Thursday, February 16, 2012

சீமான் செய்த தவறு என்ன?நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ததாக வெளியாகியிருக்கும் செய்தியை பெரிய விவாதப் பொருளாக்கி இருக்கிறார்கள். அதில் ஒருசிலர் அடிப்படை நாகரீகம் இன்றி அவதூறாக அவரைப் பற்றி எழுதுகிறார்கள். என் நண்பன் ஜெ.பி. அடிக்கடி என்னிடம் இப்படி சொல்வது உண்டு: Perfection is enemy of good.

சீமானை விமர்சிப்பவர்களும் இதே தவறைத்தான் செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் சீமானுக்குப் பயங்கரவாத இயக்க ஆதரவு முகமூடியை அணிவித்திருக்கிறார்கள். இவர்களுக்கு தமிழ், தமிழ் உணர்வு என்றாலே அலர்ஜி. தினமலர் வாசகர்களாக இருக்கலாம்.

இரண்டாவது பிரிவினர், மீளா துயரத்தில் இருந்து தமிழர்களையும் தமிழ்நாட்டையும் மீட்க வந்த மீட்பராக சீமானைப் பார்க்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் நாம் தமிழர் கட்சியினராகவோ சீமானின் பேச்சால் கவரப்பட்ட ஈழ ஆதரவாளராகவோ இருப்பார்கள்.
மூன்றாவது பிரிவினர் கவனிக்கத்தக்கவர்கள். தமிழ் உணர்வுடன் சமூக உணர்வுடன் இருப்பார்கள். அல்லது அப்படி இருப்பதாகக் காட்டிக் கொள்வார்கள். இவர்கள்தான் இன்றைக்கு சீமானின் பா.ஜ.க ஆதரவு பரப்புரையை விமர்சிக்கிறார்கள்.

சீமான் பா.ஜ.க.வுக்கு பிரசாரம் செய்ததில் தமிழ் நாட்டுக்கே கேடு நடந்து விட்டதாக குதிக்கிறார்கள். இவர்கள் சீமானை மட்டுமல்ல, வைகோவை, பெ.மணியரசனை, தியாகுவை, நெடுமாறனை யாரையும் விட்டு வைக்க மாட்டார்கள். எல்லோரையும் விமர்சிப்பார்கள்.

அப்படியென்றால் சீமானை விமர்சிக்கவே கூடாதா? சீமான் பா.ஜ.க.வை ஆதரித்து பிரசாரம் செய்ததை வக்காலத்து வாங்குகிறீர்களா? என்று நீங்கள் கேட்கலாம். சீமான் உள்பட யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் நீங்கள் செய்ய விரும்பும் ஒரு பணியை அல்லது நீங்கள் செய்ய முடியாத ஒரு பணியை களத்தில் இருந்து செய்கிறவர் தான் சீமான்.

முன்பு செய்தியாளராக இருந்த போது பேட்டிக்காக பல முறை சீமானை நேரில் சந்தித்திருக்கிறேன். அந்த நேரங்களில் எந்நேரமும் அவரது அலை பேசி ஒலித்துக் கொண்டே இருக்கும். “உடுத்த மாத்துத் துணி கூட இல்லாமல் முள் வேலிக்குள் நிக்கிறோம் அண்ணே. என்ட உறவுகள் லண்டனில் இருக்கிறாங்கள். அவங்களுக்குத் தகவல் சொல்லி எங்களை இங்கிருந்து கூட்டிப் போகச் சொல்லுங்கோ” என்று தமிழ்ப் பெண்கள் கண்ணீர் மல்க பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர்களுக்கு சீமான் இவரது உத்தரவால் தேவையான உதவிகள் போய் சேருவதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள கைவிடப்பட்ட தமிழர்கள் குறிப்பாக ஈழத் தமிழர்கள், திக்கற்று நிற்கும் இந்த சூழலிலும் “தலைக்கு மேலே ஆபத்து என்றால் அண்ணன் இருக்கிறார். அவரிடம் முறையிடுவோம்“ என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். குமுதம் ரிப்போர்ட்டரில் நான் பணியாற்றிய போது வெளிநாடுகளில் இருந்துழ என்னிடம் பேசி சீமானின் அலைப் பேசி எண்ணை வாங்குவார்கள். பிறகு சீமானிடம் தங்கள் துயரங்களை இறக்கி வைத்துவிட்ட நிம்மதியில், எனக்கு நன்றி சொல்லும் போது அவர்களது தழுதழுக்கும் குரல்களில் ஒட்டுமொத்த தமிழினத்தில் சோகமும் வெளிப்படும்.

அங்கே முள்வேலி முகாம், இங்கே அகதிகள் முகாம் என தவிப்போரையும், வெளிநாடுகளில் உள்ள அவர்களின் ரத்த உறவுகளான புலம்பெயர் தமிழர்களையும் இணைக்கும் பாலமாக சீமான் இருந்து வருகிறார். தமிழ்நாட்டிலும் தமிழ் உணர்வோடு நிற்கும் எத்தனையோ இளைஞர்களின் முயற்சிகளுக்கும் முன்னேற்றத்துக்கும் சீமான் பக்கபலமாக நிற்பதை கண்டிருக்கிறேன்.

