Tuesday, April 6, 2010

சென்னைப் பல்கலைக் கழக துணை வேந்தர் திருவாசகத்துக்கு செருப்படி!


திண்ணைப் பள்ளிகளாகும் பல்கலைக்கழகங்கள்!

பழ.​ கருப்பையா (தினமணி கட்டுரை)


ஒரு காலத்தில் ஒரே ஒரு பல்கலைக்கழகம்தான் தமிழனுக்கு உயர்கல்வி வழங்கும் பல்கலைக்கழகமாக இருந்தது.​ கங்காரு தன்னுடைய குட்டியைத் தன் உடற்பையில் பொத்தி வைத்துப் பாதுகாப்பதுபோல் ஏ.எல்.​ முதலியார் போன்றவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தைத் தங்களின் நெஞ்சோடு சேர்த்துப் பொத்தி வைத்துக் காத்தார்கள்.
நீதியும் நிர்வாகமும் அரசியல் சாசனப்படி பிரிக்கப்பட்டிருந்தன.​ அவைபோல் இல்லையென்றாலும் கல்வி அரசியலிலிருந்து தனித்தொதுங்கி,​​ அறிவை நோக்கமாகக் கொண்டு தன்போக்கில் வளர அன்றைய பெருந்தன்மையான அரசியல் இடமளித்தது.
இடைநிலைப் பள்ளி ஆசிரியரிலிருந்து துணைவேந்தர் வரை "தட்சிணை' வைக்காமல் இன்றைய அரசு அமைப்பில் எதுவும் நடக்காது என்பதால் கல்வியாளர்கள் சத்துணவு ஆயாக்கள் நிலைக்குத் தாழ்ந்து விடுவது தவிர்க்க இயலாததாகி விட்டது.​


சின்னத்தனமான அரசியல்,​​ எல்லா உயர்பதவிகளிலும் சின்னத்தனமானவர்கள் ஏறக் காரணமாகி விட்டது. கடந்த மாதம் "அப்பாவுக்குத் தப்பாது பிறந்த பிள்ளை' என்னும் நூல் வெளியீட்டு விழாவுக்கு மதுரை சென்ற சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவாசகம்,​​ அழகிரியைப் பார்த்து மிகவும் பரவசநிலை அடைந்து,​​ தன்னை மறந்து பேசியிருக்கிறார்.
''முன்பெல்லாம் கோயிலுக்குச் சென்று திருவாசகம் பாடுவேன்!​ ஆனால் அழகிரியைச் சந்தித்த பிறகு இப்போது அழகிரிவாசகம்தான் பாடுகிறேன்.​ அண்ணனின் "காலைப் பிடித்துக் கொண்டிருப்பதுதான்' எனக்கு எப்போதும் சந்தோஷம்!''
என்னுடைய நாக்கால் மனிதனைப் பாட மாட்டேன் என்றார் நம்மாழ்வார்.​ என்னுடைய நாக்கால் கடவுளைப் பாடிய மடைமையை விட்டொழித்துவிட்டு அண்ணன் அழகிரியைப் பாடுகிறேன்;​ வீடு பேறு அளிக்க வல்லதாகச் சொல்லப்படும் தில்லைக் கூத்தனின் ''தூக்கிய திருவடியை''ப் பற்றிக் கொள்வதைவிட,​​ துணைவேந்தர் பதவியை அளிக்க வல்ல அண்ணன் அழகிரியின் திருவடியைப் பற்றிக் கொள்வதுதானே,​​ நடைமுறை வாழ்க்கைக்கு நம்பகமானது என்று அண்ணன் அழகிரியின் திருவடிப் புகழ்ச்சி பாடுகிறேன் என்கிறார் துணைவேந்தர் திருவாசகம்.


