா இல்லை தங்கள் உரிமைக்காகப் போராடும் பாட்டாளி வர்க்கமா? பணக்கார மார்வாடிகள் ஆயிற்றே. அவர்களுக்கு உடனடியாக நீதி கிடைக்கச் செய்ய வேண்டும், என்பதற்காக நடத்தப்பட்டதுதான் அந்த என்கவுன்டர். (இதில் நடந்த ஒரு நன்மை என்னவென்றால், என்கவுன்டர்கள் எல்லாம் ஜோடிக்கப்பட்டவைதான் என்பதை அனைத்துத் தரப்பு மக்கள் உணர்ந்துவிட்டார்கள்)

போலீஸார் சொந்த லாபமின்றி இதைச் செய்திருக்க மாட்டார்கள். மார்வாடிகள் அவர்களை ‘கவனித்து’ விட்டார்கள் என்று எனக்கு வரும் செய்திகள் சொல்கின்றன. என்கவுன்டரில் கொல்லப்பட்ட வெங்கடேசப் பண்ணையாரின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து, மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தது, நாடார் ஓட்டு வங்கிக்காகவே. இப்போது மார்வாடிகளின் ஓட்டு வங்கியைக் குறிவைத்து இந்த என்கவுன்டர் நடத்த அரசும் அனுமதி அளித்திருக்கிறது. இல்லை என்றால் சட்டப்பேரவை கூடும் நேரத்தில் இப்படியொரு என்கவுன்டர் நடத்த அனுமதி கிடைத்திருக்காது.

ஓர் அரசின் ஓட்டு அரசியலையும் அந்த அரசுக்காக இயங்கும் காவல்துறையின் அடவாடித் தனத்தையும் புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக கோயமுத்தூர் காரர்களும், உணர்ச்சிவயப்பட்ட பலரும் அவர்களை ஆதரிக்கிறார்கள். போலீஸ்காரர்களிடம் நியாயத்தை எதிர்பார்ப்பதும் அவர்கள் நியாயமாக நடந்திருப்பார்கள் என்று நம்புவதும் ஆபத்தானது. அவர்கள் என்றைக்குமே அரசின் அடையாட்கள்.. பணக்காரர்களின் வேலையாட்கள்... எங்காவது விதிவிலக்காக சிலர் இருக்கலாம். மேற்கு மண்டல ஐ.ஜியாக இருந்த சுப்பிரமணி உண்மையிலேயே மனிதாபிமானம் நிறைந்த ஒரு காவல் அதிகாரி. ஆனால் ஒட்டுமொத்த காவல் துறையையும் அவரை வைத்து மதிப்பிட முடியாது.

அந்தக் குழந்தைகளை கொன்ற கொடூரனுக்குத் தேவை மனநல சிகிச்சை அல்லது சிறை தண்டனை. அதைவிடுத்து இந்தத் தண்டனை சரியென்றால், டிவி ஷோக்களில் சின்னஞ்சிறிய குழந்தைகளுக்கு ஆபாசமாக ஆடை அணிவித்து ஆடவைத்து அழகு பார்க்கும் பெற்றோர்களையும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் அதை ரசிக்கும் பார்வையாளர்களான நம்மையும் என்கவுன்டர் செய்யலாம் தப்பில்லை....

Sunday, November 14, 2010

மலையாளிகளுக்கு ஓணம்! மார்வாடிகளுக்கு என்கவுன்டர்!!-ஒரு கோணல் பார்வை

மோதல் சாவு, அதாங்க என்கவுன்டர். சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றம் கூடும் தருணத்தில் மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, இந்த முறை பயன்பட்டது கோவையில் நடந்த மோகன கிருஷ்ணனின் என்கவுன்டர் சாவு.

கடந்த மாதம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்த்த விவகாரம், இரண்டு பள்ளிக் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டது. சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து அந்தச் சிறுமியையும் அவளது சகோதரனையும் கொன்ற மகிழுந்து ஓட்டுநர் மோகன கிருஷ்ணன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வழக்கம் போல் அதற்கென புனையப்பட்ட கதைகளுடன் இந்த என்கவுன்டர் நடந்து முடிந்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பொதுமக்கள், காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஏகோபித்த ஆதரவளித்துள்ளனர். இதை எதிர்பார்த்துதான் இந்த என்கவுன்டரும் நடந்திருக்கிறது. என்கவுன்டர் நடத்திய கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபுவை பூங்கொத்துடன் சென்ற பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.

