Monday, September 6, 2010

ஜோதியை அணைத்த ‘மன்னர் ஜவகர்’கள்!!



பத்தாம் வகுப்பில், 500க்கு 475 மதிப்பெண்கள்! பனிரெண்டாம் வகுப்பில் 1200க்கு 1105 மதிப்பெண்கள்!! நாமக்கல் மாவட்டம் முள்ளக்குறிச்சி அருந்ததியர் தெருவில் வசித்து வந்த 18 வயதான ஜோதி பெற்ற மதிப்பெண்கள் தான் இவை. பத்தாம் வகுப்பு வரை அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் படிப்பு. நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி இவரை இலவசமாக பனிரெண்டாம் வகுப்பு படிக்கவைத்தது.

அரசு ஒதுக்கீட்டில் சென்னை அண்ணா பல்கலையில் பொறியியல் (இசிஇ) படிக்க வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. இதற்கும் அவரது தாத்தா விவசாயக் கூலியாக வேலை பார்க்கும் பண்ணையின் உரிமையாளர் பணஉதவி செய்து பல்கலையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு ஜோதி உயிருடன் இல்லை.

கடந்த மாதம்தான் ஜோதி பல்கலையில் சேர்ந்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்கலை விடுதியிலிருந்து வீடுக்குச் சென்றவர், துப்பட்டாவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கிறார். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஜோதி தமிழ் வழியில் படித்த கிராமத்து மாணவி. சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியாத இவரை கல்லூரியில் சகமாணவர்கள் கேலியும் கிண்டலும் செய்திருக்கிறார்கள். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். ஆனால் “மூன்று ஆண்டுகளாக எங்கள் பல்கலையில் ராக்கிங் கிடையாது. ஜோதியின் தற்கொலைக்குக் காரணம் குடும்பப் பிரச்னைதான்” என்று துணை வேந்தர் மன்னர் ஜவகர் கூறுகிறார். பதினெட்டு ஆண்டுகளாக இல்லாத குடும்பப் பிரச்னை அண்ணா பல்கலையில் சேர்ந்த ஒரு மாதத்திற்குள் வந்தது எப்படி? அதுவும் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குப்போகுமா என்பதை யோசிக்க வேண்டும்.

பத்திரிகைகளும் ஜோதியின் தற்கொலைக்கு ராக்கிங் தான் காரணம் என்று தவறுதலாக எழுதுகிறார்கள். உண்மையில் இது ராக்கிங் கிடையாது. ஆங்கிலம் பேசத் தெரியாத கிராமத்து மாணவ மாணவிகளை கேலி கிண்டல் செய்யும் போக்கிது! இதை சீனியர் மாணவர்கள் என்றில்லை சக மாணவர்களும் கூட செய்திருக்கலாம். மாணவர்கள் என்றில்லை சில ஆசிரியர்களும் ஆங்கிலம் தெரியாத மாணவ மாணவிகளை எளக்காரமாக நடத்துவதை மறுக்கமுடியாது.

தமிழ் வழியில் படித்த அதுவும் கிராமத்து மாணவ மாணவிகள் சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு கல்வி கற்க வரும்போது ஏராளமான சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. இப்போது ஜோதியின் தற்கொலை மூலமாக அந்தப் பிரச்னை வெளிப்பட்டிருக்கிறது. பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்ததால்தான் கிராமத்து
மாணவ மாணவிகள் அதிகளவில் இந்தப் படிப்புகளில் சேர வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதுவும் ஜோதி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இடஒதுக்கீட்டால் மேல்சாதி உயர்த்தட்டு மக்களின் கல்வி வாய்ப்பு மறுக்கப்படுவதாக ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. அதை நகரத்து மேல்தட்டு இளம் மாணவர்களின் மனதில் அவர்களின் பெற்றோர்களும், சில ஊடகங்களும் பதியச் செய்கிறார்கள். இதனாலேயே ஜோதி போன்ற மாணவிகள் ஆயிரம் தடைகளைத் தாண்டி முதல் தலைமுறையாக கல்லூரிகளுக்குள் நுழையும்போது நகரத்தைச் சேர்ந்த சகமாணவர்களாலேயே கேலியும், கிண்டலுக்கும் ஆளாக நேரிடுகிறது.

சமூகவியல் இளங்கலை முடித்துவிட்டு (கோவை பூ.சா.கோ) அதே கல்லூரியில் எம்.ஏ., மாஸ் கம்யூனிகேஷன் மக்கள் தொடர்பியல் துறையில் சேர்ந்தேன். அப்போது துறைத் தலைவரான பிச்சாண்டி, இளங்கலையில் ஆங்கிலம் இலக்கியம் படித்தவர்கள் மட்டுமே மாஸ் கம்யூனிகேஷன் படிக்க முடியும் என்று கூறி மாணவர்களை பயமுறுத்தினார். இதனால் சில மாணவர்கள் பயந்தடித்துக் கொண்டு வேறு துறைகளுக்கு மாறிச்சென்றனர். நானும் அப்படிச் சென்றிருந்தால் அது எனக்கேற்பட்ட மிகப்பெரிய இழப்பாக இருந்திருக்கும். பின்னாளில் ஆங்கில இலக்கியம் படித்த மாணவிகளை விட நான் கூடுதல் மதிப்பெண் பெற்றேன்.

