Tuesday, May 11, 2010

பார்வதியம்மாள் மீது தினமலர் அவதூறு... கண்டனத்தைப் பதிவு செய்யுங்கள்..
காலையில் தினமலர் செய்தித் தாளைப் பிரித்ததும் எனக்கேற்பட்ட உணர்வுகளை என்னவென்று சொல்வது! தினமலரின் வக்கிரத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பார்வதியம்மாள் வருகைக்கு நிபந்தனைகள் விதிக்கவில்லை (அடப்பாவிகளா?) என்ற ரீதியில் முதல்வர் கருணாநிதி பேரவையில் பேசிய செய்தி வெளியாகியிருந்தது. அந்தச் செய்தியில் தலைப்பு முதற்கொண்டு செய்தியில் எல்லா இடத்திலும் ‘பார்வதி‘ என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதுவும் கருணாநிதி பேச்சிலும் பேவை உறுப்பிளர்களின் பேசியதாக வெளியான கருத்துகளிலும் ‘பார்வதி’ என்றே குறிப்பிட்டிருந்தார்கள். உண்மையில் அவர்கள் அப்படி சொல்லவில்லை. பார்வதியம்மாள் என்றுதான் குறிப்பிட்டார்கள்.

‘பார்வதி என்ற குறிப்பிட்டால் போதும் அம்மாள் என்று குறிப்பிட அவறொன்றும் நமக்கெல்லாம் அம்மா இல்லை’ என்ற ரீதியில் தினமலர் நிர்வாகம் நிருபர்களுக்கு உத்தரவிட்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. (எல்லாம் அங்கிருப்பவர்கள் சொல்லும் தகவர்கள்தான்) ஒருவருடைய பெயரை மாற்றி குறிப்பிடும் அளவுக்கு அவர் மீது வெறுப்பு இருக்கும் பட்சத்தில் அவரைப் பற்றிய செய்தியை வெளியிட வேண்டிய அவசியம் என்ன வந்தது?

இன்றைக்கும் தினமலரில் பெரியார் என்று எழுத மாட்டார்கள். ஈ.வே.ரா. என்றுதான் எழுதுவார்கள்.தினமலர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கருணாநிதி, தினமலர் நிறுவனர் டி.வி.ஆரும், ஈ.வே.ரா.வும் ஒத்தக் கருத்துடையவர்கள் என்று பேசி நம்மையெல்லாம் புல்லரிக்க வைத்ததை மறந்துவிட வேண்டாம்.

தினமலரின் இந்த வக்கிரமான எண்ணத்திற்கு அங்குள்ள ஊழியர்கள் (அதாங்க நிருபர்கள்) கொஞ்சமாவது சூடு சொரணையோடு நம்மிடம் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ளாமல், தினமலர் நிர்வாகம் செய்வதை நியாயம் போல் பேசுகிறார்கள். (அவர்கள் எப்பவுமே அப்படித்தான் பாஸு) நடிகைகள் விவகாரத்தில் தான் எழுதியதே சரி என்று வாதிடும் தினமலர், அந்தச் செய்தியை ஆதாரம் இல்லாமல் எழுதிய நிருபரை வேறு ஊருக்கு மாற்றி டார்ச்சர் செய்து வருவதை தினமலர் ஊழியர்கள் வசதியாக மறந்தும், மறுத்தும் விடுவார்கள்.

‘தந்தை பெரியார் என்று சொல்லி நம் தாயை அசிங்கப்படுத்துகிறார்கள்’ என்று பி.ஜே.பி.யின் எச். ராஜா ஒரு கூட்டத்தில் பேசியதை நான் கேட்க நேர்ந்தது. அப்படியென்றால், நேரு மாமா என்றால் நம் அத்தைகளை அசிங்கப்படுத்துகிறோமா, காந்தி தாத்தா என்றால் நம் பாட்டியை அசிங்கப்படுத்துகிறோமா? அந்த வக்கிரத்தின் அடுத்த படிதான் பார்வதியம்மாள் பெயரை ‘பார்வதி’ என்றாக்கியிருக்கிறாள்.

தினமணியில் பெயர்களைக் குறிப்பிடும் போது முடிந்தவரை இன்ஷியலோடுதான் எழுத வேண்டும் என்ற மரபு இன்றும் பின்பற்றப்படுகிறது. அது தினமணி கடைபிடிக்கும் பத்திரிகை தர்மம். தினமலருக்கு அப்படியொன்றும் இல்லை என்பது நமக்கும் தெரியும். புலிகளையோ பிரபாகரனையோ ஆதரிப்பது அவரவர் சொந்த அபிப்ராயம். ஆனால் ஒரு பெயரை மாற்றி எழுதுவது எப்படி சரியாகும்? அதுவும் பார்வதி அம்மாள் ஒன்றும் பயங்கரவாதி இல்லையே. அந்த அம்மாளை வைத்து அரசியல் பண்ணத் துடிக்கும் கருணாநிதி, வைகோ, பழ.நெடுமாறன், திருமாவளவன் ஆகியோரைவிட கேவலமான காரியத்தை செய்திருக்கும் தினமலருக்கு ஒரு ஃபோன் போட்டு அவர்களின் இந்த வக்கிர செயலை கண்டியுங்கள் என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். செய்வீர்களா?

நீங்கள் உங்கள் கண்டனத்தை கீழ்கண்ட எண்களில் பதிவு செய்யலாம்.