இந்த என்கவுன்டர் பற்றி நாளிதழ்களில் செய்திகள் வெளியான அதே நாளில் டென்னீஸ் வீராங்கனையும் பள்ளி மாணவியுமான ருசிகா மானபங்க வழக்கில் ஹரியாணா முன்னாள் டிஜிபி ரத்தோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட செய்தியும் வெளியாகியிருந்தது. ரத்தோரின் பாலியல் கொடுமையால் அந்த மாணவி 1990-ல் தற்கொலை செய்து கொண்டார். ருசிகா வழக்கில் கீழ் நீதிமன்றத்தால் ரத்தோருக்கு ஆறு மாதம் (!) தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து ருசிகாவின் பெற்றோர் உயர்நீதிமன்றம் சென்றனர். அங்கே தண்டனைக் காலம் 18 மாதங்களாக அதிகரிக்கப்பட்டது. கோவை மாணவிக்கு இருந்த நியாயங்கள் அனைத்தும் ருசிகாவுக்கும் உண்டு என்றால் ரத்தோர் இன்னும் உயிருடன் நடமாட என்ன காரணம்?

காவல்துறையினரால் மோதல் சாவில் கொல்லப்படுபவர்கள் எல்லாம் கொடுங்குற்றவாளிகள் என்றே வைத்துக் கொண்டாலும், அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறையினரால் என்கவுன்டரில் கொல்லப்பட்ட வெங்கடேசப் பண்ணையாரின் மனைவிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும், இந்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் பதவியை தி.மு.க. பெற்று தந்ததை எந்த வகையில் சேர்ப்பது? என்கவுன்டர் செய்யப்பட்ட வீரப்பன் விவகாரத்திலும் அ.தி.மு.க.வின் நிலைப்பாடும், தி.மு.க. நிலைப்பாடும் நேர் எதிராக இருந்ததை இங்கே கவனிக்க வேண்டும்.

குற்றவாளிகளில் தங்களுக்குப் பிடிக்காதவர்களையும், தங்களுக்கு எதிரானவர்களையும் மட்டுமே என்கவுன்டர் செய்வதை இந்த அரசுகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. என்கவுன்டர் என்பதே குற்றத்தை குறைக்கும் அரசின் எண்ணமாக அதை ஆதரிப்பவர்களால் பார்க்கப்படுகிறது. உண்மையில் அரசுக்கு அப்படியொரு எண்ணம் இல்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை.

கோவை நிகழ்வைப் பொறுத்தவரையில், கடத்திக் கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மார்வாடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கோவையில் மார்வாடி உள்ளிட்ட வட இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், துணி-நகை உள்ளிட்ட பணம் கொழிக்கும் முக்கிய வர்த்தகங்களில் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதையும் மறுக்க முடியாது.

பணத்துக்காக அந்தக் குழந்தைகளை கடத்திக் கொலை செய்த நிகழ்வு கொடூரமானதும், தண்டிக்கத்தக்கதும் என்பதில் எந்த கருத்து வேறுபாடும் யாருக்கும் இல்லை. நேரடியாகப் பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பமும் அவர்களின் உறவினர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மக்களுமே அந்தக் குழந்தைகளுக்காக கண்ணீர் வடித்தனர். அதுதான் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்தியிருக்கிறது. எதையும் ஓட்டுகளாக்கி விட வேண்டும் என்று நாக்கைத் தொங்க விட்டு அலையும் கருணாநிதி அரசு, அந்தக் குழந்தைகளுக்காக எழுந்த அனுதாபத்தையும் நாசுக்காக பயன்படுத்திக் கொண்டது.

அதாவது, மார்வாடிகளின் வாக்குகளைக் குறிவைத்தே இந்த என்கவுன்டர் நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்கு கோவைக்கு வந்த கருணாநிதி, அங்கே பெரும்பான்மையாக வாழும் கேரள மக்களின் வாக்குகளை குறிவைத்து ஓணம் பண்டிகைக்கு அரசு விடுமுறை அளிப்பேன் என்று வாக்குறுதியளித்து அதை நிறைவேற்றினார். மலையாளிகளுக்கு ஓணம் என்றால் இந்திக்காரர்களுக்கு என்கவுன்டர்!

சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற அவை கூடும் போது இப்படியொரு என்கவுன்டர் நடத்தியிருப்பதையும் கவனிக்க வேண்டும். விலைவாசி, ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற விவகாரங்களில் இருந்து மக்களை திசை திருப்பவும் இந்த என்கவுன்டர் உதவும் என்று கங்காணி கருணாநிதி அரசு நினைத்திருக்கலாம். என்கவுன்டர் என்பது மனித உரிமை மீறல் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்க, என்கவுன்ட்ர் என்பதே வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆயுதம் என்று கருணாநிதி சிரித்துக் கொண்டிருக்கிறார். தமிழன் கொத்துக் கொத்தாக செத்தாலும் பதவி போதும் என்று பக்குவமாக நடந்து கொண்ட கருணாநிதியிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

Wednesday, November 10, 2010

அருந்ததி ராய் சீமான் :- ஓர் ஒப்பீடு
அருந்ததிராயின் கருத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் விவாதங்கள் ஊடகங்களால் முன்வைக்கப்படுகின்றன. அப்படி என்ன சொல்லிவிட்டார் அருந்ததி ராய்? “காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி அல்ல என்பதுதான் வரலாற்று உண்மை” என்று சொல்லியிருக்கிறார். ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “இந்த வரலாறு எல்லோரும் அறிந்ததே. நான் ஒன்றும் மக்களுக்கு ஆரம்பக்கல்வி நிலையில் சரித்திரப் பாடம் புகட்டவில்லை ஆனால் சிக்கலான காஷ்மீர் வரலாறு இன்றைய காஷ்மீர் சிக்கலுக்கும் காரணமில்லை என்றால், இந்திய அரசு 7 இலட்சம் ராணுவ வீரர்களை காஷ்மீரில் ஏன் நிறுத்தி வைத்திருக்கிறது? காஷ்மீர் தெருக்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்த நிஜங்களைக் கண்டு கொள்ளாமல் எப்போது நாம் ஏன் நம் கண்களை மூடிக் கொள்கிறோம்?” என்று பதிலளித்திருக்கிறார், அ.ராய்.

இந்தக் கருத்துக்குத்தான் டைம்ஸ் நவ் செய்தித் தொலைக்காட்சி அருந்ததிராயை தேசத் துரோகி என்று வர்ணிக்கிறது. காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் அருந்ததி ராயின் அக்கருத்துகள் மிகவும் சரியானதே.

அருந்ததி ராயின் அந்தப் பேச்சை அடுத்து, பா.ஜ.க. போன்ற இந்துத்துவக் கட்சிகளும், இந்திய தேசியத்தைத் தூக்கிப்பிடிக்கும் சில ஆங்கில இந்தி ஊடகங்களும் அருந்ததிராயைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. அருந்ததிராயின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிரானதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம் என்று இந்திய அரசும் அறிவித்தது. இதற்கிடையே, பா.ஜ.க. உள்ளிட்ட சில இந்துத்துவ அமைப்புகள் அருந்ததிராயின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்தளவுக்கு எதிர்ப்பு இருந்தும் அருந்ததிராயைக் கைது செய்யப் போவதில்லை என்று இந்திய அரசு அறிவித்துவிட்டது. இந்திய அரசு அருந்ததி ராயை ஏன் கைது செய்ய வில்லை என்பது ஆராய வேண்டிய கேள்வி. அருந்ததிராயைக் கைது செய்யாமல் தவிர்ப்பதற்கு பா.ஜ.க. கோரிக்கை விடுக்கிறது; அதற்கு அடிபணியக் கூடாது என்ற அரசியல் காரணம் மட்டுமே காரணம் அல்ல. அருந்ததிராய் இந்திய அளவில் அறியப்பட்ட சமூகப் போராளி. அதற்கு மேலும் அருந்ததி ராய் கேரளத் தாய்க்கும் வங்காள தந்தைக்கும் பிறந்தவர். ஆங்கிலத்தில் எழுதக் கூடியவர். (தில்லியில் படித்ததால் இந்தி பேசக் கூடியவர்). இன்னும் பச்சையாக சொல்ல வேண்டும் என்றால் அருந்ததி ராய் தமிழர் அல்ல.இவைதான் அவரைக் கைது செய்யாமல் இருப்பதற்கான காரணங்கள்.