இந்தத் தரத்தில் உள்ள துணைவேந்தர்,​​ தான் பதவி வகிக்கும் பல்கலைக்கழகத்தில் "கருணாநிதியின் சிந்தனைகளை' முதுகலைப் படிப்புக்குப் பாடமாக்கப் போவதாகச் சொல்வது வியப்பல்லவே!​ "பேய் அரசு செய்தால் பிணந் தின்னும் சாத்திரங்கள்!'
கணிதம்,​​ அறிவியல்,​​ பொருளாதாரம்,​​ பொறியியல்,​​ மருத்துவம்,​​ மெய்யியல் என்பனவற்றிலெல்லாம் உயர் கல்வி என்பது போய் கருணாநிதியின் சிந்தனைகள்தாம் தமிழ்நாட்டில் உயர்கல்வி என்னும் நிலையில் திருவாசகமாவது தன் பிள்ளைகளை அந்த வகுப்பில் சேர்த்து விடுவாரா?​ கனிமொழியின் மகனாவது அதைப் படிக்க முன்வருவானா?
சங்க காலத்தில் தமிழ்நாட்டுக்கும் கிரேக்கத்துக்கும் நேரடித் தொடர்பு இருந்தது.​ அதே காலகட்டத்தில் சாக்ரடீஸ்,​​ பிளேட்டோ,​​ அரிஸ்டாட்டில் போன்ற எண்ணற்ற அறிஞர்கள் கிரேக்கத்தில் வாழ்ந்தனர்.
பதினான்கு-பதினாறாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா மறுமலர்ச்சி அடையக் காரணம் முன்னாளைய கிரேக்கச் சிந்தனைகள்தாம்.​ கிரேக்கத்தை ரோமாபுரி அடிமை கொண்ட பிறகும் கிரேக்கர்களை அடிமை கொள்ள முடியாமைக்குக் காரணம் அவர்களுடைய அறிவு வலிமைதான்.


​ அவ்வளவு சிறந்த கிரேக்கம் தமிழ்நாட்டோடு உறவு நிலையில் இருந்தது.​ யவனப் பெண்கள் இறக்குமதியானார்கள்;​ யவன மது இறக்குமதியானது;​ யவன வீரர்கள் இறக்குமதியாகி பாண்டியர்களின் அரண்மனைகளில் மெய்க்காப்பாளர்களாக விளங்கினார்கள்.​ ஆனால் யவன அறிவு மட்டும் இறக்குமதியாகவில்லை.
வள்ளுவன் போன்ற நிகரற்ற பேரறிஞர்கள் தமிழ்நாட்டை உலகின் அறிவுத் தரத்துக்கு உயர்த்தி நிறுத்தினார்கள் என்றாலும்,​​ இன்னொரு வகையான சிந்தனைப் போக்குக்கு வாய்ப்பு வந்தும் தமிழர்களால் தேடப் பெறாமல் கடல் பரப்புக்கு அந்தப் பக்கமே நின்றுவிட்டது.
நாம் சங்க காலத்தில் இழந்தது எவ்வளவு பெரிய சிந்தனைகளை என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளைக்காரன் கொண்டு வந்த அறிவு மூட்டையை அவிழ்த்தபோதுதான் தெரிந்தது.


வெள்ளைக்காரன் நமக்குச் செய்த தீமைகள் எண்ணிலடங்காதவை.​ அவனால் ஏற்பட்ட சில நன்மைகளில் ஒன்று திண்ணைப் பள்ளிக்கூடத்திலிருந்த நம்மைப் பெயர்த்தெடுத்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் கொண்டு சேர்த்ததுதான்.​ ஆத்திசூடி மட்டும் படித்த நம்மை அரிஸ்டாட்டிலின் அரசியலையும் படிக்க வைத்ததுதான்.​ ஆனால் துணைவேந்தர் திருவாசகம் பல்கலைக்கழகத்தை மீண்டும் திண்ணைப் பள்ளிக்கூடம் ஆக்கி விடுவார் போலிருக்கிறதே!
​ கருணாநிதியின் ஒரு புகழ்பெற்ற சிந்தனை ''ஸ்ரீரங்கனாதனையும் தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளந்திடும் நாள் எந்நாளோ?''இவர்களுக்கு வடிவங்களின் மீது சினமா அல்லது கடவுளின் மீதே சினமா?​ வடிவங்களின் மீதுதான் சினம் என்றால் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தக் கருணாநிதி ஏன் எழுந்து நிற்கிறார்?​ தேசியக் கொடி தேசம் அல்லவே!​ அதன் அடையாளம்தானே!


நீங்கள் ஒரு கந்தையை உயரத்தில் பறக்கவிட்டுத் தேசத்தை அடையாளப்படுத்திக் கொள்வதுபோல,​​ தேவைப்பட்டவன் எங்கும் பரந்து விரிந்து ஊடுருவி நின்று எல்லோரையும் எல்லாவற்றையும் தோற்றுவித்து அழிக்கும் இறையாற்றலை ஸ்ரீரங்கத்தில் "கிடந்த கோலத்தில்' ஒருவன் அடையாளப்படுத்திக் கொண்டால் என்ன குற்றம்?​ சீன எல்லையில் நிறுத்த வேண்டிய பீரங்கியை அவனிடம் கோட்டை விட்டுவிட்டு திருச்சி எல்லையில் நிறுத்துவதாகச் சொல்வதுதான் நவீன சிந்தனையா?


"ஒருவனே தேவன்' என்று திருமந்திரக் கோட்பாட்டைத் தி.மு.க.​ கடன் வாங்கிக் கொண்டதே!​ இவர்கள் தேவன் இருப்பதை அறிந்தது எவ்வாறு?​ இறை மறுப்புவாதிகள் ​ இன்று வரை விளக்கவில்லையே! காணப்படாத ஒன்றை இருப்பதாகச் சொல்வது " உய்த்தறிந்து' சொல்லும் கருதல் அளவை என்னும் தர்க்க வழிப் பட்டதுதானே.
பானை இருப்பதால் அதைச் செய்த குயவன் ஒருவன் இருக்க வேண்டும்;​ அதுபோல் உலகு இருப்பதால் அதைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்க வேண்டும் என்பவை எல்லாம் உய்த்தறிந்து சொல்லப்படுபவைதானே.​ "ஒருவனே தேவன்' என்னும் கோட்பாட்டைத் தி.மு.க.​ கைக்கொண்டது "கருதல் அளவை' என்னும் தர்க்கப்படிதான் என்றால் அண்ணாவுக்கு முந்தைய வரிசையில் பெரியார் படத்தைத் தூக்கி விட்டுத் திருமூலர் படத்தைப் போட்டுக் கொள்ள வேண்டியதுதானே?


கருணாநிதி சிந்தனைகளை முதுகலை வகுப்புக்கு முதன்மைப் பாடமாக வைத்தால்,​​ எவராவது தப்பித் தவறிச் சேர்ந்து விட்டவர் மேற்கண்ட வினாக்களுக்கு நிகரான வினாக்களை எழுப்பினால்,​​ திருவாசகம் என்ன விடை சொல்வார்?​ எவ்வளவோ அறிவான ஆசிரியர்களும் பேராசிரியர்களும் இதே பல்கலைக்கழகத்தில் தரைமட்டத்தில் கிடக்க,​​ ஆங்கில மொழித் தடுமாற்றம் உள்ள என்னை விண்ணளவு தூக்கி நான் வசதியில் மிதக்கக் காரணமான கருணாநிதி என்று திருவாசகம் வெட்கமில்லாமல்கூட விடையிருப்பார்!​ அறிவுலகம் ஏற்குமா?
பாடம் கற்பிப்பவர் குறைபாடுடையவராக இருக்கலாம்;​ பாடமே குறைபாடுடையதாக இருக்கலாமா?​ எது அறிவு?​ நல்லதன் நலனையும்,​​ தீயதன் தீமையையும் உள்ளவாறு உணர்த்துவது அறிவு என்று தமிழ்மொழி கூறும்.



காந்தியின் சிந்தனைகளை முதுகலை வகுப்புக்கு முதன்மைப் பாடமாக வைக்கும்போது,​​ கருணாநிதி சிந்தனைகளை வைக்கக் கூடாதா என்று கேட்கிறார் திருவாசகம்.
சில ஆயிரம் வெள்ளைக்காரர்கள் பல கோடி இந்தியர்களை ஆள முடிவதற்குக் காரணம் தீமையோடு மக்கள் ஒத்துழைப்பதுதான் என்று அவர்களுக்கு உணர்த்தி,​​ ஆயுதங்களைத் திரட்டாமல் மக்களைத் திரட்டியது,​​ உலகு அதுவரை கண்டறியாத போர்முறை அல்லவா!​ ​
காந்தி ஒரு யுகத்தை வடிவமைக்க வந்த சிந்தனையாளர்;​ காந்தியும் கருணாநிதியும் ஒன்றா?
தமிழ்நாட்டில் மாம்பழக் கவிராயர் சீட்டுக்கவி எழுதிக் கொண்டிருந்த காலகட்டத்தில்,​​ ஜெர்மானியச் சிந்தனையாளர் இமானுவேல் காண்ட் தூய அறிவு குறித்த ஆய்வினை மேற்கொண்டிருந்தார்.​ காலமும் வெளியும் நம்முடைய மனத்தின் படைப்புகளே!​ அவை புறப்பொருள்களை ஒழுங்குபட அடுக்கி உணர்வதற்கான மனத்தின் கருவிகள் மட்டுமே என்றார் காண்ட்.