ஜோதியும் பொறுமை காத்திருந்தால் சிறந்த பொறியாளராக வந்திருப்பார். பள்ளிக் கல்வியில் முதல் மாணவியாக சிறந்து விளங்கிய இவரால் அண்ணா பல்கலையில் நேர்ந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்திருக்கிறார். இத்தனையும் மறைத்துவிட்டு “எங்களிடம் தவறில்லை. ஜோதியின் குடும்பத்தினர்தான் தவறு செய்திருக்கிறார்கள்“ என்று வாய்கூசாமல் மன்னர் ஜவகர் பேசுகிறார். மீடியாக்களும் மன்னர் ஜவகரை வழிமொழிகின்றன. முன்னதாக ஜோதியைப் பற்றி காவல்துறை மற்றும் ஊடகங்களிடம் எதுவும் பேசக்கூடாது என்று மன்னர் ஜவகர் தன்னுடைய மாணவர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார். மடியில் கனமில்லை என்றால் வழியில் எதற்குப் பயம்?

ஜோதியின் தற்கொலை, ஏழை-கிராமத்து மற்றும் தமிழ் வழியில் படிக்கும் மாணவிகள் மீது நமது கல்வி முறை ஏவும் வன்முறையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. இந்த உண்மையை மறைக்க முயல்வதை கைவிட்டு, இந்த சமூகக் குற்றத்தை சரிசெய்தால் (கல்வி)ஜோதிகள் அணையாமல் இருந்து தன் சமூகத்துக்கு வெளிச்சம் பாய்ச்சும்!

Saturday, August 28, 2010

ஜூனியர் விகடனிடம் அடைக்கலமாகும் தினமலர்!



ஜூனியர் விகடன் விவகாரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் ஒன்றாக இணைந்து அழகிரி ஆதரவாளர்களுக்கு எதிராக களம் இறங்கியிருப்பது ஆக்கப் பூர்வமான ஆரம்பம். தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தினகரன் நிர்வாகம் அடித்த அல்தர் பல்டிக்கு இது ஒரு பாடம்.

ஜூனியர் விகடன் விவகாரத்தில், அண்மையில் முதல்வரை சந்தித்த பத்திரிகையாளர்கள் குழு, தினமலர் செய்தி ஆசிரியர் (உண்மையில் அப்படியொரு பதவி தினமலரில் யாருக்கும் தரப்படுவதில்லை) லெனின் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியிருந்தார்கள்.தினமலர் மீது ஏன் வழக்குத் தொடரப்பட்டது, எதற்காக லெனின் கைது செய்யப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

நடிகை புவனேஸ்வரி கைது விவகாரத்தைத் தொடர்ந்து பாலியல் தொழில் செய்யும் நடிகைகளின் பட்டியலை தினமலர் வெளியிட்டது. ரஜினி உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகமும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க அதிர்ந்து போன தினமலர் மறுநாள் வருத்தம் தெரிவித்து அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகைகள் சார்பில் ஒட்டுமொத்த நடிகர்களும் இணைந்து தினமலருக்கு எதிராகப் புகார் கொடுக்க தினமலர் உரிமையாளர்கள் பதுங்கிக் கொண்டு, லெனினை போலீசில் காட்டிக் கொடுத்தார்கள். லெனினும் கைது செய்யப்பட்டார்.

இதில் பலருக்கும் தெரியாத ஓர் உண்மை மறைக்கப்பட்டது. அப்படியொரு செய்தியை ஆதாரமின்றி வழங்கியதற்காக செய்தியாளர் விஜய் என்பவர், உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இப்போது திருச்சி காலைக்கதிரில் அவர் வேலை பார்க்கிறார். இதை மறைத்துவிட்டு, அந்தச் செய்தியில் என்ன தவறு இருக்கிறது என்கிற பிரசாரத்தில் இறங்கிய தினமலர், தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்களை (நயவஞ்சகமாக) ஒன்று திரட்டி நடிகர் நடிகைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அந்த நேரத்தில் நடிகர் நடிகைகளும் ஒட்டுமொத்த பத்திரிகை உலகையே கொச்சைப்படுத்தி பேசிய பேச்சும், அனைத்து பத்திரிகையாளர்களையும் கோபம் மூட்டியது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த லெனின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இப்போது அவர் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வரிடம் கோரியிருக்கிறார்கள். முதல்வரோ, “குடும்பத்துடன் வாழும் பெண்களைப் பற்றி இஷ்டத்துக்கு அவதூறாக எழுதியது சரியா? சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரிலேயே நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அவர்களிடம் பேசித்தான் முடிவு எடுக்க முடியும்” என்று மிகச் சரியாகப் பேசியிருக்கிறார்.

