Thursday, October 28, 2010

கன்னடர்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம்...

கடந்த சனிக்கிழமை பெங்களூரு சென்றிருந்தேன். அதற்கு முன்பு 2000ம் ஆண்டில் கல்லூரியிலிருந்து internship க்காக (அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்?) பெங்களூருவில் 50 நாள்களுக்கு மேல் தங்கியிருந்தேன். அதன்பிறகு ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பின் அங்கே சென்றேன். ஒரே ஒரு நாள் தங்கியிருந்தேன். அந்த ஒரு நாள் முழுக்க பெங்களூரு நகரை சுற்றி வந்தேன்.

ஆட்டோ ஓட்டுநர் முதல் ஹோட்டல் ஊழியர்கள் வரை அந்த ஊர் அரசியல் சமூக நிலவரம் குறித்து என் ஐயப்பாடுகளை கேட்டுத்தெரிந்து கொண்டேன்.

எல்லோருமே எடியூரப்பா நன்றாகவே ஆட்சி செய்வதாக கூறினார்கள். சில குறைகளும் அவரிடம் உண்டு என்பதை அதில் பாதிப் பேர் ஒப்புக் கொண்டனர். ஆனால் இதற்கு முன்பு இருந்தவர்களை விட, எடியூரப்பா நல்லவராகவே இருக்கிறார் என்று நற்சான்றிதழ் வாசித்தனர்.

அப்புறம் ஏன் அவரை ஆட்சியிலிருந்து அகற்ற உள்கட்சியிலும், வெளியிலும் பலர் முனைகிறார்கள் என்று கேள்வி எழுவது இயல்பு. இந்தக் கேள்விக்கு பதிலை பின்னர் பார்க்கலாம்.

பெங்களூரு புறநகர்ப் பகுதிக்குப் போயிருந்த போது அங்கிருந்த தொழிற்பேட்டையில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லாத தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன. மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொழிற்சாலை மேம்பாட்டுப் பணிகள் நடக்கக் கூடாது என்று முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளதாகச் சொன்னார்கள். பெரிய பெரிய தொழிற்சாலைகள் இருக்கும் இடங்களுக்கு மிக அருகிலேயே விவசாயமும் செய்கிறார்கள். சுற்றுச்சூழலைப் பாதிக்காத அளவுக்கே அங்கே தொழில் வளர்ச்சியை எடியூரப்பா அனுமதிக்கிறார் என்றால் அவரை பதவியில் தொடர எப்படி அனுமதிப்பார்கள்? இங்கேதான் முன்னாள் பொருளாதார அடியாள் ஜார் பெர்கின்ஸை பொருத்திப் பார்க்க வேண்டும்.

பெரு முதலாளிகளை இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு அனுமதிக்கவில்லை என்றால், லத்தீன் அமெரிக்க நாடுகளில் அந்நாட்டு அதிபர்களை கொன்று விடுவார்கள். இங்கே ஆட்சியிலிருந்து மட்டும் அகற்ற முயல்கிறார்கள். எடியூரப்பாவை ஆட்சியிலிருந்து அகற்ற நினைக்கும் சக்திகளுக்குப் பின்னால் பெரு முதலாளிகளின் சதி இருக்கலாம் என்பதை சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆந்திராவில் சுரங்கத் தொழில் மூலம் இயற்கையை சுரண்டும் ரெட்டி சகோதரர்கள் எடியூரப்பாவுக்கு எதிராக உள்ளதையும் கவனிக்க.