சென்னை 044 2841 3553, 2855 5783, பேக்ஸ் 044 2852 3695

பாண்டிச்சேரி Ph: 0413 224 9301/03

மதுரை Ph: 0452 238 0903-04,435 2901 Fax: 0452 238 0907

கோவை Ph: 0422 267 6021-23

பெங்களூரு h: 080 2228 3635 மும்பை Ph: 022 3258 9958 / 3266 3394
Fax: 080 2220 0693 Fax: 022 2421 2149

நியூ டெல்லி h: 011 2371 7263, 2373 9407
Fax: 011 2371 9732

நன்றி...

Thursday, May 6, 2010

உண்மை கண்டறியும் சோதனையும், சில உண்மைகளும்!!குற்றம் சாட்டப்பட்டவரின் ஒப்புதல் இல்லாமல் உண்மை கண்டறியும் நார்கோ அனாலிசிஸ் சோதனை நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு நவநாகரீக தேசியப் பற்றாளர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். அப்படியென்றால், குற்றவாளிகளை விசாரிப்பது எப்படி என்று கொதிக்கிறார்கள். முத்திரைத்தாள் மோசடி வழக்கில் தெல்கியிடம் நடத்திய விசாரணையில் நார்கோ சோதனை மூலம் பல உண்மைகளைக் கண்டறிந்ததாக சொல்கிறார்கள். இதை அவர்கள் உதாரணமாகக் கூறுவதற்கு தெல்கி மீதான குற்றச்சாட்டை நிரூபித்து தண்டனை வாங்கிக் கொடுத்ததுவிட்டார்கள் என்பதுதான் காரணம்.

போலீஸாரால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகளா என்பது குறித்து போலீஸாரிடம் இதே சோதனையை நடத்த அனுமதி வழங்கப்படுமா என்பது என்னுடைய சந்தேகம். தாங்கள் கைது செய்யும் சாமானியர்களுக்கு எப்பாடு பட்டாவது சிறை தண்டனை வாங்கித் தந்துவிடும் போலீஸார், அரசியல் செல்வாக்குள்ள பெரிய மனிதர்கள் எத்தனை பேருக்கு தண்டனை வாங்கித் தந்திருக்கிறார்கள் என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது.

பத்து பதினைந்து பெண்களைக் கற்பழித்துக் கொன்றதாக அண்மையில் தென் மாவட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் கொன்றதாகக் கூறும் ஒரு பெண்ணை கொலை செய்ததாக ஏற்கெனவே சிலரை போலீஸார் கைது செய்திருந்தது தான் அதிர்ச்சி! இதில் யார் உண்மையான குற்றவாளி. கணக்குக் கர்ட்டுவதற்காக யாரை வேண்டுமானாலும் கைது செய்வதை இப்போதும் எப்போதும் வழக்கதில் வைத்திருப்பவர்கள் நம் போலீஸார். இவர்களுக்கு எதற்கு இந்த உண்மையறியும் சோதனைகள் எல்லாம்.

உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நொய்டா சிறுமிகள் பாலியல் கொலைகளில் கைது செய்யப்பட்ட மொனீந்தர் சிங் பின்னாளில் விடுதலை செய்யப்பட்டார். உண்மையில் அவர் குற்றவாளி இல்லை என்றால் அவரை சிறையில் தள்ளித் துன்புறுத்தியது ஏன்? உண்மையான குற்றவாளி அவர்தான் என்றால் அவருக்குத் தண்டனை வாங்கித் தராமல் தப்பிக்க வைத்தது ஏன்?

ராஜிவ் கொலையில் காட்டும் அக்கறையில் பாதிக் காட்டியிருந்தால் கூட டென்னிஸ் விளையாடச் சென்ற சிறுமியை பலாத்காரம் செய்து அவரது சாவுக்குக் காரணமாக இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி ரத்தோருக்குத் தண்டனை வாங்கித் தந்திருக்க முடியும். ஆக, போலீஸாருக்குத் தேவை தொழில்நுட்பங்கள் அல்ல, அரசியல் தலையீடு இல்லாத
சுதந்தரமான செயல்பாடுதான். அதற்கு இந்த அரசு வழிவகை செய்யுமா? அல்லது இதற்கு முன்பு இருந்த அரசுகள் செய்திருக்கிறதா?

குற்றப்பத்திரிகை தயாரிக்கும் போதே குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தப்பிக்க வகைச் செய்யும் அளவில், அதில் ஓட்டைகளுடன் தயாரிப்பதுதானே நம்முடைய காவல்துறையின் வழக்கமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தவறுதலாக கைது செய்யப்பட்ட இஸ்லாமிய டாக்டரை உடனடியாக விடுதலை செய்ததோடு அதற்கு மன்னிப்பும் கோரினார்கள். இந்தியாவில் அப்படியொரு சம்பவம் நடக்குமா? தினகரன் எரிப்பு, நாவரசு கொலை போன்றவற்றில் குற்றவாளிகள் யார்?

தன் உறவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று காவல்துறை அதிகாரியிடம் பேசிய
தமிழக அமைச்சர் பூங்கோதையின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதும், அவர் திரும்பவும் அமைச்சரானதும் நாம் அறிந்ததே. சாதாரண போலீஸாரை விடுங்கள், மெத்தப் படித்த காவல்
துறை அதிகாரிகளும் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கால்பிடிக்கத்தானே விரும்புகிறார்கள்.
ஆகவேதான் சொல்கிறேன், உண்மையறியும் சோதனை நிச்சயம் வேண்டும் என்று இந்த அரசு கருதுமேயானால் யார் கோரினாலும் காவல்துறை உயரதிகாரிகள், அரசியல்வாதிகள்,அரசியல் தலைவர்களிடம் உண்மையறியும் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும். அதற்குத் தயாரா?