தினமலர் அந்த வழக்கிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைத்தால் சம்பந்தப்பட்ட அந்த நடிகைகளிடம் போய், மன்னிப்புக் கேட்டு வழக்கை திரும்பப் பெற கோர வேண்டும். அதைவிடுத்து குறுக்கு வழியில் முதல்வரிடம் முறையிட்டு அதுவும் ஜூனியர் விகடன் விவகாரத்தை சாக்காக வைத்து ஆதாயம் தேட நினைப்பது கோழைத்தனம்.

ஜூனியர் விகடன் ஆளும் கட்சியில் அதிகாரத்தில் இருப்பவர்களின் அடாவடித் தனத்திற்கு எதிராக செய்தி வெளியிட்டு அதற்குக் கிளம்பிய எதிர்ப்பை மிக நேர்மையாக சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நடிகைகள் பாலியல் தொழில் செய்வதாக எந்த ஆதாரமும் இன்றி அந்த நடிகைகளின் புகைப்படத்துடன் (வாடிக்கையாளர்களிடம் படுப்பதற்கு அவர்கள் வாங்கும் தொகையையும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள்) செய்தி வெளியிட்டது எந்த வகையில் பத்திரிகை தர்மத்துக்கு உகந்தது?

பத்திரிகை சுதந்திரம் என்ற போர்வையில் ஜூனியர் விகடனுடன் தன்னை இணைத்துப் பார்க்கும் தகுதி தினமலருக்கில்லை. பத்திரிகை சுதந்திரத்தை தமிழர்களுக்கும், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கும், தலித்களுக்கும் எதிராக தினமலர் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. தினமலருக்கு தைரியம் இருந்தால் அந்த வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்கட்டும். அப்படி சந்தித்தால் ‘சந்தி சிரித்துவிடும்!‘

Friday, August 20, 2010

திருட்டு வி.சி.டி.யில் மட்டும் படம் பாருங்கள்!



திரையரங்குக்குள் தின்பண்டம் கொண்டுசெல்வதை திரையரங்கு நிர்வாகம் தடுப்பது முறையல்ல என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. யாரோ ஒரு புண்ணியவான் தொடர்ந்த பொதுநல வழக்கால் மக்கள் தங்களுடைய உரிமையை உணர்ந்திருக்கிறார்கள். சினிமாவில் அநியாயத்துக்கு எதிராகப் பொங்கும் ஹீரோக்கள், திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்காதீர்கள் என்று பொதுமக்களிடம் கெஞ்சுவார்கள். ஆனால் திரையரங்கு நிர்வாகத்தின் கொள்ளை லாபம் பற்றி எல்லாம் வாய் திறக்கவே மாட்டார்கள். உண்மையில் அவர்களால் அது பற்றி பேசவே முடியாது. திரையரங்கு உரிமையாளர்களுக்கும் படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடையே கமுக்கமான உடன்பாடு உண்டு.

அது பற்றி பார்ப்போம். சுறா படத்துக்கு 5 கோடி சம்பளம் வாங்கிய விஜய் அடுத்த படமான காவலனுக்கு 7 கோடி வரை சம்பளம் வாங்கியதாக சொல்கிறார்கள். இத்தனைக்கு சுறா படம் படுதோல்வி. பிறகு எப்படி இது சாத்தியமானது என்கிறீர்களா? இதற்கு மினிமம் கியாரண்டி என்ற வியபார உத்திதான் காரணம். அதாவது தயாரிப்பாளர்கள் தங்களுடைய படத்தை திரையரங்குகளுக்கு குறிப்பிட்ட விலை வைத்து கொடுத்துவிடுவார்கள். அதில் நட்டம் ஏற்பட்டால், அதுபற்றி தயாரிப்பாளர்களுக்குக் கவலை இல்லை. லாபம் கிடைத்தால் அதில் தயாரிப்பாளர்களுக்கு பங்கு தரவேண்டும் என்பதுதான் இந்த மினிமம் கியாரண்டியில் உள்ள சூட்சமம்.

ரஜினி, கமல், அஜித், விஜய், (இப்போது சூர்யாவும்) போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் மினிமம் கியாரண்டியில் வியாபாரம் செய்யப்படுகிறது. வேட்டைக்காரனை விட அதிக விலைக்கு சுறாவையும் சுறாவை விட அதிக விலைக்கு காவலனையும் திரையரங்கு உரிமையாளர்கள் வாங்கியாக வேண்டும். எனவேதான் நடிகர்கள் படத்துக்குப் படம் தங்கள் சம்பளத்தை உயர்த்திக் கொள்ள முடிகிறது.

