சென்னை மயிலையில் ரயில்வே முன்புதிவு மையம் உள்ளது, சென்னையில் உள்ள பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். அந்த முன்பதிவு மையத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய கடந்த வாரத்தில் ஒரு நாள் சென்றிருக்கிறார். அப்போது முன்பதிவு விண்ணப்பத்தில் தமிழிலேயே விவரங்களைப் பூர்த்தி செய்து அங்குள்ள முன்பதிவு அலுவலகரிடம் கொடுத்திருக்கிறார். அப்போது ஆங்கிலத்திலோ இந்தியிலோ பூர்த்தி செய்து தந்தால்தான் முன்பதிவு செய்தி தருவேன் என்று கறாராக கூறியிருக்கிறார், அந்த அலுவலர்.
அந்த நபருக்கு அருகே அமர்ந்திருந்த அலுவலரும இதையே வழிமொழிந்திருக்கிறார். கடுப்பாகிப் போன அந்த அம்மா தனக்கு ஆங்கிலமோ இந்தியோ தெரியாது என்றும் விண்ணப்பத்தில் உள்ள பெயர்களை நான் கூறுகிறேன் நீங்கள் வேண்டுமானால் அதை கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து டிக்கெட் தாருங்கள் என்று கேட்டிருக்கிறார். உடனே அவரை அவமானப்படுத்தும் வகையில் (அரசு அலுவலகங்களில் என்ன நடக்கும் என்று நம் ஒவ்வொருவருக்கும் அனுபவம் உண்டுதானே) பேசியிருக்கிறார்கள்.
மனமுடைந்த அவர் தன் வீட்டிக்குச் சென்று தன் கணவரை அழைத்து வந்து
அந்த மையத்தில் உள்ள கண்காணிப்பாளரிடம் புகார் செய்திருக்கிறார். அதைப் பார்த்த அந்த அலுவலர்கள் மேலும் அந்தப் பெண்ணை திட்டித் தீர்த்திருக்கிறார்கள்.
பிரச்னைக்குக் காரணம், அந்த முன்பதிவு அலுவலகத்தில் உள்ள முன்பதிவாளர்கள் நான்கு பேர் பீகாரைச் சேர்ந்தவர்கள். லல்லு ரயில்வே அமைச்சராக இருந்தபோது பணியில் சேர்க்கப்பட்டவர்களாம். ஒரே ஒரு தமிழர் மட்டுமே அங்கு முன்பதிவு அலுவலராக உள்ளதாகத் தெரிகிறது. கண்காணிப்பாளரும் நடந்த விவரத்தை மேலதிகாரிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி விட்டார். ஆனால் வீணாய் போன தொழில் சங்கத்தினர் அந்த கடிதம் மீது நடவடிக்கை எடுக்காமல் செய்து விட்டார்கள்.
பிரச்னை என்னவென்றால் தமிழ்நாட்டில் ஒரு ரயில் டிக்கெட்டைக் கூட தமிழில் பூர்த்தி செய்து எடுக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டதா? இதே மகாராஷ்டிரத்தில், கேரளத்தில், ஏன் கர்நாடகாவில் இப்படி நடந்திருந்தால், ராஜ் தாக்கரேக்களும், வாட்டாள் நாகராஜன்களும் சும்மா விட்டிருப்பார்களா? தினகரன் நாளிதழில் (அங்கேயும் மொழி உணர்வாளர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்) மயிலாப்பூர் சம்பவம் பற்றிய செய்தி வெளியானது. அதையாரும் கண்டு கொள்ளவில்லை. பெண் சாமியார் சாராயம் குடித்துக் கொண்டு குறி சொல்கிறாள் என்றால் கவர் ஸ்டோரி வெளியிடும் குமுதம் ரிப்போர்ட்டர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.
இவர்தான் உங்கள் ஹீரோ என்று எந்த ஹீரோ யாருடன் படுத்தான் என்பதை எழுதி வரும் ஜூனியர் விகடன்களும் இப்பிரச்னையை கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இந்த லட்சணத்தில் ஹிந்தியை கட்டாய மொழிப்பாடமாக்க மைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கூடுதலாக ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் பாடத்திட்டத்தின் வாயிலாகப் புகுந்து ஒவ்வொரு இடத்திலும் இப்பட கட்டாயமாக ஹிந்தியில் எழுதுங்கள் என்று சொல்லி தமிழை புறந்தள்ள முயல்வார்கள். இதையும் கருணாநிதி வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருப்பார். எனவே, மைலாப்பூர் முன்பதிவு மையத்தில் நடந்தது நம் தாய் மொழி மீது திணிக்கப்படும் ஓர் அபாயத்தை நமக்கு சுட்டிக் காட்டியிருக்கிறது.
நண்பர்களே இனி நீங்கள் தமிழுக்கு ஏதாவது செய்ய நினைத்தால் எந்த அலுவலகத்துக்குச் சென்றாலும் தமிழிலேயே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுங்கள். அதிலும், ரயில்வே முன்பதிவு விண்ணப்பத்தில் தமிழில் மட்டும் பூர்த்தி செய்யுங்கள். அப்போது தான் தமிழன் எவ்வளவு நெஞ்சுரம் படைத்தவன் என்பது டெல்லிக்காரன்களுக்கும், அவனை நம்பிப் பிழைப்பை ஓட்டும் கருணாநிதி வகையறாக்களுக்கும் புரியும். இப்போதைக்கு
தமிழில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தது தவறில்லை என்று வாதிட்ட மயிலாப்பூர் லட்சுமிக்கு ஞானி பாணியில் பூச்செண்டு கொடுத்து வாழ்த்துவோம்.
இப்பிரச்னை பற்றி வெகுஜன பத்திரிகைகளில் எழுதும்படி உங்கள் பத்திரிகை நண்பர்களிடம் கோருங்கள் நன்றி.
‘‘அஞ்சலிலே இந்தி! அருகிருக்கும் நாணயத்தில் நஞ்சனைய இந்தி! நலிந்தேன் இடை மெலிந்தேன்’’ என்று
ReplyDeleteஇந்திக்கு எதிராக கனல் கக்கிய கவியரசு கண்ணதாசன், ஏனோ திடீரென, ‘‘இலகுமோர் காலையில் புது டெல்லி செல்லுவேன். இந்தியில் பேசி மகிழ்வேன்’’ என்று சாயம் வெளுத்துப் போனார். இந்தி எதிர்ப்பை எந்தக் காலத்திலும் தமிழர்கள் முனைப்பாக முன்னெடுக்காததுதான் இத்தனைப் பிரச்னைக்கும் காரணம் என்று நான் அடித்துச¢சொல்வேன்!