Thursday, October 28, 2010

கன்னடர்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம்...

கடந்த சனிக்கிழமை பெங்களூரு சென்றிருந்தேன். அதற்கு முன்பு 2000ம் ஆண்டில் கல்லூரியிலிருந்து internship க்காக (அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்?) பெங்களூருவில் 50 நாள்களுக்கு மேல் தங்கியிருந்தேன். அதன்பிறகு ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பின் அங்கே சென்றேன். ஒரே ஒரு நாள் தங்கியிருந்தேன். அந்த ஒரு நாள் முழுக்க பெங்களூரு நகரை சுற்றி வந்தேன்.

ஆட்டோ ஓட்டுநர் முதல் ஹோட்டல் ஊழியர்கள் வரை அந்த ஊர் அரசியல் சமூக நிலவரம் குறித்து என் ஐயப்பாடுகளை கேட்டுத்தெரிந்து கொண்டேன்.

எல்லோருமே எடியூரப்பா நன்றாகவே ஆட்சி செய்வதாக கூறினார்கள். சில குறைகளும் அவரிடம் உண்டு என்பதை அதில் பாதிப் பேர் ஒப்புக் கொண்டனர். ஆனால் இதற்கு முன்பு இருந்தவர்களை விட, எடியூரப்பா நல்லவராகவே இருக்கிறார் என்று நற்சான்றிதழ் வாசித்தனர்.

அப்புறம் ஏன் அவரை ஆட்சியிலிருந்து அகற்ற உள்கட்சியிலும், வெளியிலும் பலர் முனைகிறார்கள் என்று கேள்வி எழுவது இயல்பு. இந்தக் கேள்விக்கு பதிலை பின்னர் பார்க்கலாம்.

பெங்களூரு புறநகர்ப் பகுதிக்குப் போயிருந்த போது அங்கிருந்த தொழிற்பேட்டையில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லாத தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன. மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொழிற்சாலை மேம்பாட்டுப் பணிகள் நடக்கக் கூடாது என்று முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளதாகச் சொன்னார்கள். பெரிய பெரிய தொழிற்சாலைகள் இருக்கும் இடங்களுக்கு மிக அருகிலேயே விவசாயமும் செய்கிறார்கள். சுற்றுச்சூழலைப் பாதிக்காத அளவுக்கே அங்கே தொழில் வளர்ச்சியை எடியூரப்பா அனுமதிக்கிறார் என்றால் அவரை பதவியில் தொடர எப்படி அனுமதிப்பார்கள்? இங்கேதான் முன்னாள் பொருளாதார அடியாள் ஜார் பெர்கின்ஸை பொருத்திப் பார்க்க வேண்டும்.

பெரு முதலாளிகளை இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு அனுமதிக்கவில்லை என்றால், லத்தீன் அமெரிக்க நாடுகளில் அந்நாட்டு அதிபர்களை கொன்று விடுவார்கள். இங்கே ஆட்சியிலிருந்து மட்டும் அகற்ற முயல்கிறார்கள். எடியூரப்பாவை ஆட்சியிலிருந்து அகற்ற நினைக்கும் சக்திகளுக்குப் பின்னால் பெரு முதலாளிகளின் சதி இருக்கலாம் என்பதை சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆந்திராவில் சுரங்கத் தொழில் மூலம் இயற்கையை சுரண்டும் ரெட்டி சகோதரர்கள் எடியூரப்பாவுக்கு எதிராக உள்ளதையும் கவனிக்க.

அடுத்து பெங்களூரு நகர்ப் பகுதிகளில் வலம் வந்த போது, அங்குள்ள சுவர்களில் பெங்களூரு மாநகராட்சியினர் கன்னட மக்களின் கலாசாரத்தை விளக்கும் அழகான ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன. இவை சில ஆண்டுகளுக்கு முன்பே வரையப்பட்டதாம். இதையே சென்னையிலும் நம் மாநகராட்சி பின்பற்றுகிறது. (காப்பி அடித்தால் என்ன, நல்லது நடந்தால் சரி) அதுபோலவே பெங்களூரு நகரில் ஓடும் தாழ்தளப் பேருந்து, சொகுசுப் பேருந்து, குளுகுளு பேருந்து ஆகியவற்றையும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தினர் இங்கே பின்பற்றியிருக்கிறார்கள். அந்தப் பேருந்துகளைப் பார்த்தால் சென்னைக்கே வந்துவிட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது

அந்த ஊரின் மிகப்பெரிய பேருந்து நிலையமான மெஜஸ்டிக்கில் போக்குவரத்து அதிகாரிகள் (சீருடை அணிந்து) எந்நேரமும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை நேரில் தந்துகொண்டேயிருக்கிறார்கள். இதனால் தேவையற்ற குழப்பங்கள் நடப்பதில்லை. புதிதாக வரும் மொழி தெரியாத பயணிகளும் தயக்கமின்றி பயணம் செய்ய ஏதுவாக இருக்கிறது. பயணிகளும் நம்மூரைப் போல முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறுவது கிடையாது. ரெஸ்டாரன்ட் ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டோம். சொகுசான அந்த ஹோட்டலில் மீல்ஸ் வெறும் 30 ரூபாய். அந்தளவுக்கே அநத் ஊரில் விலைவாசி. இங்கே புரசைவாக்கத்தில் சாதாரண ஹோட்டலில் கூட சாப்பாடு 40 ரூபாய். விலைவாசியும் அங்கே பரவாயில்லை.

தமிழனுக்கு காவிரி நீரை தராத அந்த ஊரு மக்களுக்கு இவ்வளவு இந்தளவுக்கு வக்காலத்து வாங்குவது சரியா என்று நீங்கள் கேட்கலாம். காவிரி நீர் நம்முடைய உரிமைதான். அந்த உரிமையைப் போராடிப் பெற்றே ஆக வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் நம்முடைய சொந்த மண்ணில் நீராதாரத்தை அழிக்கும் மணல் கொள்ளையை தடுக்க நாம் என்ன செய்திருக்கிறோம். நம்முடைய அரசியல் வாதிகள் என்ன செய்திருக்கிறார்கள். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மணல் கொள்ளையை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்களே ஏன்? சொந்த மண்ணிலிருக்கும் நீராதாரத்தைப் பாதுகாக்க முடியாத நாம், நம்முடைய வறட்சிக்கு கன்னடர்களை மட்டும் காரணமாகச் சொல்வது சரியா?

நெஞ்சில் கையை வச்சு சொல்லுங்க, கன்னடர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள நெறைய விஷயங்கள் நமக்கிருகிறதா, இல்லையா?

1 comment:

  1. எல்லாம் சரி.தமிழகத்தில் இருந்து கொண்டு
    //எந்த ஆட்சிக்கு வந்தாலும் மணல் கொள்ளையை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்களே ஏன்?// என்று கேள்வி கேட்கிறீர்களே?அப்பாவி சார் நீங்க? ஆட்சி தான் மாறுது.கட்டிங் கரக்டா போய்விடுமில்ல?

    ReplyDelete