திரையரங்கு உரிமையாளர்களும் டிக்கெட் விலையை உயர்த்தியும், ப்ளாக்கில் விற்பது மூலம் கிடைக்கும் கமிஷன், கேண்டீன், பார்க்கிங் வசூல் ஆகியவை மூலமும் லாபம் பார்த்து விடுகின்றனர். நடிகர்கள், தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது. அதன்படி, திரையரங்குகளில் டிக்கெட் விலையை எவ்வளவு உயர்த்தி விற்றாலும் அது பற்றி யாரும் கேள்வி கேட்கக் கூடாது. திரையரங்கு உரிமையாளர்கள் ஆட்சியில் இருப்பவர்களையும் கவனித்து விடுவதால் அவர்களின் அத்துமீறல்கள் கவனிக்கப்பட மாட்டாது. அண்மையில் அபிராமி மால் (மல்டி ஃபிளக்ஸ்) திரையரங்கு தரம் உயர்த்தப்பட்ட போது அதை திறந்து வைத்தவர், நமது முதல்வர்! அங்கு குறைந்த பட்ச டிக்கெட் விலை 100.

அரசும் ஹீரோக்களும் திரையரங்குகளின் அத்துமீறல்களுக்கு எதிராக நிச்சயம் எதுவும் செய்யப் போவதில்லை. எனவேதான் சொல்கிறேன் எல்லோரும் திருட்டு வி.சி.டி.யில் மட்டும் படத்தைப் பார்த்து ரசியுங்கள். திரையரங்கு பக்கம் வரவே வராதீர்கள்.அதுதான் சரி.. என்று எனக்குப் படுகிறது!

Wednesday, August 11, 2010

சீமான் முதல் உமா சங்கர் வரை....

# எதிர்க்கட்சியாக இருக்கும் போதெல்லாம் மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள் என்று தி.மு.க. மார்த்தட்டிக் கொள்ளும். தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்கும் போது தங்களை எதிர்ப்பவர்களுக்கு மிசாவையே காட்டிவிடுவார்கள். சீமானின் தொடங்கி உமா சங்கர், ஜூனியர் விகடன் என போய்க் கொண்டே இருக்கிறது உடன் பிறப்புகளின் அத்துமீறல்.

# பத்திரிகையாளர்கள் மீதான அச்சுறுத்தலை கண்டித்து சென்னையில் செவ்வாய் அன்று நடந்த போராட்டத்தில் நக்கீரன் கோபால் கலந்து கொண்டாரா என்பதை கேட்டுச் சொல்லவும்/ நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

# தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்ட இதழ் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் உள்பட மூன்று பேர் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டுள்ளனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்யாமல் கள்ள மௌனம் சாதிக்கின்றனர்/ இதற்குப் பேருதான் எமர்ஜென்ஸி!

# ஆளும் கட்சி ஜூனியர் விகடன் மீது கடுங்கோபத்திலிருக்கிறது. அப்படியென்றால் மற்ற பத்திரிகைகள் ஆளும் கட்சியினருக்கு ஜால்ரா போடறாங்களா என்று, கேட்காதீர்கள்?

# நான் எழுதிய இனப்படுகொலையில் கருணாநிதி புத்தகங்கள் விற்ற பணம் வரவில்லை என்று என்னுடைய ஆதங்கத்தைப் படித்த பாடலாசியர்-கவிஞர் கவிபாஸ்கர் என்னைத் தொடர்பு கொண்டார். அவ்வப்போது வசூலாகும் தொகையை உடனுக்குடன் கொடுத்து வருபவர் அவர். எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகக் கடை போடலாம் என்று இருவரும் பேசியிருக்கிறோம். (திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் கையை சுட்டுக் கொண்டது போதாக்கும் என்கிறாள் என் மனைவி)

# இந்திய அரசின் போலி ஜனநாயகத்தை ஆதாரங்களுடன் பட்டியலிட்டு புத்தகம் எழுத வேண்டும் என்பது ஆசை. சோம்பேறித்தனத்தால் அந்த வேலை தள்ளிக் கொண்டே போகிறது.

# எந்திரன் படத்தின் தெலுங்கு பதிப்பான ரோபோவின் உரிமை தன்னிடம் இருப்பதாகப் போலி ஆவணங்களைக் காட்டி ஆந்திர தியேட்டர் உரிமையாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கிய இயக்குநர் ஷங்கரின் அலுவலக மேலாளர், உதயகுமார் கைது. நீங்கள் வருமான வரித்துறையை ஏமாற்றுகிறீர்கள். உங்களை ஒருவன் ஏமாற்றுகிறான். ஏமாத்துக்கு ஏமாத்து சரியா போச்சுப்போ...

Sunday, August 8, 2010

இனப்படுகொலையில் கருணாநிதியும் இயக்குநர் ஷங்கரும்!



# நான் எழுதிய இனப்படுகொலையில் கருணாநிதி (ஆயிரம் புத்தங்கங்கள்) விற்றுத் தீர்ந்து விட்டன. ஆனால் விற்பனைத் தொகைதான் கைக்கு வந்தபாடில்லை.

# த்ரி இடியட்ஸ் படத்தை தமிழில் ஷங்கர் இயக்கலாம் என்கிறார்கள். எந்திரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் எல்லோரும் ஷங்கரைப் புகழ்ந்து தள்ளினார்கள். இடியட்ஸ்!

# தோள்பட்டை சவ்வில் ஏற்பட்ட பாதிப்பால் அறுபத்து சொச்சம் வயதான என் தாய் புஷ்பம் கடுமையான வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். காலையில் கைப்பேசி வழியாக ஊரிலிருந்து வந்த இந்தத் தகவல் மனசஞ்சலத்தை ஏற்படுத்திவிட்டது. 87 வயதில் முதல்வர் பணியை செய்யும் ஓய்வறியா சூர்யன் இருக்கும் தமிழ்நாட்டில் என் தாய்க்கு ஏனிந்த கொடுமை?

# பதிவெழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. சமூக அரசியல் சர்ச்சைகள் குறித்து குறுந்தகவல் அனுப்புவது, இணைய தளங்களில் எழுதுவது போன்றவற்றால் தங்கள் சமூகக் கடமை தீர்ந்து விட்டதாக இன்றைய இளைய தலைமுறை நினைக்கிறது. நம்முடைய மதிப்புமிக்க நேரத்தை யும் இணையம் வீணடித்து வருகின்றன. நானும் இவற்றிலிருந்து முழுவதுமாக விடுபட்டு விட்டேன் என்று சொல்வதற்கில்லை. அதேநேரத்தில் இணைய தளங்களில் எழுதுவதோடு என் அரசியல் நடவடிக்கைகளை முடிந்து போவதில்லை.

# அமானுஷ்யத்தைக் கருவாகக் கொண்ட நெடுந்தொடருக்கு கதை, திரைக்கதை தயாரித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கிடையே அரசியல் வேலைகளும் பத்திரிகைப் பணிகளும் போய்க் கொண்டிருதானிருக்கிறது.

# ஒரு சொந்தத் தொழில் அமைந்து விட்டால், முழுமையாக சினிமாவில் இறங்கிவிடலாம். என் ஆசைக்காக மனைவியை கஷ்டப்படுத்தக் கூடாதல்லவா?

# ஜெயமோகனின் லோகி, எமர்ஜென்ஸியில் நடந்தது என்ன?, ஜே.ஜே.சில குறிப்புகள் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே நேரத்தில வெவ்வேறான புத்தகங்களை மாறி மாறிப் படிப்பது (திட்டமிடாத) பழக்கமாகிவிட்டது.



# லோகியின் கிரீடம் பார்த்தேன். அற்புதம். மலையாளம் சாந்துப் பொட்டு பார்த்தேன். தமிழில் விக்ரம் அல்லது சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும்.

Tuesday, June 15, 2010

“என்ன கொடுமை இது ஞாநி?“ -தாமரை




9-6-2010 குமுதம் ஓ... பக்கங்களில் சீரழிவு என்று தலைப்பிட்டு ஞாநி எழுதியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சர்வதேச இந்திய திரைப்படக் கழகத்தின் (ஐஃபா) விருது வழங்கும் விழாவை வலியப் போய் கொழும்பில் நடத்துவதன் அரசியல் ஞாநிக்குப் புலப்படவில்லை போலும். தென் கொரியாவின் சியோலுக்கு உறுதியளிக்கப்பட்ட நிகழ்வை அவசர அவசரமாகக் கொழும்புக்கு மாற்றியது இனப்படுகொலையின் கரையை மறைத்து வெள்ளையடிக்கத்தான் (அல்லது மூவர்ணம் பூசத்தான்) என்பதே உண்மை!

கொழும்பு விழா வெறும் கலைவிழா அல்ல. காசேதான் கடவுளடா என்று கொலைக்களத்தில் சந்தை தேடிப் புறப்பட்டுள்ள இந்தியப் பெரு வணிகர்களின், பெரு முதலாளிகளின் (FICCI) ஆதாய வேட்டை விழா. பண்பாட்டுச் சீரழிவின் இருமுனைகள் (வணிகத் திரையும், வணிகக் கிரிக்கெட்டும்) இணைந்து பட்டுத் திரையிட்டுப் படுகொலைகளை மறைக்கும் விழா என்பதெல்லாம் ஞாநிக்குத் தெரியாததா?
‘சிலருடைய மிரட்டல் அரசியல்‘ என்கிறார் ஞாநி. ‘குருதி பிசுபிசுக்கும் கொலைக்களத்தில் கூத்துக் கும்மாளமா? தடுக்க வேண்டும் தமிழ்த் திரையுலகம்‘ என்று தமிழ்த் திரைத்துறையினருக்கு வேண்டுகோள் வைத்து முன்கை எடுத்த என் போன்றோருக்கு அரசியல் ஏதுமில்லை. மனிதஉரிமை, மக்கள் பிரச்னை, தமிழர்நலம் தவிர வேறெந்த அரசியலும் நான் செய்கிறேனோ என்று ஞாநி சொல்லட்டும்! நாங்கள் எப்போது யாரை மிரட்டினோம் என்று விளக்கட்டும்! அறப்போராட்டங்களுக்கு மிரட்டல் என்று பெயர் சூட்டலாமா?

