Wednesday, March 21, 2012

பெயர்ச் சொல்...


ஆறாம் வகுப்பு என்று நினைக்கிறேன். துணைப்பாடப் புத்தகத்தில் ‘பெயரில் என்ன இருக்கிறது?’ என்ற கதை வந்திருந்தது. அமாவாசை என்கிற தனது பெயர் பிடிக்காமல் வருத்தப்படுகிறான் ஒரு சிறுவன். கண் பார்வை அற்ற கண்ணாயிரம், பிச்சை எடுக்கும் கோடீஸ்வரன், அல்ப ஆயுசில் இறந்த சிரஞ்சீவி ஆகியோரைப் பற்றி கேள்விப்பட்டு பெயரில் என்ன இருக்கிறது? என அந்தச் சிறுவன் தெளிவு பெறுகிறான்.

நானும் ‘பெயரில் என்ன இருக்கிறது’ என்று தீவிரமாக யோசித்தேன். அலைப்பேசியில் ஒருவர் வைத்திருக்கும் அலைப்பொலி (ரிங்டோன்) அவர் எப்படிப்பட்டவர்கள் என்பதை காட்டுவிடும் என்பார்கள். சாவு வீட்டில் கூட “ஓய் திஸ் கொலவெறி..” என யாராவது ஒருவருடைய செல்போன் அலறி மரண பயத்தை ஏற்படுத்துவண்டு. அதுபோல ஒருவருடைய பெயரைக் கேட்டதும், அந்தப் பெயரே அவரைப் பற்றி நமக்கு சொல்லிவிடுவதுண்டு. உடுமலைப் பேட்டையில் பிறந்த என் நண்பனின் பெயர் ஜெயபிரகாஷ் நாராயணன். அவசரநிலை பிரகடனத்தின் போது பிறந்ததால் இந்தப் பெயரை அவரது அப்பா வைத்திருக்கிறார்.

சிறுவயதில் கோயமுத்தூரில் உள்ள எங்கள் சொந்த ஊரான கள்ளிமடை கிராமத்துக்குச் செல்லும் போது, அங்குள்ளவர்களின் பெயர்கள் வியப்பை ஏற்படுத்தும். நாங்கள் வசித்து வந்த திருப்பூரில், பழனிச்சாமி, கோவிந்தசாமி, ராமசாமி என எல்லோரும் சாமிகளாகவே இருக்க கள்ளிமடை கிராமத்தில், கரிகாலன், அறிவழகன், கபிலன், மாதவி, பூங்கோதை, மணிமேகலை, அமுதா என்கிற பெயர்களை கேட்கும் போது ஆச்சரியமாகத்தானே இருக்கும்!
அதே ஊருக்கு 20 ஆண்டுகளுக்குப்பின் இப்போது போகும்போது கரிகாலனின் மகளுக்கு ஹரினி என்றும், கபிலனின் மகன் கமலேஷ் என்றும் பெயர் வைத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறேன். '


கபிலன் தன் மகனுக்கு பாரிவேந்தன் என்று பெயர் வைத்திருந்தால் ஞாயம். எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டே இருந்தேன். அந்த வேளையில் திருப்பூரில் பிரபல நாளிதழில் செய்தியாளராகப் பணியாற்றும் நண்பர் தமிழ்ச் செல்வனுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். தஷ் புஷ் என்று ஏதோ சொன்னார். (உண்மையில் அவர் சொன்ன பெயர் என்ன வென்று பலமுறை யோசித்தும் இதை எழுதும் இப்போது ஞாபகத்துக்கு வரவில்லை)
அந்தப் பெயரைக் கேட்டதும், ‘தமிழுக்கு’ப் பிறந்த குழந்தைக்கு இந்தக் கதியா? என்று என் புருவங்கள் நெளிந்ததை புரிந்துகொண்ட அவர், “தமிழ்ப் பெயர் வைத்தால் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அங்குள்ளவர்கள் இவள் பெயரை உச்சரிக்க சிரமப்படுவார்கள் என்று இப்படி பெயர் வைத்தேன்” என்று புதுவிதமான சாக்கை போக்குச் சொன்னார்.