காண்ட்டைப் படிப்பதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா,​​ இல்லை,​​ கருணாநிதியின் பராசக்தி வசனத்தைப் படிப்பதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா?​ திருவாசகம் சொல்லட்டுமே!
வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறுதான் -​ அடித்துச் சொன்னார் ​ காரல் மார்க்ஸ். உற்பத்திச் சாதனங்களைப் பொதுவுடைமை ஆக்காத சமூகத்தில் பணமே எல்லாமாக விளங்கும்.​ ஆட்சி,​​ சமூக மதிப்பு,​​ தலைமைப் பொறுப்பு அனைத்துமே பணத்தால் தீர்மானிக்கப்படும்.​ பணம் இல்லாத உண்மைகள் உறங்கும்;​ பணமுடைய பொய்மைகள் கோலோச்சும்.​ பணமுடைய முட்டாள் மதிக்கப்படுவார்;​ பணமில்லாத அறிஞர் இழிவுபடுத்தப்படுவார்!


​ திருவாசகங்கள் துணைவேந்தர்களாவார்கள்;​ கருணாநிதிகள் நாடாள்வார்கள் என்று மார்க்ஸ் பெயர் குறிப்பிடாமல் அனைத்தையும் பேசுவது போலில்லையா மேற்கண்ட வாதங்கள்.

​ வர்க்க வேறுபாடற்ற சமூக உருவாக்கத்தைப் பற்றிப் படிக்க பல்கலைக்கழகம் வேண்டுமா?​ கருணாநிதியின் "இல்லற ஜோதி' வசனத்தைப் படிக்கப் பல்கலைக்கழகம் வேண்டுமா?​ திருவாசகம் சொல்லட்டுமே! தாவோயியம்,​​ புத்தர்,​​ வள்ளுவர்,​​ ஏசு,​​ நபிகள் நாயகம்(ஸல்),​​ சங்க இலக்கியம்,​​ எபிகூரியன் கொள்கை,​​ ஸ்டோயிசிசம்,​​ மாக்கிவெல்லி,​​ சாணக்கியன்,​​ உபநிடதங்கள்,​​ ஹாப்சின் லெவியதான்,​​ ஜான் லாக்கின் அரசியல் தத்துவம்,​​ ரூசோ,​​ நீட்சே,​​ ஹியூம் இவர்களோடு நம்முடைய ஊர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களைப் படித்து முன்னேறிச் செல்வதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா?​ "திரும்பிப் பார்' வசனத்தைப் படித்துவிட்டுத் திரும்பி நடப்பதற்குப் பல்கலைக்கழகம் வேண்டுமா?
பல்கலைக்கழகங்களில் முதுநிலை வகுப்பில் கருணாநிதியின் சிந்தனைகளைப் "பணம் வேறு கட்டி'ப் படிப்பதற்குப் பதிலாக அந்தப் பணத்தில் பத்து மாடுகளை வாங்கி வைத்துக் கொண்டு மேய்க்கலாமே!​ பால் வளமாவது பெருகுமே!


மீனாட்சி அம்மன் கோயிலில் செருப்புக் குத்தகையை ஏலம் எடுப்பவர் ஒரு முதுநிலைப் பட்டதாரியாகவும் இருந்தால் அடுத்த துணைவேந்தராகி விடலாம்.​ கூடுதல் தொகைக்கு ஏலம் கேட்பதுதான் முக்கியமானது. திண்ணைப் பள்ளிகளாகின்றன பல்கலைக்கழகங்கள்!

1 comment:

  1. பழ.கருப்பையா அவர்களின் கட்டுரை மீள் பதிவு செய்ததற்கு நன்றி.
    மதுரை பல்கலை கழகத்தின் பழைய மாணவன் என்பதால், இது கொஞ்சம் சுடுகிறது

    ReplyDelete