Monday, April 12, 2010

தண்டகாரண்யம்: இந்திய தேசியம் பேசினால் செருப்பால் அடிப்பேன்டா...,
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அளப்பறிய சேவைகளை செய்து வருகிறார். அதுவும் தண்டகாரண்யத்தில் அவர் ஆற்றி வரும் சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது. அதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா, போன்றவர்கள் துணையாக நிற்கிறார். மீடியாகளும் ப.சி.க்கு பக்கபலமாக இருந்து வருகிறது.

எதற்கு இந்தப் பாராட்டு என்கிறீர்களா?

மேலே படியுங்கள்...

இந்தியாவின் மையப்பகுதியில் இருக்கும் தண்டகாரண்யம் என்கிற அடர்ந்த வனப்பகுதி ஆந்திரம்,​​ மகாராஷ்டிரம்,​​ சத்தீஸ்கர்,​​ மத்தியப் பிரதேசம்,​​ ஜார்க்கண்ட் மற்றும் ஒரிசா ஆகிய ஆறு மாநிலங்களின் எல்லைகளை உள்ளடக்கியது.​ இதன் மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 40,000 சதுர கிலோ மீட்டர். ​ இந்த வனப்பகுதியில் வாழும் ஆதிவாசிகள் எதற்காகவும் வெளியுலகையோ அரசையோ சார்ந்து வாழ வேண்டிய அவசியமில்லாதவர்கள்.​ இவர்களுக்கு ரேஷன் தேவையில்லை.​ மின்சாரம்,​​ குடிநீர் வசதி,​​ சாலைகள்,​​ பள்ளிக்கூடங்கள்,​​ மருத்துவமனைகள் எதுவுமே வேண்டாம்.​ இயற்கையோடு ஒட்டி வாழும் பழங்குடி மக்கள்.


உலகமயமாக்கல் கொள்கையால் பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை அங்கே குவிந்து கிடக்கும் கனிம வளத்தின் மீது விழுந்தது. அதை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்தால் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கலாம் என பன்னாட்டு நிறுவனங்கள் கணக்குப் போட்டன.

ஓட்டுப் பொறுக்கிகள் அந்தப் பன்னாட்டு நிறுவனத்தின் வருகையையும் அவர்களது வளர்ச்சியையும் ஆதரித்து பழங்குடி மக்களை விரட்டி அடிக்கத் தீர்மானித்தனர். தங்களது வாழ்வாதாரம் பறிபோனால் நகரத் தெருக்களில் பிளாட்பாரங்களில் அல்லாட வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அவர்களை வெளியேற்றி கனிம வளங்களைச் சுரண்டி ஏற்றுமதி செய்வதிலிருந்து பின்வாங்க பன்னாட்டு நிறுவனங்களும் தயாராக இல்லை.​ ​இங்கே தான் ஏற்கெனவே தங்களின் அடிப்படை வசதிகளுக்காக போராடிக் கொண்டிருந்த ஆயுதக் குழுக்களின் உதவியை நாடினர், பழங்குடி மக்கள்.


தண்டகாரண்யப் பகுதிகளிலிருந்து கனிம வளங்களை வெட்டி எடுக்கும் முடிவை கைவிட்டால்தான் அந்த மக்களும் அந்த மக்களுக்காக களம் காணும் மாவோயிஸ்ட்களும் ஆயுதங்களை கீழே போடுவார்கள். ஆனால் அந்தக் கனிம நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் ப.சிதம்பரம் (அந்த நிறுவனங்களின் சட்ட ஆலோசகர் நளினி சிதம்பரம்) ​​ விமானத் தாக்குதல் மூலம் மாவோயிஸ்டுகளை அழிக்கும் சாக்கில் ஆதிவாசிகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். இது காடுகளை அழித்து பன்னாட்டு கனிம நிறுவனங்களுக்கு தாரை வார்த்துவிட்டு இயற்கையோடு இணைந்து வாழும் பழங்குடி மக்களை நகரங்களில் பிச்சை எடுக்க வைப்பதுதான் ப.சிதம்பரத்தின் லட்சியம். இதை மன்மோகன் சிங் வேடிக்கை பார்க்கிறார். சோனியா காந்தி வேடிக்கை பார்க்கிறார். விளிம்பு நிலை மனிதர்களுக்காகப் போராடும் கனிமொழி, திருமா போன்றவர்களும் வேடிக்கைப் பார்க்கிறார்கள். இதைத் தட்டிக் கேட்க வக்கில்லாத மீடியாகள் இதைவிட கூட்டிக் கொடுக்கும் வேலையை செய்யலாம். (அதைத்தானே இப்போதும் செய்து வருகிறது)

எங்கோ காட்டில் நிம்மதியாக வாழும் அந்த மண்ணின் மைந்தர்களை அழிக்கும் உங்கள் இந்திய தேசியம் வாழ்க... இதற்கு மேலும் எவனாவது தேசப்பற்று பத்தி பேசினால் செருப்பால அடிப்பேன்.... ப.சி.யை செருப்பால் அடித்து புண்ணியம் கட்டிக் கொண்ட சீக்கிய பத்திரிகையாளனுக்கு என் வீரவணக்கங்கள்...

13 comments:

 1. பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் ஒரு சேர ஒழிந்துவிடும் என்பதால் தண்டகாரண்யத்தில் கனிம சுரங்கங்கள் கூடாது என்பது புரிகிறது. ஒரு கோணத்தில் நியாயமும் கூட.
  ஆனால், இந்த பிரச்னையில் இன்னொரு கோணம் உள்ளது. (வெளி நாட்டு சுரண்டல் பற்றி நான் கூறவில்லை).
  இரும்பு, தங்கம், வெள்ளி, தாமிரம், கந்தகம், போன்ற கனிமங்கள் நிலத்திற்கு அடியில் இருந்து, சுரங்கம் அமைத்து, எடுத்து, பல்வேறு முறைகளில் பயன் படுத்துவது பல நூறு, அல்ல ஆயிரம் ஆண்டுகளாக வருகின்ற நடைமுறையே. இது போல் நடந்த கால கட்டங்களில் அந்த பழங்குடியினர் ஒன்று குடி பெயர்ந்து வேறு காடுகளில் குடியேறி இருக்க வேண்டும்; அல்லது, பொது சமுதாயத்தில் கலந்திருக்க வேண்டும். (நம் முன்னோர் அவ்வாறே வந்தவர்களாக இருக்கலாம்.)
  சரியோ தவறோ, உலகம் முழுதும் "நவீன வாழ்வு " முறை வந்து விட்டது. கனிமங்கள் இருக்கும் போது, அதை பயன் படுத்தவே எந்த ஒரு அரசும் எத்தனிக்கும். (இதில் பன்னாட்டு நிறுவனகள் இல்லாவிடினும், இது நடந்தே தீரும்.)
  ஒவ்வொரு நாட்டிலும் வேறு வேறு கனிம வளங்கள் உள்ளன: சிலியில் கந்தகம், மைய கிழக்கு நாடுகளில் எண்ணெய், தென் ஆப்ரிக்காவில் தங்கம், வைரம், என உள்ளது நாம் அறிந்ததே; அங்கும் வனப் பகுதியில் சிறிது காலத்திற்கு முன்போ, அல்லது நீண்ட காலத்திற்கு முன்போ, வனமும், பழங்குடிகளும் இருந்திருக்க வேண்டும். ( எனக்கு உலக சரித்திரம் பெரிய அளவுக்கு தெரியாது; இது தவறு என்றால் சரியான நிலை கூறவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்).
  தண்டகாரண்யத்தில் வசிக்காத "பிற" "இந்தியர்கள்" கனிம வளங்களை பயன் படுத்தாமல் தொழில் வளர்ச்சி பாதிப்பு, பிற நாடுகளிலுருந்து இறக்குமதி, அந்நிய செலாவணி என்று ரீல் விடுவார்கள்.
  இதனால், என் சிற்றறிவுக்கு எட்டியவரை, பழங்குடியினருக்கு மிகவும் பாதிப்பு இல்லாமல், சுரங்கம் அமைத்தல்; அல்லது, அவர்களை குடி பெயர்த்து, சரியான வாழ்வு முறைக்கு வழி வகுத்தல் என்று சரியாக திட்டம் தீட்டி, அருந்ததி ராய், மேதா பாடகர் முதலிய பொது நல விரும்பிகளின் அங்கீகாரத்துடன் பனி மேற்கொள்வது சரியாக இருக்கலாம்.