அடுத்து பெங்களூரு நகர்ப் பகுதிகளில் வலம் வந்த போது, அங்குள்ள சுவர்களில் பெங்களூரு மாநகராட்சியினர் கன்னட மக்களின் கலாசாரத்தை விளக்கும் அழகான ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன. இவை சில ஆண்டுகளுக்கு முன்பே வரையப்பட்டதாம். இதையே சென்னையிலும் நம் மாநகராட்சி பின்பற்றுகிறது. (காப்பி அடித்தால் என்ன, நல்லது நடந்தால் சரி) அதுபோலவே பெங்களூரு நகரில் ஓடும் தாழ்தளப் பேருந்து, சொகுசுப் பேருந்து, குளுகுளு பேருந்து ஆகியவற்றையும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தினர் இங்கே பின்பற்றியிருக்கிறார்கள். அந்தப் பேருந்துகளைப் பார்த்தால் சென்னைக்கே வந்துவிட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது

அந்த ஊரின் மிகப்பெரிய பேருந்து நிலையமான மெஜஸ்டிக்கில் போக்குவரத்து அதிகாரிகள் (சீருடை அணிந்து) எந்நேரமும் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை நேரில் தந்துகொண்டேயிருக்கிறார்கள். இதனால் தேவையற்ற குழப்பங்கள் நடப்பதில்லை. புதிதாக வரும் மொழி தெரியாத பயணிகளும் தயக்கமின்றி பயணம் செய்ய ஏதுவாக இருக்கிறது. பயணிகளும் நம்மூரைப் போல முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறுவது கிடையாது. ரெஸ்டாரன்ட் ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டோம். சொகுசான அந்த ஹோட்டலில் மீல்ஸ் வெறும் 30 ரூபாய். அந்தளவுக்கே அநத் ஊரில் விலைவாசி. இங்கே புரசைவாக்கத்தில் சாதாரண ஹோட்டலில் கூட சாப்பாடு 40 ரூபாய். விலைவாசியும் அங்கே பரவாயில்லை.

தமிழனுக்கு காவிரி நீரை தராத அந்த ஊரு மக்களுக்கு இவ்வளவு இந்தளவுக்கு வக்காலத்து வாங்குவது சரியா என்று நீங்கள் கேட்கலாம். காவிரி நீர் நம்முடைய உரிமைதான். அந்த உரிமையைப் போராடிப் பெற்றே ஆக வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் நம்முடைய சொந்த மண்ணில் நீராதாரத்தை அழிக்கும் மணல் கொள்ளையை தடுக்க நாம் என்ன செய்திருக்கிறோம். நம்முடைய அரசியல் வாதிகள் என்ன செய்திருக்கிறார்கள். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மணல் கொள்ளையை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்களே ஏன்? சொந்த மண்ணிலிருக்கும் நீராதாரத்தைப் பாதுகாக்க முடியாத நாம், நம்முடைய வறட்சிக்கு கன்னடர்களை மட்டும் காரணமாகச் சொல்வது சரியா?

நெஞ்சில் கையை வச்சு சொல்லுங்க, கன்னடர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள நெறைய விஷயங்கள் நமக்கிருகிறதா, இல்லையா?

Friday, October 22, 2010

ஆச்சார கோவையும் எந்திரனும்!



அக்டோபர் முதல் வாரம். தேனீர் கடை, பேருந்து நிறுத்தம் என பொது இடங்களில் நண்பர்கள், உறவினர்கள் சந்தித்துக் கொண்டால் மறக்காமல் கேட்டுக் கொண்ட கேள்வி, “எந்திரன் பாத்தாச்சா?“ தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்களால் பார்க்கப்படும் சன் தொலைக்காட்சியிலும், அதிக வாசகர்களைக் கொண்டதாகச் சொல்லப்டும் தினகரன் நாளிதழும் சேர்ந்து எந்திரன் படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்கிற உளவியல் அழுத்தத்தை ஒவ்வொருவரின் மனதிலும் விதைத்துக் கொண்டிருந்தன/ கொண்டிருக்கின்றன. (கொஞ்சம் அசந்தால் நம்முடைய சட்டைப் பையில் கையைவிட்டு பணத்தை எடுத்து அவர்களே படத்தின் அனுமதிச் சீட்டையும் கொடுத்துவிடுவார்கள் போல!)