ஓராண்டு முன்னால் ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு ராஜபக்சேயின் இனவெறி அரசியலை காரணம் என்பதை மறைத்து பழியில் பாதியைப் புலிகள் மீது சுமத்துகிறார், ஞாநி. என்ன கொடுமை இது? தாக்குகிறவனையும், தாக்கப்படுகிறவனையும் ஒரே தட்டில் வைத்துப் பேசுகிற மகா அறிவாளிகளின் பட்டியலில் ஞாநியும் சேர்ந்துவிட்டாரா?
ஒரு லட்சம் மக்களைக் கொன்று இனப்பேரழிப்பை நடத்தியவர், ராஜபக்சே என்று உலகமே அறியும். விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் தமிழ்மக்களை இனஅழிப்பிலிருந்து காப்பாற்ற இயன்ற வரை போராடித் தோற்றார்கள். அவர்கள் தங்கள் ஆயுதங்களை மவுனித்தப் பின்புதான். முள்ளிவாய்க்காலில் முழுப் பேரழிவு நடந்தது என்பதை ஞாநியின் மனசாட்சி அறியாமலிருக்காது.
‘கொடூரங்கள் முடிந்து ஓராண்டு கழிந்தது‘ என்கிறார் ஞாநி. ஓராண்டு என்ன நூறாண்டு ஆனாலும் இந்தக் காயம் ஆறாது. இனக்கொலை புரிந்தவர்களைக் கூண்டில் ஏற்றி தண்டிக்கும் வரை, தமிழ்மக்களுக்கு அவர்கள் விரும்பும்படியான அரசியல் தீர்வுகிட்டும் வரை பன்னாட்டுச் சமூகம் எல்லா வகையிலும் கொழும்பு அரசைத் தனிமைப்படுத்தக் கோருவோம். இந்த நோக்கங்களை அடைவதற்கு சிங்கள மக்களும் ஆதரவு தர வேண்டுவோம்.
இந்த ஐஃபா விழாவைக் கராச்சியிலோ இஸ்லாமாபாத்திலோ இந்திய நட்சத்திரங்கள் நடத்துவார்களா என்று ஞாநி கேட்டுச் சொல்லட்டும்!
சிங்களவர்கள் கண்தானம் செய்வதைப் பாராட்டுகிறார், ஞாநி. வெலிக்கடை சிறையில் குட்டிமணி, தங்கதுரையின் கண்களைப் பிடுங்கிப் போட்டு காலில் மிதித்த சிங்களக் காடையர்களின் இனவெறிக்கு முன்னால் எத்தகைய தானமும் எடுபடாது என்பதைப் புரிந்து கொள்ளட்டும்!

ஞாநி போகிற போக்கைப் பார்த்தால், ‘மிரட்டலுக்கு அஞ்சாமல் கொழும்பு கொலை விழாவில் கலந்து கொண்ட ‘விவேக் ஓபராய்‘வுக்கு இந்த வாரப் பூச்செண்டும், இராஜபக்சேயின் அன்பான அழைப்பை நிராகரித்த நமீதாவுக்கு இந்த வாரத் திட்டும் தருவார் என எதிர்பார்க்கலாம். எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலையோடு பேசுவது போல் பாசாங்கு செய்யும் ‘போலிநீதிபதி‘களுக்குரிய ‘நரிநாட்டாமை‘ ஞாநிகளுக்கு அழகில்லை.

Thursday, June 3, 2010

மணிமேகலையும் கிரண்பேடியும்




புழல் சிறை டூ திகார் சிறை

'சிறைக்கோட்டமெல்லாம் அறக்கோட்டமாகட்டும்' என்று அட்சயப் பாத்திரத்தோடு புறப்பட்ட காப்பிய நாயகி மணிமேகலை பற்றி நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்துவிட்டால், குற்றவாளிகள் ஏன் உருவாகப்போகிறார்கள்? என்பதுதான் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை உணர்த்தும் உண்மையோ?