“வெளிநாட்டுக்காரனுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்றால், டயானா, வெர்ஜினியா என ஆங்கிலப் பெயர்தானே வைத்திருக்க வேண்டும். நீங்கள் வைத்திருப்பது வடமொழிப் பெயர். வடமொழியும் வெளிநாட்டுக்கானுக்குத் தமிழைப் போல அயல்மொழிதான் என்றேன். பாவம், அவரால் பதில் சொல்ல முடியவில்லை. யோசிக்கத் தொடங்கிவிட்டார்.
இதுவரையில் ஈழத்திலிருந்து 17 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளுக்குப் போய் வாழ்ந்து வருகிறார்கள். அந்த நாடுகளில் பிறக்கும் தங்கள் வாரிசுகளுக்கு அவர்கள் வைக்கும் தமிழ்ப் பெயர்களை நம்மில் பலர் கேள்விப்பட்டும் இருக்க மாட்டோம்! தமிழ்ப் பெயர் வைத்ததால் அவர்களை யாரும் அங்கிருந்து துரத்திவிடவில்லை. தமிழ்நாட்டுக்கு வந்து தொழில் செய்து பிழைப்பு நடத்தும் மலையாளிகள், மார்வாடிகள், பீகாரிகள், மணிப்பூரிகள் தமிழனுக்கு உச்சரிக்க சிரமம் தரக்கூடாது என்று தங்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைக்கிறார்களா?


தமிழில் பெயர் வைப்பதே, பிற்போக்குத்தனமானது. குறுகிய மனப்பான்மையானது என பலரும் நினைக்கத் தொடங்கி விட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் கரிகாலனின் மகன் ஹரினி என்றானதும். தமிழ்ப் பத்திரிகையில் தமிழில் எழுதி சம்பாதித்து நல்லபடியாக வாழ்க்கை நடத்தும் ஒருவர், தன் மகளுக்குத் தமிழ்ப் பெயர் வைக்கத் தயங்குவதும்.
பெயர்கள் தமிழில் இல்லை என்றால், தமிழ் அழிந்து விடுமா என்று கேட்கலாம். பெயர்கள் வெறும் பெயர்கள் அல்ல. ஷோபா என்று தன் குழந்தைகள் பெயர் வைத்திருந்த என் நண்பரிடம் அந்தப் பெயருக்கான அர்த்தத்தைக் கேட்டேன். தெரியாமல் விழித்தார்.

அப்படித்தான், அர்த்தமே புரியாமல் ஏதோ பெயர் வைக்கிறார்கள். அர்த்தமே தெரியாமல் ஒரு பெயரை காலம் முழுவதும் அழைத்துக் கொண்டிருக்கச் சம்மதம். தாய் மொழியில் பெயர் வைக்க மட்டும் சங்கடம். இது ஞாயமா? தமிழ்ப் பெயர் கொண்ட ஒருவர் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அவருடன் தமிழ்மொழியும் போகிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
பெயரில் கூட தமிழைத் தவிர்ப்பது, எழுதுவதில் பேசுவதில் அயல்மொழி கலப்பை ஏற்பது என்று போனால் என்ன ஆகும்? தமிழ் அழியும். பிறமொழியில் பெயர் வைக்கும் தமிழர்கள், 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மொழியை அழிக்கும் வேலையில் பங்கெடுக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. இறந்து போன முன்னோர்களின் புகைப்படங்களை பாதுகாத்து வைக்கிறோம். அவற்றுக்கு மாலை மரியாதை செய்து வணங்குகிறோம். அதே உணர்வில் நம் மொழியை பாதுகாக்க வேண்டாமா?

திரைத்துறையினர் வணிகநோக்கத்திற்காக தமிழ்ப் படங்களுக்கும் ஆங்கிலப் பெயர் வைக்கிறார்கள். தமிழ்ப் பாடல்களில் பிறமொழிக் கலப்பில் பாட்டு எழுதுகிறார்கள். நம் வாரிசுகளை மலிந்த வியபாரப் பண்டமாக்க வேண்டாம். ஆங்கிலம் பேசுவோம், பிரெஞ்சு கற்றுக் கொள்வோம். இந்தி பேசுவோம். விரும்பிய பிற மொழிகளைக் கற்றுக் கொள்வோம் தாய்மொழியைப் புறக்கணிக்கத் தொடங்கினால், அந்த மொழி அழியும் மொழி அழிந்தால் அந்த தேசிய இனமே அழிந்து விடும். நம் வாரிசுகள் அடையாளம் இல்லாத அநாதைகளாக வளரும் சூழலை உருவாக்க வேண்டுமா?
“மொழி தொடர்பு கொள்ளும் கருவியாக மட்டும் கருதுவது, தாய் என்பவள் பிள்ளை பெற்றுத் தருகின்ற கருவி என்று சொல்வதைப் போல்.. அதுவல்ல தாய். அதையும் தாண்டி மேலானவள். அப்படித்தான் தாய்மொழியும்” என்ற கவிஞர் காசி ஆனந்தனின் வரிகளை மறந்துவிட வேண்டாம். தாயை மறப்பது மன்னிக்கவே முடியாத குற்றம் அல்லவா.. தாயில்லாமல் நாமில்லை. நம் பிள்ளைகளுக்க நம் தாயின் அருமையை சொல்லிக் கொடுப்போம்..