சிவசேனாக் கட்சித் தலைவர் பால் தாக்ரே மீது நீங்கள் எத்தனையோ விமர்சனங்களை வைக்கலாம். வெளியிலிருந்து பார்த்தால், அவர் ஓர் இந்து அடிப்படை வாதி. ஆனால் மகாராஷ்டிரா மாநில மண்ணின் மைந்தர்களின் பாதுகாவலர் அவர். தமிழ்நாட்டில் இன்றைய சூழலுக்கு மண்ணின் மைந்தர்களின் உரிமையை மீட்க ஒரு பால் தாக்ரே தேவை. சீமான் தமிழ்நாட்டில் பால்தாக்ரேவாக வளர்ந்தால் அதை நான் வரவேற்பேன் என்பதை பகிரங்கமாக அறிவிக்கிறேன்.

இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல… அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திலும் சீமான் பங்கெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். முல்லைப் பெரியாறு போராட்டத்திலும் முன் நிற்கிறார். இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் கூட ஏதாவது ஒரு போராட்டத்தில் அவர் கலந்து கொண்டிருப்பார் அல்லது அதற்கான ஆயத்தங்களில் இருப்பார் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.


காஞ்சி ஜெயேந்திரர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டது. கைதும் செய்யப்பட்டார். முதல்வர் ஜெயலலிதா அந்த வழக்கில் ஜெயேந்திரர் மீது கடுமையாக நடந்து கொண்டார். ஜெயலலிதாவை ஆதரிக்கும் பார்ப்பனர்கள் யாரும் ஜெயேந்திரரை கைவிட்டு விடவும் இல்லை. ஜெயேந்திரர் காலில் விழும் பார்ப்பனர்கள் யாரும் ஜெயலலிதாவுக்கு எதிராக கருணாநிதிக்கு ஒட்டுப் போட்டு விடவும் இல்லை. உதாரணம் எஸ்.வி. சேகர். அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து கொண்டே ஜெயேந்திரர் புகழ் பாடிக் கொண்டிருந்தார்.


பார்ப்பனர்களுக்கு ஜெயலலிதா மீதோ, ஜெயேந்திரர் மீதோ வருத்தம், கோபம், அதிருப்தி எல்லாம் வரலாம். ஆனால் அதை அவர்கள் பொதுத் தளத்தில் விவாதிக்க மாட்டார்கள். “என்ன இருந்தாலும் அவ… நம்ம ஆளுடா” என்று தோளில் கைபோட்டுக் கொள்வார்கள். இந்த ஒற்றுமை ஏன் தமிழர்களிடம் இல்லை என்பதுதான் என் வருத்தம்.

சீமானைப்பற்றி தினமலரில் அவதூறு வந்தால் அதைப் பற்றி கவலைப்பட்டிருக்க மாட்டேன். களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கும் என் அருமை நண்பர்களே சீமானை விமர்சிப்பது வேதனையாக இருக்கிறது. அவரை விமர்சிக்கும் நண்பர்களில் பலர் இந்த இனத்துக்காக சொந்த வாழ்க்கையில் என்ன இழந்தார்கள் என்பதை நான் அறிவேன். அதே போலவே பல இழப்புகளை சந்தித்தவர் தான் சீமானும். சீமான் எத்தனை முறை சிறை சென்றார்? யாருக்காக சென்றார்? எதற்காக சென்றார்? என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

சீமானை களங்கப்படுத்தி காயப்படுத்தி களத்தில் இருந்து வெளியேற்றி விட்டால் அந்த இடத்தில் யார் வருவார்கள் என்று சிந்தியுங்கள். இன்றைக்கு ஆரியப் பெண்மணி ஜெயலலிதாவும், தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்களும் தமிழ்நாட்டில் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு தமிழர்களைப் பற்றிய அக்கறை என்ன இருக்கிறது? பா.ஜ.க.வை ஆதரித்தால் ஒன்றும் குடிமூழ்கி போவது கிடையாது. தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்கிறார், சீமான். ஆமாம் நமக்கான உரிமைக்காக ஜெயலலிதா, விஜயகாந்திகளிடம் போராடுவதை விட ஒரு தமிழனிடம் போராடிப் பெறுவதே மேல் என்பது என் கருத்து.

அமெரிக்காவுக்கே சென்று அந்நாட்டு அரசை நேருக்கு நேர் எதிர்க்கும் அருந்ததி ராய்தான் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பற்றி கருத்து சொல்ல மறுத்தார் என்பதை மறந்து விடாதீர்கள். நமக்கு நாமேதான் இங்கே துணை. எனவே நம் கைகளால் நம் கண்களை குத்திக் கொள்ள வேண்டாமே.. ப்ளீஸ்!!


சீமான் என்றில்லை தமிழினத்துக்காக களத்தில் நிற்கும் எந்தத் தமிழனையும் விமர்சனம் என்ற பெயரில் களங்கப்படுத்தாதீர்கள்.. ஏனெனில், Perfection is enemy of good.

-வே.வெற்றிவேல்சந்திரசேகர்

1 comment:

  1. No words. Thanks, I came to know a bit more about Seeman. My assistant director friends have told me how well Seeman treats them. He is a nice person.

    ReplyDelete