குற்றவாளிகளை சமூகத்திலிருந்து பிரித்து அவர்களை நல்வழிப்படுத்தி நல்லவர்களாக உருவாக்கி மீண்டும் சமூகத்தில் உலவவிடுவதுதான் சிறைச்சாலைகள் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் என்று ஏட்டளவில் உண்டு. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் திரும்பத் திரும்ப சிறைக்கு வரும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்று பயமுறுத்துகிறது, ஒரு புள்ளி விவரம். திருந்த வேண்டியவர்கள், மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டிய அவசியம் என்ன? சிறை பற்றி நியாயமாக இருக்க வேண்டிய அச்சம் அவர்களுக்கு இல்லாமல் போனதற்கு என்ன காரணம்? யார் காரணம்?

களி உருண்டையும், அச்சுச் சோறும் கிடைத்துக் கொண்டிருந்த சிறைகளில், வாரந்தோறும் கறிக்குழம்பு, தினமும் காலை பொங்கல், மதியம் அன் லிமிட்டேட் மீல்ஸும் கிடைத்தால் கைதிகள் திருந்துவது எப்படி என்றொரு ஆதங்கத்தை பல இடங்களிலும் கேட்க முடிகிறது. "சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மின்விசிறி வசதி செய்து தரப்படும்" என்ற தமிழக முதல்வர் கருணாநிதி அறிவிப்புக்கு பரவலாக அதற்குக் கிடைத்த எதிர்ப்பே இதற்குச் சாட்சி.

உண்மையில் சிறை சுகவாசிகளின் கூடாரமாகிவிடட்தா? சிறைகளில் அடிக்கடி பிடிபடும் பல கிலோ கஞ்சாக்களும், செல்போன்களும் 'சிறையில் எல்லா வசதிகளும் கிடைக்கும் போல' என்றொரு சந்தேகம் பாமரனுக்குள் விதைத்திருக்கிறது. இதை எல்லாத்தையும் விட, பல கோடிகளை சுருட்டிய நிதிநிறுவன அதிபர் கைதாகி சிறைக்குச் செல்லும்போதும், ஊழல் வழக்கில் சிக்கும் முன்னாள் அமைச்சர்களும் ஃபோட்டோகளுக்கு போஸ் கொடுத்துக் கொண்டே காவல்துறை வாகனத்தில் ஏறும் காட்சிகள், இவர்கள் என்ன சிறைக்கு பிக்னிக் போகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. திரைப்படங்கள், ஊடகங்கள் மூலம் சிறையைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் உண்மையில் யதார்த்தத்திற்கு வெகு தொலைவிலிருக்கிறது.

தமிழகத்தைப் பொருத்தவரையில் புழல் (சென்னை), கடலூர், சேலம், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, கோவை என ஏழு மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. பெண்கள் மையச் சிறைகள் புழல், வேலூர், சேலம், திருச்சி என மொத்தம் நான்கு உள்ளன. இதுதவிர மாவட்டச் சிறைகள் ஆறு, கிளைச் சிறைகள் (ஆண்கள்) 98, பெண்கள் கிளைச்சிறைகள் 9, சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஒன்று, திறந்தவெளி சிறைச்சாலைகள் இரண்டு என பல்கலைக்கழகங்களுக்கு இணையான எண்ணிக்கையில் சிறைச்சாலைகளும் உள்ளன. இங்கெல்லாம் தண்டனை கைதிகள், விசாரணைக் கைதிகள் என பல லட்சம் பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அண்டைமாநிலமான கர்நாடகச் சிறையில் கைதிகள் தங்கள் குடும்பத்தாருடன் தினமும் பேசுவதற்காக சிறை வளாகத்தில் தொலைப்பேசி வசதிகூட செய்யப்பட்டுள்ளன!

24 மணிநேரமும் கண்காணிப்பும், அதிகாரிகளின் கண்டிப்பும், வெளியுலகத் தொடர்பின்மையும் சிறையின் அடிப்படை விதிகள். இந்த விதிகள் கடுமையாகும் போதுதான் சிறைச்சாலைகளில் மனநோய்க் கைதிகளுக்கான வார்டுகள் தனியாக உருவாக்கப்படுகின்றன. இன்றைக்கும் சென்னை புழல் சிறைச்சாலை வாசலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில் அந்தச் சிறையிலுள்ள மன நோயாளிகளின் எண்ணிக்கை சிறை வாழ்வின் கொடூரமுகத்தைப் பறைசாட்டுகிறது.

அவர்கள் எல்லாம் மனநோயாளிகளாக உள்ளே போனவர்கள் அல்ல. கைதி மனநோயாளிகளாக இருந்தால், அவர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை மனநோயாளிகள் வார்டில் சேர்க்கப்படுவார்கள். கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் கைதிகளுக்கென்று பிரத்யேகமான வார்டு உண்டு என்பதை அறிக.

