அன்பு ‘நண்பன்’ இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு வணக்கம்.
நீங்கள் நலமா? முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு, அணுஉலை எதிர்ப்பு, மூவர் தூக்கு தண்டனைக்கு எதிர்ப்பு என போராட்டக் களங்களில் நாங்களும் நலமாக இருக்கிறோம்.
ஐயா, ஷங்கர் அவர்களே, நீங்கள் தமிழர்கள் மீதும், தமிழ் மொழி மீதும் இந்தளவுக்கு வன்மம் கொள்ள என்ன காரணம்? யாரோ வாங்கும் பட்டத்தை தன் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்ளும் கதாபாத்திரத்துக்கு ‘பாரி வேந்தர்’ என்று தமிழ்ப் பெயர் வைத்திருக்கிறீர்கள். இது உங்கள் கருத்து சுதந்திரமாகவே இருந்து விட்டுப் போகட்டும். ‘சிவாஜி’ படத்தின் பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை பெயர்களை முகத்தில் கரி அப்பியப் பெண்களுக்கு வைத்தும் அதன் மூலம் தமிழர்களை கிச்சுமுச்சு மூட்டி சிரிக்க வைக்க முயன்றதையும் உங்கள் கருத்து சுதந்திரம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
‘நண்பன்’ படத்தில் ஏழ்மை நிலையால் திருமணம் ஆகாத பெண் கருப்பாக இருப்பதை வைத்து நீங்கள் சிரிக்க வைப்பதை எல்லாம் நகைச்சுவை என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அதே ‘நண்பன்’ படத்தில் பாரிவேந்தர் என்ற பெயரை குடிபோதையில் இருக்கும் கதாநாயகி(!) “பாரிவேந்தராவது பூரிவேந்தராவது” என்று பேசியும், மற்றொரு காட்சியில், “பாரி, பூரி, கக்கூஸ் லாரி” என்றும் களங்கப்படுத்துவார். தமிழ்ப் பெயரின் மீதும் கருப்பு நிறத்தின் மீதும் உங்களுக்கு அப்படியென்ன வெறுப்பு?
அப்படியே நீங்கள் தமிழர்களையும் அவனது நிறத்தையும் வெறுத்தால் அது உங்கள் சொந்த விசயம்தான். ஆனால், அதை வன்மத்துடன் திரைப்படங்களில் புகுத்தி, தமிழர்களின் பொதுப் புத்தியில் உங்கள் கருத்தை திணிக்க முயல்வதை இனியும் நாங்கள் கைகட்டி வாய் மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். இது உங்களுக்கு விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை!!
தமிழ்ப் படங்கள் எடுத்து (நீங்கள் எடுத்த ஒரு இந்திப் படம் ஊற்றிக் கொண்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன்) நீங்கள் சம்பாதித்த ஒவ்வொரு காசும் தமிழர்களுடையது. நீங்கள் கட்டிய வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் தமிழர்கள் கொடுத்த காசில் வாங்கியது. நன்றி மறப்பது நன்றன்று.
வெறும் பெயரில் என்ன இருக்கிறது? என்று, நீங்கள் சமாளிக்கலாம். அல்லது சமாதானம் பேசலாம். உண்மையில் பெயரில் ஒன்றும் இல்லை என்பது உண்மையானால், சங்கர் என்று பெற்றோர், உங்களுக்கு வைத்த பெயரை, ஷங்கர் என்று நீங்கள் மாற்றியது எதற்காக? உங்கள் படங்களில் உள்ள தமிழர் விரோதப் போக்கை அறியாமல் கைதட்டி, ரசிக்கும் அப்பாவி தமிழனுக்கு வேண்டுமானால் ‘ச’-வுக்கும், ‘ஷ’-வுக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல் இருக்கலாம். உங்கள் பெயரில் மாறிய ஒன்றை எழுத்தில் இருக்கும் அரசியலை புரிந்து கொண்டாலே, தமிழ் மொழி மீதான உங்களின் ஒட்டுமொத்த வன்மத்தை கண்டுகொள்ளலாம்.
உங்களது ‘எந்திரன்’ படத்தில் பிரித்தானிய நூலகத்துக்குள் செல்லும் எந்திர மனிதன் அங்குள்ள ஆங்கில புத்தகங்களை படிக்கும். அந்த எந்திர மனிதன் படிக்கும் ஒரே ஒரு தமிழ்ப் புத்தகம் ஆச்சாரக் கோவை! பார்ப்பனர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கையை முறையை (தீண்டாமையை) வலியுறுத்தும் அந்த நூலை கொடுத்து எந்திர மனிதனையும் பார்ப்பனனாக்கும் உங்கள் சாமர்த்தியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதுவும் உங்கள் கருத்து சுதந்திரமா?
உங்கள் முதல் படம் ‘ஜென்டில்மேன்’ தான் தமிழில் முதல் முதலில் வெளியான இடஒதுக்கீட்டுக்கு எதிரான படம் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். நேர்மை, ஊழல் எதிர்ப்பு, கருப்புப் பணம் ஒழிப்பு என படங்களில் நீங்கள் வலியுறுத்தும் கருத்துகளுக்காக எல்லோரும் உங்களை பாராட்டுகிறார்கள். ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹாசரேவுக்கு ஆனந்த விகடன் இதழ், இந்தியன் தாத்தா என்று உங்கள் படத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயரை சூட்டி பாராட்டியது. அதற்காக மகிழ்ச்சியில் திளைத்தீர்கள். ஐயா, ஷங்கர் அவர்களே, இந்தியாவில் திரைப்படத் துறையில் தான் அதிகளவில் கருப்புப் பணம் கல்லா கட்டுகிறது என்பது அரசியல் அரிச்சுவடி கூட தெரியாதவர்களுக்கும் புரியும். நேர்மையைக் கொண்டாடும் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் அவர்களே, உங்கள் படங்களின் பிரமாண்டத்துக்குப் பின்னால் ஒளிந்திருப்பது கருப்புப் பணம் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? நீங்கள் சம்பளமாக வாங்கும் ஒவ்வொரு காசுக்கும் அரசிடம் நேர்மையாகக் கணக்கு காட்டுகிறீர்களா? உங்கள் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வழக்கு போட்டார்கள் என்பதை தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்…
ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் தமிழைப் பழித்தும், தமிழர்களை இழித்தும் நீங்கள் தமிழ்ப் படங்களைத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்படி உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் உங்கள் பாவத்துக்கு கருட புராணத்தில் நிச்சயம் தண்டனை உண்டு!!
வணக்கங்களுடன்,
பொன்னுசாமி.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி (16-29) இதழில வெளியான எனது கட்டுரை) -வே.வெற்றிவேல் சந்திரசேர்
No comments:
Post a Comment