ஆசியாவிலேயே அதிக சம்பளம் பெரும் நடிகர்களில் சாக்கிசானுக்கு அடுத்த இடத்திலிருக்கும் ரஜினியும், பிரமாண்ட இயக்குநர் ஷங்கரும் இணைந்த இந்தப் படத்தைத் தயாரித்தது, கருணாநிதி பேரன் கலாநிதி மாறனின் சன் குழுமம். படத்தின் தயாரிப்புச் செலவு 150 கோடியாம்! உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் அக்.முதல் தேதியன்று திரையிடப்பட்டன. அரசு நிர்ணயித்த தொகைதான் வசூலிக்க வேண்டும் என்ற விதியை மீறி குறைந்தபட்சம் (!) 300 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை அனுமதிச் (டிக்கெட்கள்) சீட்டுகள் விற்கப்பட்டன.

சிறிய ஊரான புதுக்கோட்டையிலும் கூட ஆறு திரையுரங்குகளில் இந்தப் படம் திரையிடப்பட்டன. அங்கேயும் 200 ரூபாய் அனுமதிக் கட்டணம். இதெல்லாம் எப்படி சாத்தியம்? பணபலத்தாலும், அரசியல் செல்வாக்கினாலும் பெருவாரியான திரையரங்குகளில் எந்திரன் படத்தை திரையிட்டார்கள். திரையிட்ட எல்லா திரையுரங்குகளிலும் கூடுதல் விலை. இதனால் நியாயமான விலையில் அந்தப் படத்தை பார்க்கவே முடியாத நிலை! ஏகபோக மனோபாவத்தால் பாவம், தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்துவிட்டார்கள்.
நடைமுறையில் உள்ள நான்கு காட்சிகளுக்குக் கூடுதலான காட்சிகள் திரையிட தமிழக ஆளுநரே சிறப்பு அனுமதி அளித்தார். தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆளுநர் இப்படியொரு அனுமதியை அவசர அவசரமாக அளித்து, நம் மக்களின் மீதான அதீத அக்கறையைக் காட்டிவிட்டார்.

இந்தப் படத்தை வரவேற்கும் ரஜினி ரசிகர்கள் அவரது ஆளுயரப் படங்களுக்கு பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் செய்கிறார்கள். அந்தப் படம் வெற்றி அடைய வேண்டி கன்னியாகுமாரி முதல் சென்னை வரை பாத யாத்திரை நடத்துகிறார்கள். கோயில் படிக்கட்டுகளில் மண்டியிட்டு முழங்கால்களில் நடந்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள். மண்சோறு தின்கிறார்கள். சன் தொலைக்காட்சி ஒட்டுமொத்த தமிழக இளைஞர் கூட்டமே எந்திரனுக்காக ஏக்கித் தவிப்பதாக சித்தரித்தன. ரசிகர்கள் மனம் மற்றும் ஆர்வக் கோளாறில் செய்யும் இதுபோன்ற செய்கைகள் பாகவதர் காலத்திலிருந்து நடப்பதுதான். ரசிகர்களின் பொறுப்பற்ற இச்செய்கைகளை இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக திரும்பத் திரும்ப காட்டியதன் மூலம் அவர்களின் மனப் பிறழ்வுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்திருக்கிறது. சன் குழுமம்.

இந்தப் படத்திற்கான பாடல் வெளியீட்டு விழா சில கோடி ரூபாய் செலவில் கோலாலம்பூரில் கோலாகலமாக நடக்கிறது. தமிழில் பெயர் வைத்த்தற்காக கேளிக்கை வரி விதிப்பிலிருந்து (கிடைத்த வரைக்கும் லாபம்) வரிவிலக்கும் பெற்றிருக்கிறான், எந்திரன். திரையறங்குகளில் விநியோகிக்கப்பட்ட அனுமதிச் சீட்டில் கட்டணம் எதுவும் அச்சிடப்படவில்லை. அனுமதிச் சீட்டின் பின்புறம் இருக்க வேண்டிய மாவட்ட நிர்வாகத்தின் முத்திரையும் இல்லை. இதுக்குப் பேருதான் பகல் கொள்ளை!

