Tuesday, April 13, 2010

கடலோரக் காவல் வடை! -தாமரை



என்னருமை தோழர் கவிஞர் தாமரை எழுதிய
கவிதை இது....

வாரயிருமுறை வரும் இதழ் ஒன்றில் வெளியான
இவரது இந்தக் கவிதையை பலநாட்களாக வலைப்பதிவிட
நினைத்து முடியாமல் போனது...

இன்றைக்குத்தான் சாத்தியமானது...

இந்த நையாண்டிக் கவிதையில்
கவிஞரின் ஆவேசம் அடங்காமல் அதிர்கிறது...


இனி கவிதை வாசியுங்கள்...


‘தம் எல்லைகளையும், தம் மக்களையும்
காத்தலே முதல் கடமை‘ என்ற வரி
கடலோரக் காவல் படையின்
பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை
அல்லது
அது வகுப்பில் சொல்லப்பட்ட போது
க.கா.வீரர்கள் கேன்ட்டீனில்
வடை தின்று கொண்டிருந்திருக்க வேண்டும்...

மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து
வாங்கிய பிரமாண்டக் கப்பல்களில்
உல்லாசப் பயணம் போகிறார்கள்

தேன்நிலவு கொண்டாடுகிறார்கள்
ஒழிந்த நேரங்களில்
தரையோரக் காவல் படையினருக்கு
விருந்து கொடுக்கிறார்கள்...
வடையே முதன்மை பண்டம்!

சிங்களப் படை வந்து தமிழ் மீனவனை
கொத்தாக அள்ளித் தூக்கும்போது
க.கா.வீரர்கள் தங்கள் கப்பல் படையில்
வடைக்கு மாவுத் தட்டிக் கொண்டிருக்கும்படி
பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறார்கள்...

முகமெல்லாம் மாவு...
பாவம் தும்மலுக்கு நடுவே
நல்ல வடைக்கு சாத்தியம் நலிவு!

எண்ணெய் குடிக்காத வடையைத் தட்ட
அவர்கள் போராடும் போது
வகையாக வந்து சிக்குகிறான் தமிழ் மீனவன்!
படகு நிறைய அவன் மீன் அள்ளிப்போவதை
எப்படிப் பொறுப்பது?

வலைகளை அறுத்துத் தள்ளுகிறார்கள்
(ஒருவேளை அதில்தான் எண்ணெய் வடிக்கிறார்களே
என்னவோ...!)
மீனவர்களை நிர்வாணப்படுத்துகிறார்கள்
(ஒருவேளை அவர்கள் லுங்கிகள் மாவு
உலர்த்தத்தேவையோ...?)

கண்மூடித்தனமாகத் தாக்குகிறார்கள்
(வடையை சரியாகத்
தட்ட முடியாத வயிற்றெரிச்சல்?)

உச்சகட்டமும் ஒன்றிருக்கிறது...

பொறுக்கிகள் சுடும் வடையும்
பொறுப்பற்றதாகத்தான் இருக்கிறது...

அப்பாவிகள் மீது விழுந்து வெடிக்கிறது...
எண்ணெய் குடிக்காத வடை ரத்தம் குடிக்கிறது!

வகைவகையான வடைகளை கப்பலில்
பார்வைக்கு வைக்கின்றனர்...
அட்மிரல்களும் தளபதிகளும்
உளவுத்துறைகளும் பார்வையிடுகின்றன...

சிறந்த வடை சுட்டவனைத் தேர்ந்தெடுத்து
(கடாய்) பரிசளிக்கின்றனர்...
சிறந்த இந்திய வடை சுட்டவனை அதிசயித்து
சிங்கள மீனவர்கள் படையெடுத்து வந்து
பணயக் கைதியாகக் கொண்டு போகிறார்கள்..

வடை சுடுவதன் தொழில்நுட்ப ரகசியத்தை
அவன் சொல்லும் வரை
‘தட்டி‘ எடுக்கிறார்கள்...

என்னவோ போங்கள்...

வடை சுடவும் வக்கற்ற எனக்கு
வயிற்றெரிச்சலாக இருக்கிறது...

யாரப்பா அங்கே...
கடலோரக் காவல் கடை...?
எனக்கு ரெண்டு வடை .... பார்சல்...!

3 comments:

  1. கொளு பொம்மை என உறுதி செய்கிறார்கள்

    ReplyDelete
  2. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  3. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete