சாலைகளில் எதிர்படும் இளம்பெண்களை கண்டும் காணாமல் கடந்து விடும் வயதை கடந்து விடவில்லை நான். ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஈர்ப்பு ஆதாம் ஏவால் காலம் தொட்டு தொடர்வதுதான். எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்கிற விஞ்ஞான உண்மையை மறுப்பதற்கில்லை. பெண்ணின்றி அமையாது ஆணின் உலகு என்பதுதானே உண்மை. ஆனால், முன்பைப் போல் இல்லாமல் இளம்பெண்களை அவதானிக்கும் போது மகிழ்ச்சியை விட வருத்தமே மேலெழுகிறது.
நேற்று மாலை கூட கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு மகளீர் கல்லூரியை கடந்த போது மாணவிகளை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன். முன்பாக இருந்தால் வெறும் மகிழ்ச்சி மட்டுமே மிகுந்திருக்கும். இப்போதோ அவர்களைக் கவனிக்கும் போது வருத்தமே மிஞ்சியது. ஆம்.. பெண்களின் முகத்தில் தெரியும் மாற்றம் என்னை அப்படி வருத்தமேற்படச் செய்கிறது.
அண்மை காலமாக நான் சந்திக்கும், சாலையில் கடக்கும் இளம் பெண்களில் பெரும்பான்மையினருக்கு முகத்தில் ஆண்களைப் போல் மீசை முளைத்திருப்பதை பார்க்க முடிகிறது. நெருங்கிப் பழகும் தோழிகளில் பலருக்கு முகத்தில், தாடைகளில், கழுத்தில் ரோமங்கள் வளர்ந்திருப்பதை பார்க்க பாவமாக இருக்கிறது. இப்படியே போனால் நம் இலக்கியங்களில், ஓவியங்களில், புராணங்களில் ரசித்த பெண்ணழகை இனி ரசிக்கவே முடியாதோ என்கிற ஆற்றாமை ஏற்படுகிறது.
ஏனிந்த மாற்றம்? இந்தப் பெண்களுக்கு என்ன ஆயிற்று? யோசித்துப் பார்த்தால் நெருங்கிய உறவுப் பெண்கள், ஏன் என் தங்கை கூட மெல்லிய மீசையோடு என்னைப் பார்த்து புன்னகைப்பது முகத்தில் அறைந்தாற் போல் ஞாபகத்துக்கு வந்து பயமுறுத்துகிறது. என்னுடைய பள்ளிப் பருவத்தில், பத்தாண்டுகளுக்கு முந்தைய என்னுடைய கல்லூரி பருவத்தில் இப்படியான சிக்கலோடு பெண்களை காண்பதே அரிதாக இருந்தது.
சிறு வயதில் பார்த்த ஒரு திரைப்படத்தில், “ஆண்களை விட பெண்களுக்கு வசீகரம் அதிகமாக இருக்க என்ன காரணம்” என்ற கேள்விக்கு படத்தின் நாயகன் எம்.ஜி.ஆர். “அதுதான் முள் முளைக்கும் முகத்துக்கும் பூப் போன்ற முகத்துக்கும் உள்ள வித்தியாசம்” என்று சொல்லுவார். அப்போது, திரையரங்கில் கரவோசை அடங்க வெகுநேரம் ஆகும். இன்றைக்கு நிலைமை தலைகீழ். காரணம் என்ன?
இணைய தளங்களில் பெண்களின் மீசை சிக்கல் குறித்து தேடினேன். எனக்குத் தெரிந்த சில மருத்துவர்களிடம் பேசினேன். இன்றைய நவீன உலகத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மீசை, தாடி வளரும் சிக்கல் இருப்பதை அவர்களும் ஒப்புக் கொண்டனர்.
கரு முட்டைப் பையில் மாற்றங்களோ அல்லது அட்ரினல் சுரப்பில் கோளாறுகளோ வந்தால் சுரப்பி நீரை அதிகளவில் சுரக்க வைத்துவிடும். கரு முட்டைப்பையில் தோன்றும் நீர்க்கட்டிகள்தான் பெரும்பாலான பெண்களுக்க முடி வளர்ச்சியைத் தோன்றுவிக்கின்றன. அதில் இளம்பெண்கள் அதிமாகப் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு மாதவிலக்கு சரியாக வராமல் போகும். உடல் பருமன் கூடும்.
கரு முட்டைப்பையில் ஏராளமாக இருக்கும் சினை முட்டைகள் நன்கு வளர்ச்சி பெற முடியாமல் நீர்க் கோர்த்துக் கொண்டு நீர்க்கட்டிகளை இரண்டு கரு முட்டைப் பைகளிலும் உருவாக்கி விடும். முட்டை வளர்ச்சி தடைபடுவதால் பெண்மைக்குத் தேவைப்படும் இயக்குநீரான ஈஸ்ட்ரோஜென் (Estrogen) அதிகமாகச் சுரக்க கரு முட்டைப் பையில் உள்ள இணைப்புத் திசுகளில் இருந்து ஆண்ட்ரோஜென் (androgen) ஹார்மோன் அதிகமாகிவிடும். எனவே மயிர்க்கால்கள் தூண்டப்பட்டு முடி வளர ஆரம்பித்து விடுகிறது.
இந்த ஈஸ்ட்ரோஜென் அதிகளவு சுரப்பதால் இவ்வளவு சிக்கல் உருவாகிறது என்பது புரிகிறதா.. ஆனால் இது புரியாமல்தான் ஈஸ்ட்ரோஜேன் எனும் ஹோர்மோன் ஊசி போடப்படும் கறிக்கோழிகளை அதிகளவில் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கும் போது 10 முதல் 12 வயதுக்குள்ளாக சிறுமிகள் பூப்பெய்து விடுவதும் அதிக உடல் பருமன் மற்றும் முகத்தில் முடி வளர்வது என பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாக நேரிடுகிறது.
இந்தக் கறிக்கோழிகளை சாப்பிடும் ஆண்களுக்கும் பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
மாறாக கிராமங்களிலும் ஏழ்மை நிலையிலும் வாழும் பெண்களிடம் இதுபோன்ற குறைபாடுகளை காண்பது அரிதாக இருப்பதையும் கவனிக்க வேண்டும். ஏனென்றால் நகர வாசிகள் நாட்டுக் கோழியை மறந்து கறிக் கோழிக்கு மாறிவிட்டனர். காலையில் நடைப்பயிற்சி செய்கிறோம் என்று கைவீசி நடப்பவர்கள் மளிகைக் கடைக்குக் கூட ஸ்கூட்டியில் செல்வதை என்னவென்று சொல்வது? நகரங்களில் வீட்டு வேலைகளுக்கு இயந்திரங்கள் குவிந்து விட்டன. அதனால்தான் அலமாரியில் மருந்துப் பெட்டிகளில் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டன.
இன்றைய நவீன வாழ்க்கையில் மாதவிடாய் சிக்கலும் மகப்பேறு சிக்கலும் இல்லாத மகளீரை பார்ப்பதே அரிது!! மருத்துவரைப் பார்க்காமல் மாத்திரைகளை விழுங்காமல் எத்தனை பேரால் இங்கே பிள்ளைப் பெற்றுக் கொள்ள முடிகிறது?
நொறுக்குத் தீனிகள், ஹோர்மோன் ஊசி போடப்பட்ட உணவுப் பண்டங்கள், தொலைக்காட்சி முன்பு செலவாகும் கணங்கள், வீட்டு உபயோக பொருட்கள் இவற்றால் நம் பெண்கள் சோம்பேறிகளாகவும், நோயாளிகளாகவும் மாறுவதுடன் பெண் தன்மையையே இழந்து வருகின்றனர்.
உலகமயமாதல் சூழலில் மாறிவரும் வாழ்க்கைமுறையால் பெண்கள் பெண்மையை இழந்து வருவது எவ்வளவு அபாயகரமானது! வேதனையாது!! இந்த உலகம் உருவானதே பெண்கள் கருவானதால் தானே!! பெண்கள் பெண்மையை இழந்து விட்டால் இந்த உலகம் என்ன ஆகும்?
(வே.வெற்றிவேல்சந்திரசேகர்)
No comments:
Post a Comment