  ReplyDelete
 2. நெற்குப்பை அவர்களுக்கு, உங்களது வாதம் மிகத் தெளிவாக இருக்கிறது. ஆனால், முரண்பாடான தகவல்களை கொண்டிருக்கிறீர்கள். முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.

  இயற்கையோடு இணைந்த வாழ்க்கை என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? இப்படித்தான் பசுமை புரட்சி என்று மண்ணில் ரசாயனத்தைக் கொட்டினார்கள். உற்பத்தியைப் பெருக்கிறோம் என்று வீரிய ஒட்டுரக விதைகளைக் கொண்டு வந்தார்கள். அப்படியென்றால் இன்றைக்கு விவசாயம் வளர்ந்திருக்க வேண்டும். ஆனால் விவசாயிகள் தற்கொலைதான் செய்து கொண்டார்கள்.

  ஒட்டுரக விதைகள் தோல்வி என்று மரபீனி விதைகள் வந்தது. அதுவும் தோல்வி என்று மான்சான்டோவே ஒப்புக்கொண்டது. ஆனால். பி.டி. பருத்தி விதைகளை வாங்கிய விவசாயிகள் நட்டத்தால் தற்கொலை செய்து கொண்டதை அறிவீரா?

  உங்களுக்குச் சொந்தமான, உங்கள் தாய் தந்தையர்கள் வாழும் வீட்டினுள் புதையல் இருக்கிறது என்பதற்காக உங்களை அந்த வீட்டைவிட்டு வெளியேற்றினால் நீங்கள் எப்படி துடித்துப் போவீர்கள் ? சற்று சிந்தியுங்கள்.

  தெருநாய்களைக் கொல்லக் கூடாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டதால் கருத்தடை செய்வதற்காகப் பிடித்துச் செல்லப்படும் நாய்களை பிடித்த இடத்திலேயே திரும்ப விட வேண்டும் என்ற முறை பின்பற்றப்படுகிறது. ஏனென்றால், அறிமுகமில்லாத புதிய இடத்தில் நாய்களை விட்டால் அவை மூர்க்கமாக மாறிவிடும் என்பது மருத்துவ உண்மை. நாய்களேக்கே இப்படியென்றால் மனிதர்களுக்கு?

  அரசு கனிம வளங்களை எடுத்தே தீரும் என்கிறீர்கள். அரசு எதற்காக எடுக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காகத்தானே. நாட்டுமக்களின் ஒருசாராரை அழித்துவிட்டு யாரை வாழ வைக்க வளங்களை சுரண்ட வேண்டும்? ஓர் இனம் தன்னிச்சையாக இடம்பெறாது. பிற இனத்தின் ஆதிக்கத்தால், தாக்குதலால் அல்லது இயற்கை சீற்றத்தால் இடம்பெயரும்.இந்த வகையில் செயற்கையாக ஓர் இனக்குழுவை இடமாற்றம் செய்வது என்பது அவர்களை கொலை செய்வதற்குச் சமமாகும். அருந்ததிராய், தீபா மேத்தா ஆகியோர் உங்களுடைய பரிந்துரையை ஏற்க வாய்ப்பில்லை. ஒரு தேசிய இனத்தை அதன் நிலத்தில் இருந்து பிரிக்க அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
  நன்றி...

  ReplyDelete
 3. //இயற்கையோடு இணைந்த வாழ்க்கை என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? // காடுகளில் வாழ்பவர்கள் எப்போதும் காட்டிலேயே வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்களா? காட்டில் வாழும் மக்களை ஆயுதம் எந்த வைக்கும் மாவோயிஸ்டுகள் ஏன் அவர்களுக்கு கல்வி பயிற்றுவித்து நாகரிக மனிதர்களாக்கி நாட்டில் வாழ வைக்ககூடாது?

  ReplyDelete
 4. வணக்கம் பொன்னுசாமி

  நீங்கள் குறிப்பிடுவன மிகவும் நல்ல காரணங்களாகத்தான் இருக்கின்றது. இதில் இன்னும் ஒன்று விட்டுப்போய் உள்ளது. இந்த வனமழிப்பில் பாதிக்கப்படுபவர்கள் பழங்குடி மக்கள் மட்டுமள்ள வன உயிர்களும், உலக சூழலும்தான்.

  என்ன இவை மறைமுகமாக அழியும்

  (மனிதன் அழிவதைப்பற்றியே கவலைப்படாதவர்கள் மற்றதற்கா யோசிக்கப்போகின்றார்கள் என்றால் அதுவும் சரிதான்)

  \\(அந்த நிறுவனங்களின் சட்ட ஆலோசகர் நளினி சிதம்பரம்) ​​ \\

  இவை எந்த நிறுவனங்கள் என தெரியத்தர இயலுமா?

  நன்றி
  இராஜராஜன்

  ReplyDelete
 5. நீண்ட பதிலுக்கு நன்றி.
  பதிவின் மொழிக்கும் இப்போது தந்த பதிலின் மொழி நடைக்கும் உள்ள வேறுபாடு கவனிக்கத்தக்கது.
  நான் சொல்ல வந்தது ஒன்று தான்: இது பொருளாதாரமும், சமூகமும், மனித நேயமும் கலந்த விஷயம்.
  இதை உணர்ச்சிபூர்வமாக செருப்படி என்றெல்லாம் பேசாமல் பிரச்னையின் வெவ்வேறு கோணத்திலிருந்து காண வேண்டும் என்பதே.
  இன்னும் ஒரே ஒரு கருத்து: என் வீட்டிற்கு அடியில், தண்ணீர் இருக்கிறது; அதை மேலேற்றினால் ஊர் மொத்தத்திற்கும் நீர் கிடைக்கும் என்றால் எனக்கு சிரமம் ஏற்படாதவாறு என்னை குடி பெயர்த்து, தண்ணீரை ஊர் நலத்துக்காக பயன் படுத்தலாம் என்பதே பொது நன்மைக்காக தனி நபர் விட்டுக்கொடுக்கவேண்டும் என்ற அடிப்படையில் வந்த வாதம்; அதை ஒப்புக் கொள்வதும் மறுப்பதும் அவரவர் முடிவு.

  ReplyDelete
 6. முதலில் ராபினுக்கு என் பதிலை அளிக்க விழைகிறேன்.

  நீங்கள் இன்னும் நுனிப்புல்லை மேய்பவராக இருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். (இப்படி உங்களை சொல்வதற்காக நான் மன்னிப்பு எல்லாம் கேட்கப் போவதில்லை)

  காட்டில் வாழ்பவர்கள் எல்லாம் நாகரீகமானவர்கள் அல்ல. படித்த நகர வாசிகள் என்றால் நாகரீகமானவர்கள் என்று நீங்கள் நம்புவதை பார்த்து சிரிக்கிறேன். உங்களைச் சொல்லி குற்றமில்லை. நம்முடைய பாடத்திட்டத்தில் கூட பழங்குடி மக்கள் நாகரீகம் அற்றவர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பழங்குடி மக்கள் மனித மாமிசம் சாப்பிடுபவர்களாக ஊடகங்களும் (குறிப்பாக சினிமா) காட்டுகின்றன.

  கல்வி கற்றுக்கொண்டால் ஒருவன் நாகரீகமானவன் ஆகிவிடுவான் என்றால் நூறு சதவிகிதம் கல்வி கற்ற மலையாளிகள் எல்லோரும் நாகரீகமானவர்கள் என்று ஒத்துக் கொள்வீர்களா? கேரளாவில் எல்லோரும் எல்லாமும் பெற்று விட்டார்களா? அங்கேதான் தற்கொலை அதிகமாக நடக்கிறது என்பது தெரியும்தானே. பழங்குடி மக்களுக்கு பாலியல் பலாத்காரம் என்பதே தெரியாது என்பது தெரியுமா உங்களுக்கு? அவர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவே மாட்டார்கள் என்பதும் தெரியுமா உங்களுக்கு? படித்தவர்கள் நம்மிடம்தான் பாலியல் சுரண்டல்கள், பலாத்காரங்கள் நடக்கிறது. ஆதி காலத்தில் ஆற்றங்கரையில் நாகரீகம் வளர்ந்தது என்கிறார்களே அப்போது என்ன பல்கலைக்கழகங்களா இருந்தது. நாகரீகம் என்பது வாழ்க்கை முறை. அது பழமை மாறாத பழங்குடி மக்களிடம் தான் இருக்கும். நம் அடையாளங்களைத் துறந்துவிட்ட (உங்கள் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியுமா?) நமக்கு ஏது நாகரீகம். சுற்றுச் சூழலை கெடுக்காத சக மனிதனை சுரண்டாத ஊழல் செய்யாத இதை எல்லாத்தையும் விட நிம்மதியாக வாழும் (நம்முடைய உணவுக்காக விவசாயமும் அவர்கள் செய்கிறார்கள்) அவர்களை அங்கிருந்து வெளியேற்றி விடுவதில் எந்த நியாயமும் இல்லை என்பதை உணருங்கள் ப்ளீஸ்.

  சென்னை கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் என்ற கிராமத்தில் விவசாயம் சிறப்பாக நடக்கும் நிலத்தையும் அதையொட்டி உள்ள மேய்ச்சல் நிலம் ஆயிரம் ஏக்கரையும் டயர் தொழிற்சாலை (ஜெர்மன் கம்பெனி) அமைக்க தமிழக அரசு வாரி வழங்கிவிட்டது. இந்தியாவிலேயே தலித் பட்டதாரிகள் அதிகம் உள்ள அந்தக் கிராம (அதற்காக மத்திய அரசு விருது பெற்றுள்ளது) மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டு அமைக்கப்படும் டயர் தொழிற்சாலைக்காக அந்த மக்கள் தங்கள் நிலத்தை விட்டுக் கொடுக்க வற்புறுத்தப்பட்டு வருகிறார்கள். இது எந்த வகையில் நியாயம் ராபின்?

  நன்றி

  நெற்குப்பை அவர்களே உங்கள் நிலத்தி தண்ணீர் இருந்தால் அந்த ஊர் மக்களுக்காக அந்த வீட்டை விட்டுக் கொடுக்கலாம். அவர்கள் கனிமங்கள் எடுப்பது ஊர் மக்களுக்காக அல்ல. ஊரை அடித்து ஊலையில் போடுவதற்காகத்தான். தமிழ்நாட்டிலும் காவிரி படுகையில் இப்போதும் பெட்ரோல் எடுக்கிறார்கள். அதனால் தமிழகத்தில் இருக்கும் எங்களுக்கு என்ன லாபம்? அப்படியொன்று எடுக்கப் படுவதே பெரும்பாலான தமிழர்களுக்குத் தெரியாதே. மக்கள் நலனுக்காக அரசியல்வாதிகள் (குறிப்பாக ப.சி. ) சிந்திப்பார்கள் என்று இன்னுமா நீங்கள் நம்புகிறீர்கள். பிரச்னையின் வெவ்வேறு கோணங்களில் பார்க்க வேண்டும் என்கிறீர்கள். இருப்பது ஒரே ஒரு கோணம் தான், எம்.எஸ்.சாமிநாதன் நல்லவரா? இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நல்லவரா? என்று முடிவெடுத்தே ஆகவேண்டும். அப்படிப் பார்த்தால் யாரை செருப்பில் அடிக்க வேண்டும் என்பதை சொல்லியே ஆகவேண்டும்.

  ReplyDelete
 7. தோழர் வனம் அவர்களே...
  உங்கள் கருத்து மிகச் சரியானது.
  லால்கரில் கனிம வளங்களை
  சுரண்டுவதற்கு அனுமதி பெற்ற ஜிண்டால் கம்பெனிக்கு பழங்குடி மக்கள் காட்டிய எதிர்ப்புதான், கிரீன் ஹண்ட் (பச்சை வேட்டை) ஆபரேசன் தொடங்குவதற்கு முழு முதல் காரணமாக இருந்தது. ஜிண்டால் நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக
  நளினி சிதம்பரம் இருக்கிறார் என்று தகவல்கள் வந்துள்ளன.
  அத்துடன் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பன்னாட்டு நிறுவனங்களின் (குறிப்பாக
  சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இயங்கும்) சட்ட ஆலோசகராக அவர் இருந்துவருகிறார்.


