Thursday, May 6, 2010

உண்மை கண்டறியும் சோதனையும், சில உண்மைகளும்!!குற்றம் சாட்டப்பட்டவரின் ஒப்புதல் இல்லாமல் உண்மை கண்டறியும் நார்கோ அனாலிசிஸ் சோதனை நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு நவநாகரீக தேசியப் பற்றாளர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள். அப்படியென்றால், குற்றவாளிகளை விசாரிப்பது எப்படி என்று கொதிக்கிறார்கள். முத்திரைத்தாள் மோசடி வழக்கில் தெல்கியிடம் நடத்திய விசாரணையில் நார்கோ சோதனை மூலம் பல உண்மைகளைக் கண்டறிந்ததாக சொல்கிறார்கள். இதை அவர்கள் உதாரணமாகக் கூறுவதற்கு தெல்கி மீதான குற்றச்சாட்டை நிரூபித்து தண்டனை வாங்கிக் கொடுத்ததுவிட்டார்கள் என்பதுதான் காரணம்.

போலீஸாரால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகளா என்பது குறித்து போலீஸாரிடம் இதே சோதனையை நடத்த அனுமதி வழங்கப்படுமா என்பது என்னுடைய சந்தேகம். தாங்கள் கைது செய்யும் சாமானியர்களுக்கு எப்பாடு பட்டாவது சிறை தண்டனை வாங்கித் தந்துவிடும் போலீஸார், அரசியல் செல்வாக்குள்ள பெரிய மனிதர்கள் எத்தனை பேருக்கு தண்டனை வாங்கித் தந்திருக்கிறார்கள் என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது.

பத்து பதினைந்து பெண்களைக் கற்பழித்துக் கொன்றதாக அண்மையில் தென் மாவட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் கொன்றதாகக் கூறும் ஒரு பெண்ணை கொலை செய்ததாக ஏற்கெனவே சிலரை போலீஸார் கைது செய்திருந்தது தான் அதிர்ச்சி! இதில் யார் உண்மையான குற்றவாளி. கணக்குக் கர்ட்டுவதற்காக யாரை வேண்டுமானாலும் கைது செய்வதை இப்போதும் எப்போதும் வழக்கதில் வைத்திருப்பவர்கள் நம் போலீஸார். இவர்களுக்கு எதற்கு இந்த உண்மையறியும் சோதனைகள் எல்லாம்.

உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நொய்டா சிறுமிகள் பாலியல் கொலைகளில் கைது செய்யப்பட்ட மொனீந்தர் சிங் பின்னாளில் விடுதலை செய்யப்பட்டார். உண்மையில் அவர் குற்றவாளி இல்லை என்றால் அவரை சிறையில் தள்ளித் துன்புறுத்தியது ஏன்? உண்மையான குற்றவாளி அவர்தான் என்றால் அவருக்குத் தண்டனை வாங்கித் தராமல் தப்பிக்க வைத்தது ஏன்?

ராஜிவ் கொலையில் காட்டும் அக்கறையில் பாதிக் காட்டியிருந்தால் கூட டென்னிஸ் விளையாடச் சென்ற சிறுமியை பலாத்காரம் செய்து அவரது சாவுக்குக் காரணமாக இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி ரத்தோருக்குத் தண்டனை வாங்கித் தந்திருக்க முடியும். ஆக, போலீஸாருக்குத் தேவை தொழில்நுட்பங்கள் அல்ல, அரசியல் தலையீடு இல்லாத
சுதந்தரமான செயல்பாடுதான். அதற்கு இந்த அரசு வழிவகை செய்யுமா? அல்லது இதற்கு முன்பு இருந்த அரசுகள் செய்திருக்கிறதா?

குற்றப்பத்திரிகை தயாரிக்கும் போதே குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தப்பிக்க வகைச் செய்யும் அளவில், அதில் ஓட்டைகளுடன் தயாரிப்பதுதானே நம்முடைய காவல்துறையின் வழக்கமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தவறுதலாக கைது செய்யப்பட்ட இஸ்லாமிய டாக்டரை உடனடியாக விடுதலை செய்ததோடு அதற்கு மன்னிப்பும் கோரினார்கள். இந்தியாவில் அப்படியொரு சம்பவம் நடக்குமா? தினகரன் எரிப்பு, நாவரசு கொலை போன்றவற்றில் குற்றவாளிகள் யார்?

தன் உறவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று காவல்துறை அதிகாரியிடம் பேசிய
தமிழக அமைச்சர் பூங்கோதையின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதும், அவர் திரும்பவும் அமைச்சரானதும் நாம் அறிந்ததே. சாதாரண போலீஸாரை விடுங்கள், மெத்தப் படித்த காவல்
துறை அதிகாரிகளும் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கால்பிடிக்கத்தானே விரும்புகிறார்கள்.
ஆகவேதான் சொல்கிறேன், உண்மையறியும் சோதனை நிச்சயம் வேண்டும் என்று இந்த அரசு கருதுமேயானால் யார் கோரினாலும் காவல்துறை உயரதிகாரிகள், அரசியல்வாதிகள்,அரசியல் தலைவர்களிடம் உண்மையறியும் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும். அதற்குத் தயாரா?

No comments:

Post a Comment