சரி, நேராக விஷயத்துக்கு வருகிறேன். சீமான் ராமேஸ்வரத்தில் பேசுகிறார். ஈரோட்டில் பேசுகிறார். புதுவையில் பேசுகிறார். சென்னையில் பேசுகிறார். அந்தப் பேச்சுகளுக்கு எல்லாம் அவர் கைது செய்யப்படுகிறார். சீமானை ஏன் கைது செய்யவில்லை என்று (பரம) எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா அறிவிக்கை விடுகிறார். உடனே தி.மு.க. அரசு அவரைக் கைது செய்கிறது. சீமானை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கேட்கிறது, உடனே கலைஞர் கைது செய்ய உத்தரவிடுகிறார்.

இத்தனைக்கும் அருந்ததிராய் பேசியது, இந்தியத் தேசியத்துக்கு எதிராக. சீமான் பேசியது இலங்கை அரசுக்கு எதிராக. அருந்ததிராயை கைது செய்ய மத்திய அரசு ஆலோசனை செய்கிறது. ஆனால் சீமானைக் கைது செய்வதற்கு முன்பு இதுபோன்ற எந்த ஆலோசனையும் நடக்கவில்லையே ஏன்? நான் அருந்ததிராய்க்கு எதிரானவனல்ல. சீமானுக்கு ஆதரவாளனும் அல்ல. (தேவர் சிலைக்கு மாலை அணிவித்தது, தேர்தலில் போட்டியிடும் அவரது முடிவு உள்ளிட்ட விவகாரங்களில் அவருடன் வேறுபடுகிறேன்)

வடஇந்திய ஊடகங்கள் அருந்ததிராய்க்கு எதிராக செயல்படுகின்றன என்றும் அருந்ததி ராய் வீடு தாக்கப்பட்டது என்றும் சொல்லி தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் போராட்டத்துக்குத் தயாராகி வருகிறார்கள். இந்தப் போராட்டடும் அவசியமே. அதை நான் வரவேற்கிறேன். ஆனால் தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் எல்லாம் தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்கு குரல் கொடுக்கிறதா என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். சினிமாக்காரர் மணிவண்ணன், சினிமாக்காரர் பாரதிராஜா என்று இன்றுவரை எழுதும் தினமலரை எதிர்த்து இவர்கள் போராடவில்லையே ஏன்? (சினிமாக்காரர் பாலச்சந்தர், சினிமாக்காரர் மணிரத்னம் என்று எழுதுவார்களா?)

கடந்த 2009 மே மாதம் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து தமிழகக் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்று, யாராவது கேட்டுச் சொல்வார்களா? தமிழ் மொழி சமஸ்கிருத்ததையும், இந்தியையும் எதிர்த்து நிற்கிறது. இதனாலேயே தமிழனை இன்னும் எதிரியாகவே பார்க்கிறது, இந்தி(ய) அரசு. அப்படிப்பட்ட இந்திய அரசுக்கு கேடுகெட்ட திராவிட கட்சிகள் துணை போய் அவர்கள் கைகாட்டும் நபர்களை எல்லாம் கைது செய்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் வைகோ கைதும், தி.மு.க. ஆட்சியில் சீமான் கைதும் இதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. (தற்போது வைகோ அ.தி.மு.க.வை ஆதரிப்பது போல், நாளை சீமான் தி.மு.க.வை ஆதரித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.)

இந்தியாவுக்கு எதிராக கருத்து சொன்ன அருந்ததிராயைக் கைது செய்ய இந்திய அரசு யோசிக்கும் வேளையில் இலங்கை அரசுக்கு எதிராக கருத்து சொன்ன சீமானை கைது செய்தது ஏன் என்று இந்தப் போராட்டக்காரர்கள் கேட்க வேண்டும். டைம்ஸ் நவ்வை எதிர்க்கும் அதே வேளையில் இங்கே தமிழர்களுக்கு விரோதமாக செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
இந்திய அரசால் புறக்கணிக்குள்ளாகும் ஆறு கோடி தமிழர்களின் பிரதிநிதியாகவே இதைக் கேட்கிறேன். மற்றபடி, நானும் தோழர் அருந்ததி ராய் போல் காஷ்மீர் மக்களின் விடுதலையை ஆதரிக்கிறேன்.