வே.வெற்றிவேல்சந்திரசேகர்…

Saturday, March 3, 2012

மோதலா? கொலையா?


மோதலா? கொலையா?

இன்னுமொரு மோதல் சாவு. இந்த முறை ஐந்து பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். வங்கியில் கொள்ளை அடித்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டு. ‘காவல்துறையினர் வெளியிட்ட சந்தேக நபரின் புகைப்படத்தைப் பார்த்து பொதுமக்களில் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் தங்கியிருந்த வீட்டை நள்ளிரவில் காவலர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அந்த வீட்டிற்குள் பதுங்கியிருந்தவர்கள் காவலர்களை நோக்கி சுட்டதில் இரு காவலர்களுக்கு காயம். உடனே காவலர்கள் திருப்பிச் சுட்டதில் ஐந்து பேரும் இறந்துள்ளனர்’ என்பது செய்தி.
சென்னை பெருங்குடி பேங்க் ஆப் பரோடா மற்றும் சென்னை கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் முறையே 18 மற்றும் 14 லட்சத்தைக் கொள்ளையடித்த ஐந்து பேரும் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் உடனடியாக அறிவித்தனர். இறந்தவர்களை அடையாளம் காட்டிய இரு வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் இதே ஐந்து பேர்தான் தங்களிடம் கொள்ளை அடித்ததாக தெரிவித்தார்களாம்.
ஐந்து பேரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் பெயர் மற்றும் முகவரியை காவல்துறையினர் வெளியிட்டனர். தங்களை தாக்க வருபவர்களிடம் இருந்து காவலர்கள் என்றில்லை சாதாரண பொதுமக்கள் கூட எதிர்த் தாக்குதல் நடத்தி தங்களை காத்துக் கொள்ள சட்டத்தில் இடமிருக்கிறது. அப்படி தாக்குதல் நடத்தும் போது உயிரிழப்புகள் நடத்தால் கூட தற்காப்புக்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்பது உறுதியானால் குற்றச் செயலாக அது கருதப்பட மாட்டாது. அதுவும் பணியில் இருக்கும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தும் போது உரிய தற்காப்பு நடவடிக்கையில் இறங்க அவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால் நடைமுறையில் மோதல் சாவுகள் நடைபெறும் போதெல்லாம் எழும் சர்ச்சை காவல்துறையினர் மீது ஐயத்தை ஏற்படுத்துகிறது.
காஷ்மீரிலும், மும்பையிலும் பதவி உயர்வுக்காக துணை ராணுவப்படையினரும் காவல்துறையினரும் என்கவுன்டர் என்ற பெயரில் நடத்திய திட்டமிட்ட படுகொலைகள் இதற்கு உதாரணம். தமிழ்நாட்டிலும் வீரப்பன் முதல் உள்ளூர் போக்கிலிகள் வரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுவிட்டு சொல்லும் மோதல்சாவு கதைகளில் உள்ள நாடகத்தை சாதாரண பொதுமக்கள் வரை அறிந்திருக்கின்றனர்.
வங்கிக் கொள்ளையர்களை சுட்டுக் கொன்றதில் எழும் பல்வேறு ஐயங்கள் இது ஏதேச்சையாக நடந்த மோதல் சாவு அல்ல என்பதை பறைசாற்றுகின்றன.
எழும் ஐயப்பாடுகள்:
1.கொள்ளையர்களின் தலைவன் என்று காவல்துறையினர் மோதல் சாவு நிகழ்வுக்கு முதல் நாள் வெளியிட்ட காணொளி காட்சிகளில் தொடங்குகிறது முதல் ஐயம். பல்வேறு வங்கிகளில் எடுத்ததாக கூறப்படும் அந்தக் காட்சி எங்க எப்போது பதிவானது என்ற தகவல்களை காவல்துறையினர் வெளியிடாதது அது சித்தரிக்கப்பட்டதோ என்கிற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
2.சந்தேக நபர்கள் தங்கியிருந்ததாக சொல்லப்படும் குடியிருப்புப் பகுதிக்கு காவல்துறையினர் இரவு 12.30 மணிக்குச் சென்றதாகவும், அந்த இடத்தைச் சுற்றி வளைத்ததும் கொள்ளையர்கள் காவல்துறையினரை நோக்கி சுட்டதாகவும் சொல்கிறார்கள். உண்மையில் அன்றைக்கு இரவு 10 மணிக்கெல்லாம் அந்தப் பகுதியை காவல்துறையினர் சுற்றி வளைத்து விட்டனர் என்று அந்தப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்.