செய்த தவறுக்கு அல்லது செய்யாத தவறுக்குக் கிடைத்த சிறைவாசத்தை எண்ணி வருந்தும் கைதிகள் மற்றும் தனிமையில் தவிக்கும் கைதிகள் ஆகியோர் மனநோயால் பாதிப்புக்குள்ளாகிவிடுகின்றனர். இவர்களைக் குறிவைத்து ஒருசில ஆன்மிக அமைப்புகள் சிறைக்குள் யோகா, தியானம் மற்றும் அற்புத எழுப்புதல் கூட்டங்களை நடத்துகின்றன. அவற்றின் பலனாக திருந்துவோரின் எண்ணிக்கை எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதற்கான எந்தவொரு புள்ளிவிவரமும் இதுவரை கிடைக்கவில்லை. (இந்த வகுப்புகளை நடத்தியவர்களே பின்னொரு நாள் கைதாகி நிரந்தர சிறை வாசிகளாகிவிடுவதை பார்த்துக் கொண்டுதானிருகிறோம்.)

சிறைச்சாலைகளுக்குள் இயங்கும் திறந்த வெளிப் பல்கலைக்கழகங்கள் விருப்பமும், தகுதியுமுள்ள கைதிகளுக்கு வகுப்பெடுத்து, தேர்வுகள் நடத்தி பட்டதாரிகளாக்கி வருகிறார்கள். இதெல்லாம் சரி, அடிக்கடி சிறைச்சாலைக்குள் அதிகாரிகளின் சோதனைகளில் சிக்கும் செல்போன்களும், கஞ்சா உள்ளிட்ட பொருட்களும் உள்ளே போனது யாருக்காக? எதற்காக? எப்படி? என்று சாக்ரடீஸ் பாணியில் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களில் (பிஸ்கட், பழம், பவுடர், சோப் உள்ளிட்ட பொருட்களை கைதிகளுக்கு அவர்களின் உறவினர்கள்,நண்பர்கள் மூலம் கொடுக்கலாம்) மறைத்து வைத்து சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருகிறார்கள் என்று சிறை அதிகாரிகள் சொல்லலாம். ஆனால் சிறைக்குள் சென்று வருவது என்றாலே சோதனை என்ற பெயரில் சல்லடையாக துளைத்து எடுத்து விடுகிற நிலையில் சிறைக் காவலர்களுக்குத் தெரியாமல் அந்தப் பொருட்கள் உள்ளே கொண்டு செல்லப்படுகிறது என்பதை ஒப்புக் கொள்ளவே முடியாது. தவறு செய்ததாக அவ்வப்போது சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவங்களே இதற்கு சாட்சி. ஆனால் பெரும்பாலும் தவறிழைக்கும் காவலர்கள், அதிகாரிகள் தவிர்த்து கைதிகள் மட்டுமே சிக்குகிறார்கள்.

உலகம் முழுவதும் மனித உரிமைகள் மீதான பார்வை மாறிவரும் சூழலில் சிறை வாசிகளுக்கு சில வசதிகள் கிடைக்கத்தான் செய்கின்றன. ஆனால் வெளியே நடக்கும் கோஷ்டி மோதல்களுக்கு சற்றும் குறைவில்லாத வகையில் சிறைக்குள் நடக்கும் கலவரங்களும் கொலைகளும் தவறு செய்தவர்களை திருந்தக் கூடிய இடம் சிறைச்சாலை என்கிற மாயையை சுக்கு நூறாக்கிவிடுகின்றன. பணமும், ஆள்பலமும் கொண்ட கைதிகள் சிறைக்குள்ளும் கோலோட்சி வரும் செய்திகளை முற்றிலும் வதந்தி என்று ஒதுக்கிவிடமுடியாது. சிறையிலிருந்து பகத்சிங் (எழுதிய நான் ஏன் நாத்திகன் ஆனேன்?), சி.என்.அண்ணாதுரை, கருணாநிதி வைகோ ஆகியோர் படைத்த இலக்கியங்களுக்கு இணையாக சிறைக்குள் மிகப் பெரிய கொலை, கொள்ளைத் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கினற்ன. ஆபாசப் படங்கள் எடுத்து இணைய தளங்களில் உலவவிட்ட டாக்டர் பிரகாஷ் (தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் கைதான முதல் நபர்) கூட நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதிவிட்டாராம்.

வசதிகள் பெருகிக் கொண்டே போனாலும் வானமே எல்லை என சுதந்திரமாக வாழும் உலக வாழ்க்கையோடு சிறை வாழ்க்கையை ஒப்பிட முடியாது. சிறைக்கோட்டங்கள் அறக்கோட்டங்கள் ஆகட்டும் என்ற காப்பிய நாயகி மணிமேகலையின் கனவை ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பேடி திகார் சிறையில் நடைமுறைப்படுத்தினார் என்பதை காலம் பதிவு செய்திருக்கிறது. மணிமேகலைகளும், கிரண்பேடிகளும் உருவானால் சிறைச்சாலைகள் இல்லாத கைதிகள் இல்லாத ஒரு சமூகம் நிச்சயம் உருவாகும்.

-பொன்னுசாமி (நன்றி:www.earangam.com)