ரஜினி, கமல், அஜித், சூர்யா, விஜய் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாள்களில்தான் திரையிடப்பட வேண்டும் என்ற திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் விதியை இந்தப் படத்தின் மூலம் காற்றில் பறக்கவிட்டிருக்கிறார்கள். பிற நாள்களில் குறைந்த செலவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, சில நாள்களாவது ஓடினால் குறைந்தபட்ச லாபமாவது கிடைக்கும். திரையில் ஊர் நியாயம், உலக நியாயம் பேசும் நடிகர்கள், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியோர் இந்த விதிமீறல் குறித்து வாய் திறக்கவே இல்லையே, ஏன்?

எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கோலாலம்பூருக்கு காணொளி மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பிய முதல்வர், காவல்துறை இப்போது எந்திரன் திருட்டு விசிடியை ஒழிக்க முடுக்கி விட்டுள்ளார். 150 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் மூலம் தமிழகத்துக்கு கிடைத்த வரி வருமானம், எவ்வளவு தெரியும்? 0-தான்!

ஒவ்வொரு தமிழனும் பார்த்தே ஆக வேண்டும் என்று சிந்தனையில் புகுந்து சித்திரவதை செய்த எந்திரன் படத்தில் அப்படி என்ன புரட்சி செய்து விட்டார்கள்?

1. படத்தில் கார்கில் போரில் கணவன், தந்தையை இழந்த பெண்கள் தங்கியிருக்கும் விடுதியைக் காண்பிக்கிறார்கள். அந்தப் பெண்கள் எல்லோரும் பார்ப்பனர்கள் என்பதை பல்வேறு காட்சிகளில் திரும்பத் திரும்ப காட்டப்படுகிறது. உண்மையில், கார்கில் போரில் உயிரிழந்த பார்ப்பனர்கள் எத்தனை பேர் என்று ஷங்கரால் சொல்ல முடியுமா? கார்கில் போரில் வேறு இனத்தவர்கள் யாரும் தங்கள் இன்னுயிரை இழக்கவில்லையா?

2. படத்தின் நாயகனான விஞ்ஞானி வசீகரன் (ரஜினி) பெற்றோரும் அவர்களின் வீடும் அவர்கள் பார்ப்பனர்கள் என்பதையே வலியுறுத்துகிறது. ராணுவத்துக்கு உதவும் வகையில் ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானியும் பார்ப்பனரே. வாழ்க ஷங்கரின் பார்ப்பன வெறி!

3. எந்திர மனிதனுக்கு மனித உணர்வுகளை கற்றுத் தருவதற்காக அதை சென்னையிலுள்ள பிரித்தானிய நூலகத்துக்கு அழைத்துச் செல்கிறார், வசீகரன். அங்கே எந்திர மனிதனுக்கு படிப்பதற்காக அவர் கொடுக்கும் புத்தகங்களில் இடம் பெறும் ஒரே ஒரு தமிழ்ப் புத்தகம், ஆச்சார கோவை! பார்ப்பனர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறைகளை (திண்டாமையை) வலியுறுத்தும் இந்த நூலைக் கொடுத்து எந்திர மனிதனையும் பார்ப்பனனாக்கப் பார்க்கும் இயக்குநரின் சாமர்த்தியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

4. படத்தில் ஒரு காட்சியில் மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் திருவிழா நடக்கிறது. திருவிழாவை நடத்தும் ரௌடிகள் படத்தின் கதாநாயகியை கிண்டல் செய்கிறார்கள். மாரியம்மன் கோயில் திருவிழா நடத்துவோர் எல்லாம் ரௌடிகள் என்றால், பார்ப்பனர்கள் மட்டும்தான் கோயில் திருவிழாக்களை நடத்த வேண்டும் என்கிறாரா ஷங்கர்? கருவறைக்குள் சல்லாபத்தில் ஈடுபட்ட காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் பற்றியெல்லாம் இவர் படம் எடுக்க மாட்டாரா?
மொத்தத்தில், பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு போன்ற ஏகபோக மனோபாவத்தில் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்ட எந்திரன் ஒரு பூணூல் அணியாத பார்ப்பனன்