  சென்னையில் பல கோடிகளை சுருட்டிய கோல்டு க்வஸ்ட் நிறுவனத்தின் சட்ட ஆலோசகராகவும்,
  இப்போது சர்ச்சையைக் கிளம்பியுள்ள காலாவதி மருந்து மோசடியில் தொடர்புடைய மீனாட்சி
  சுந்தரத்தின் வழக்கறிஞராகவும் நளினி சிதம்பரம் இருக்கிறார்.காலாவதி மருந்து மோசடியில் கைதாகி உள்ள மீனாட்சி சுந்தரத்தின் மனைவி சார்பில் வழக்கறிஞர் ஜோதி ஆஜராகிறார். அவர் தி.மு.க. வழக்கறிஞர். இந்த வழக்கில் தி.மு.க. அரசு எவ்வளவு நியாயமாக நடந்து கொள்ளும் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா? இந்த வழக்கறிஞர் ஜோதி அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு வந்தவர். இதுபோன்ற வழக்கறிஞர்கள் எல்லாம் வருங்காலங்களில் நீதிபதிகளாக வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது. நிதிக்கு ஏற்பட்ட நிலையை நினைத்துப் பாருங்கள்.

  ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் செய்த அட்டூழியங்களை
  எழுத தனிப் புத்தகமே வெளியிட வேண்டும். ஈழஆதரவாளர்கள் காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்த போது அவர்களை தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்தும் அராஜகம் செய்தார், கார்த்திக் சிதம்பரம். அவர் கனிமொழியுடன் சேர்ந்து கருத்து சுதந்திரத்தைக் காக்க கருத்து இணைய தளம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  ReplyDelete
 8. please see my blog:
  makaranthapezhai.blogspot.com

  I solicit your comments please.

  ReplyDelete
 9. Tuesday, April 27, 2010
  பழங்குடியினர்: சில கேள்விகள்?
  பழங்குடியினரை மேம்படுத்தவேண்டும் என்பதில் இரண்டு கருத்து இல்லை.

  ஆனால், அது சார்ந்த சில வினாக்களுக்கு பதில்களில் ஒருமித்த கருத்து இல்லை:
  அவை:
  ௧. காடுகளில் சாலைகள் அமைக்காமல், பிற கட்டுமான வசதிகளை உண்டாக்காமல், அவர்களுக்கு விஞ்ஞானத்தின் வசதிகளை எவ்வாறு செய்ய முடியும்? அவர்களுக்கு சுகாதார மனைகள், தொலைபேசி, தொலை காட்சி, வேண்டுமாவேண்டாமா?
  ௨. சாலைகள் போடுவதற்கு, பழங்குடியினர் அல்லாதவர்கள் அங்கு வர வேண்டும்; தங்க வேண்டும்; பின், தம் இடத்திலேயே தாம் அன்னியர்கள் ஆகி விட்டதாக புகார் செய்யாமல்இருப்பாரா?
  ௩. அவர்களுக்கு கல்வி அளிக்க வேண்டுமா இல்லையா? ஆம் என்றால் எந்த அளவுக்கு? அவர்களுக்கு "நவீன கல்வி" அளித்தால், அவர்களை இயற்கையை ஒட்டிய அவர்தம் வாழ்க்கை முறையை விட்டுவிட்டு, நகர வாழ்க்கை முறைக்கு மாற மூளை சலவை செய்வதாகஆகாதா?
  ௪. சரி, அவர்களுக்கு கல்வி அளிக்கவே வேண்டாம் என்றால், அவர்களுக்கு, அரசியல் சட்டத்திலே அளிக்கப் பட்ட ஒதுக்கீடு முறையின் பலன்கள் எவ்வாறுகிடைக்கும்?
  ௫. நவீன கல்வி இல்லாமல், அவர்கள் இவ்வாறே காலம் காலமாக இருப்பார் என்றால், அதிலும் சில பிரச்னைகள் உண்டு: அவர்களின் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு சரியான வாழ்வு ஆதாரங்கள் அங்கேயே - அந்த காட்டு பகுதியிலேயே - தொடர்ந்து கிடைக்குமா? (உதாரணத்துக்கு, தேன், கிழங்குகள், கொட்டைகள், தோலுக்கு வேண்டிய விலங்குகள்) ,
  மேலும், அவர்கள், சிறு கூட்டத்தில் உள்ளேயே திருமணம் செய்து இனத்தை பெருக்கினால், consanginous திருமணங்களால் பிறக்கும் குழந்தைகள் பிணியுடனும், ஊனங்களுடனும் பிறக்கும். . நீண்ட கால நன்மைக்காக அவர்கள், காலப்போக்கில் பொது சமுதாயத்துடன் ஒன்றிப் போவது தான் நலம் பயக்கும் என்று விஞ்ஞானிகள் சொல்லுவது சரியா?

  ௬. அவர்களை அங்கேயே இருக்க விட்டால், அவர்கள் வாழும் வனத்தில், நிலத்துக்கு அடியில் உள்ள கனிம வளங்கள் - கலப்பைக்கும், வண்டி சக்கரத்துக்கும் தேவையான இரும்பு, சாதம் பரிமாறும் கரண்டி செய்ய அலுமினியம், நாட்டுக்கு, ஏன், அவர்கள் தெருவுக்கு போட வேண்டிய விளக்குக்கான மின்சாரம் உற்பத்தி செய்ய கரி - முதலியவை வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்வது சரியா?
  ௭. சுதந்திரம் பெற்றதற்கு பின் சிற்சில பழங்குடியினர் கல்வியில் தேறி உள்ளனர்; ஒதுக்கீடு முறையிலோ, அல்லது இல்லாமலோ, பட்டதாரிகள், அதிகாரிகள் , பொறியாளர்கள், மருத்துவர்கள் ஆகி உள்ளனர்; வக்கீல்கள் உள்ளனர்; அவர்கள், தம் இனத்து பழங்குடியினர் வருங்காலத்தில் எவ்வாறு முன்னேற வேண்டும் என ஏதேனும் கருத்து வைத்திருக்கிறார்களா? அர்ஜுன் முண்டாவும், சிபு சொரேனும், தம் பழங்குடி இனத்தை எவ்வாறு முன்னேற்ற பாதைக்கு கூட்டி செல்ல விழைகிறார்கள்?
  ௮. இது போல எல்லா மாநிலங்களிலும், சட்ட சபைக்கு பழங்குடியினருக்கான ஒதுக்கீடு உள்ளது; ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, போன்ற மாநிலங்களில் அமைச்சரவையில் பங்கு பெறுகிறார்கள். அவர்கள் தம்வாக்கு வங்கியை பாது காத்து கொள்ளும் அளவுக்கு, அவர்கள் வருங்காலம் பற்றிய எதாவது திட்டங்களை முன் மொழிகிறார்களா?

  இவை எலாம், ஏதோ பழங்குடியினரை மடக்க வேண்டும் என்று எழுப்பும் வினாக்கள் இல்லை; இவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும், அவர்கள் முன்னேற்றத்தில் நம் பங்கு ஆற்ற வேண்டும் என எண்ணும் ஒவ்வொரு இந்தியன் மனதில் எழும்வினாக்களே.

  உங்களைப் போன்ற வலையுலக அன்பர்கள் கருத்து கூறுங்கள்; பல நூறு கருத்துகள் வந்தால் அவற்றில் சில நூறு செயல் படுத்த முடியும்.
  இதை படிக்கும் ஒவ்வொரு அன்பரும் உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.
  Posted by nerkuppai thumbi at 9:53 PM 0 comments

  ReplyDelete
 10. please see my latest publication the blog:

  makaranthapezhai.blogspot.com

  with a few fundamental questions on tribals.

  ReplyDelete