3.நள்ளிரவு ஒருமணிக்கு மேல் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் அரைமணி நேரத்தில் கொள்ளையர்களை கொன்றுவிட்டதாகவும் காவல்துறையினர் சொல்கிறார்கள். ஆனால் தொடர்ச்சியாக துப்பாக்கிச் சுடும் சத்தம் எதுவும் எங்களுக்கு கேட்கவில்லை என்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.
4.அப்படியே காவல்துறையினர் கூறியபடி, நள்ளிரவே அந்தச் சம்பவம் நடந்து முடிந்திருந்தால் அதிகாலை 5.30 மணிவரை பத்திரிகையாளர்களை அந்தப் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்தது ஏன்?
5.இரு தரப்பிலும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக காவல்துறையினர் சொல்கிற நிலையில் கொல்லப்பட்ட நபர்கள் தங்கியிருந்த வீட்டுச் சுவரில் மருந்துக்குக்கூட துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்த சுவடுகள் இல்லையே ஏப்படி?
6.கொள்ளையர்களுக்கும், காவல்துறையினருக்கும் சன்னல் வழியாகவே துப்பாக்கிச் சண்டை தொடங்கியதாகவும், பின்னர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து கொள்ளையர்களை சுட்டதாகவும் காவல்துறையினர் சொல்கிறார்கள். அப்படியானால் கொல்லப்பட்ட ஐந்து பேரும் சரியாக தலையில் (அதுவும் நெற்றிப் பொட்டில்) குண்டடிப் பட்டு இறந்திருப்பது எப்படி?
7.கதவை உடைத்துச் சென்றதாக காவல்துறையினர் கூறுகின்ற நிலையில் துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டின் கதவு துளி சேதம் கூட இல்லாமல் இருப்பது எப்படி?
8.கொள்ளையர்கள் காவல்துறையினரை நோக்கி சுட்டிருக்கிறார்கள். அவர்கள் அறையில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் வங்கிக் கொள்ளையின் போது கொள்ளையர்கள் பொம்மைத் துப்பாக்கி வைத்திருந்ததாக காவல்துறையினர் சொன்னது பொய்யா? உண்மையான துப்பாக்கி வைத்திருந்தவர்கள் பொம்மைத் துப்பாக்கியை நம்பிக் கொண்டு கொள்ளையில் ஈடுபடுவார்களா?
9.இத்தனை களேபரங்களுக்குப் பின் கொல்லப்பட்டதாக இவர்கள் குறிப்பிடும் பீகார் வாரிசகளில் ஒருவர் சொந்த ஊரில் உயிருடன் தனியார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்திருப்பது எப்படி? கொள்ளையர்கள் போலி முகவரி வைத்திருந்திருக்கலாம் என்ற காவல்துறையினரின் வாதத்தை ஏற்றுக் கொண்டாலும், அதுபோலவே அந்த அறையில் கொள்ளை கும்பலுடன் தொடர்பில்லாத நபர்களும் இருக்க வாய்ப்பிருந்திருக்கலாம் அல்லவா?
10.எல்லா மோதல் சாவுகளைப் போல மயிரிழையில் உயிர் தப்பிய காவல்துறையினர் மருத்துவமனை படுக்கையில் தலையணையில் சாய்ந்து கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
11.சந்தேக நபர் என்று காவல்துறையினர் தொடக்கத்தில் வெளியிட்ட காணொளி காட்சியின் போது அவர் சென்னையில் எந்தக் கல்லூரியிலும் படித்த படிக்கும் மாணவர் இல்லை என்பதை வெளிமாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் இன்னாள் மாணவர்கள் ஒரு லட்சம் பேரின் புகைப்படங்களுடன் ஒப்பீடு செய்து உறுதி செய்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கொல்லப்பட்ட பின்பு அவர் சென்னை கல்லூரியில் படித்தாக சொல்கிறார்கள். எந்தக் கல்லூரி எப்போது படித்தார், என்ன படித்தார் என்பதை வெளியிடாதது ஏன்?
இப்படி நீ….ண்டு கொண்டே போகிற ஐயப்பாடுகள் ஒருபுறம்.
உண்மையில் குற்றவாளிகளை உயிருடன் பிடித்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்துவதுதான் காவல்துறையினரின் வேலை. எந்தவிதமான வலுவான ஆதாரங்களும் இன்றி ஐந்து பேரை சுட்டுக் கொன்றதை அங்கீகரிப்பது அபாயகரமானது. அந்த அறையில் தவறேதும் செய்யாத, குற்றவாளிகள் என்று தெரியாமல் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யாராவது இருந்து, அவர்களும் கொல்லப்பட்டடிருந்தால், அது நியாயமா?
சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், கொலை கொள்ளைகளைத் தடுக்கவும் குற்றவாளிகளுக்குப் பயத்தை ஏற்படுத்தவும் இப்படி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல் துறையினர் சப்பை கட்டுக் கட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த நிகழ்வுக்கு மறுநாளே சென்னை புறநகர்ப் பகுதியில் ஒரு வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து விட்டு அவரிடம் இருந்து 25 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றிருக்கின்றனர். திருட்டைத் தடுக்க துப்பாக்கிச்சூடு பயன்படாதது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா?
ராணுவத்தினரைப் போல் காவல் துறையினரும் ஆயுதத்தை தூக்கத் தொடங்கினால் சாதாரண திருடர்களும் துப்பாக்கியுடன் தான் அலைவார்கள். அது சமூகத்தில் எவ்வளவு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை சிந்திக்க வேண்டும்.
நீதிமன்றத்துக்குப் போனால், குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பித்து விடுவார்கள் என்கிற வாதமும் இங்கே முன்வைக்கப்படுகிறது. உண்மையில் குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவது மட்டும் காவல்துறையின் வேலை அல்ல. அவர்களின் குற்றத்தை நிரூபிக்க வேண்டிய கடமையும் அவர்களுக்கு உண்டு. அதை சரிவர நிறைவேற்ற தவறும் ‘கடமைக்காக’ கடமை ஆற்றுவதைத்தான் பல நேரங்களில் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தப்பிவிடுகின்றனர்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறையினருக்கு இதுபோன்ற உரிமையை வழங்குவோமேயானால், நாளைக்கே நமது வீட்டுக்குள்ளும் காவல்துறையினர் துப்பாக்கியுடன் நுழைவார்கள். அண்மையில் இருளர் இனப்பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரத்தில் தொடர்புடைய காவல்துறையினரை கைது செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அந்தப் பெண்களுக்கு இழப்பீடு மட்டும் வழங்கப்பட்டது. பலாத்காரம் நடந்ததற்கான ஆதாரம் கிடைத்ததும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று நீதிமன்றத்தில் அரசு வழக்காடி வருகிறது.
கொல்லப்பட்ட ஐவரும் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள்தான் என்பதை எந்த அடிப்படையில் உறுதி செய்த பின்பு அவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்?
கொலை கொள்ளைகளைத் தடுக்க துப்பாக்கிச்சூடு நிரந்தரத் தீர்வாகாது. சென்னையிலும், திருப்பூர் போன்ற வெளிமாநிலத் தொழிலாளர்கள் குவியும் இடங்களிலும் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. குறைந்த ஊதியம் வழங்கினால் போதும் என்பதற்காக இடைத்தரகர்கள் மூலம் நாள் தோறும் தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்கள் குவிக்கப்படுகின்றனர். இவர்களில் சமூக விரோதிகளும் சேர்ந்து விடும் அபாயம் சாதாரணமாகவே உள்ளது.
இதைப்பற்றி தற்போதைய அ.தி.மு.க. அரசும் சரி, இதற்கு முன்னாள் இருந்த தி.மு.க. அரசும் சரி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. (புதிய தலைமைச் செயலகக் கட்டடுமானப் பணிக்கே தி.மு.க. அரசு வெளிமாநிலத்தவர்களைத் தான் பயன்படுத்தியது) வெளிமாநிலத்தவர்களை முறைப்படுத்த இங்கே நமது அரசிடம் திட்டங்கள் எதுவும் இல்லை என்பதுதான் உண்மை.
வங்கிக் கொள்ளை சம்பவம் இதைத்தான் உணர்த்துகிறது.

(வே.வெற்றிவேல்சந்திரசேகர்)