சென்னை அருகே கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் தங்களுடன் பள்ளி இறுதி வகுப்புப் படித்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நிகழ்வு குறித்து அண்மையில் செய்தித்தாளில் படித்திருப்பீர்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பதினைந்து வயது சிறுமியை கற்பழித்த பதினேழு வயதான சென்னை இளைஞர்களுக்கு நீதிமன்றம் கடந்த வாரம் தண்டனை வழங்கியது. பெங்களூரூவில் கல்லூரி முதலாமாண்டு மாணவி ஒருத்தி, தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டிய முன்னாள் காதலை கொலை செய்ய ஐந்து லட்சம் (!) கொடுத்து கூலிப்படையை அமர்த்திய செய்தியை இன்று படித்தேன். அதிர்ந்தேன்.
பதின் வயதுகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, இதுபோன்ற குற்றச் செயல்களுக்குப் பின்னால் பாலியல் வக்கிரங்கள் ஒளிந்திருப்பதுதான் மிகவும் வேதனை அடையச் செய்கிறது. வர்க்க வேறுபாடுகள் இன்றி அனைத்துத் தர்ப்புகளிலும், பாலியல் வக்கிரங்கள் வியாபித்து வருகின்றன.
தன் வீட்டில் அடைக்கலம் தேடி வந்த காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியை கொலை செய்து புதைத்த தந்தையை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு காட்டிக் கொடுத்திருக்கிறாள், ஒரு மகள். இச்சம்பவம் நடந்தது ஒரு தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் உள்ள குக்கிராமத்தில் என்றால் நம்ப முடிகிறதா? இக் கொலைக்கும் பின்னணியிலும் காமவெறியே காரணமாக இருந்திருக்கிறது.
இதுபற்றி தீவிரமாக யோசித்தால் அண்மையில் ‘பாலை’ பட இயக்குநர் நண்பர் ம.செந்தமிழன் என்னிடம் சொன்ன ஒரு சொல்லாடல் மனதிற்குள் வந்து போனது. அது, ‘பாலியல் வறுமை’
(sexual poverty). ஆம். இந்தத் தலைமுறை இளைஞர்கள் பாலியல் வறுமையில் சிக்கித் தவிப்பதாகவே நினைக்கிறேன்; அச்சப்படுகிறேன்.
பல நாள் பசியில் வாடும் பரம ஏழையின் கண் எதிரே விருந்து சாப்பாடு பரிமாறப்பட்டால், அவன் பறித்து சாப்பிடத்தானே செய்வான். அது இயல்புதானே!
எங்கு திரும்பினாலும், நம்முடைய திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அலங்கார விளக்குகளில் ஜொலிக்கும் வணிக விளம்பரங்களில் ஆண்கள், பெண்கள் அரைகுறை ஆடைகளில் வந்து போகிறார்கள். இங்கெல்லாம், ஆண்களும், பெண்களும் பாலியல் இச்சையைத் தூண்டுகிற அசைவுகளை அநாயாசமாக வெளிப்படுத்துகிறார்கள்.
இச்சையைத் தூண்டிவிட்டுவிட்டு அதை அடுக்குவதற்கான வாய்ப்பை மட்டும் வழங்காமல் விட்டால், தட்டிப் பறித்து தின்னப்பதே நியாயமாகி விடுகிற அபாயம் இருக்கிறது!
மேற்கத்திய கலாசாரமும், நவநாகரீக வாழ்க்கை என்கிற பேரிலும் பரவிவரும் பாலியல் வக்கிரங்களுக்கு இடையே வாழ்ந்து வரும் நம் இளைய தலைமுறையினருக்கு நீங்கள் புலனடக்கத்தைப் பற்றி வகுப்பெடுக்க முடியாது.
ஒரு பக்கம் வாய்ப்பும், வசதியும் உள்ள ஆண்களும் பெண்களும் இருசக்கர வாகனங்களில் கட்டிப் பிடித்துக் கொண்டு பறக்கிறார்கள். ‘மால்’, ’சினிஃப்ளக்ஸ்’, ‘தீம் பார்க்’, ’ரிசார்ட்ஸ்’, ’பீச்ஹவுஸ்’, பார்ம்ஹவுஸ்’ போன்றவை பெருநகரங்களின் அடையாளங்களாக மாறி வருகின்றன. பணம் படைத்த பதின் பருவத்தினர் கூடிக் களிக்கும் இந்த இடங்கள் நள்ளிரவு தாண்டியும் போதை வஸ்துகளால் தள்ளாடுகின்றன.
ஆனால் இன்னொரு பக்கம், சாதாரண பின்னணியில் உள்ள ஓர் இளைஞன் தன் தோழியுடன் பூங்கா, கடற்கரைக்குப் போனால் கூட கலாசார காவலர்களான நம் காவல் துறையினரால் விரட்டி அடிக்கப்படுகின்றனர்.
மனித வக்கிரங்களை காசு பண்ணத் துடிக்கும் திரைப்படம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களால் இன்றைய மனிதர்களின் உளவியல் மாறி வருகிறது. கடைக்கண்ணால் பார்க்க வேண்டும் என்கிற திருப்தியடையாத ஆசைகளின் வெளிப்பாடாகவே இன்றைய நவநாகரீக உடைகள் மாறிவிட்டன. இன்றைக்கு ஆடைகள் கூட காமவெறியைத் தட்டி எழுப்புவதற்கென்றே திட்டமிட்டு தயாரிக்கப்படுகின்றன. ஆடைகள் வெறும் ஆடைகளாக இல்லாமல் காமவெறி தூண்டும் சாதனமாகி விட்டது. இந்த சூழ்நிலையில்தான், சட்டப் பேரவையில் அமர்ந்து கொண்டு, நம் மக்கள் பிரதிநிதிகள் ஆபாசப் படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வயிற்றுப் பசிக்கு சோறிடலாம்.. பாலியல் வறுமைக்கு போடும் தீனி.. யானைப் பசிக்கு சோளப் பொறிதான்!!
‘ஓய் திஸ் கொலவெறி’ பாடலை நம் குழந்தைகள் பாடிக்கேட்டு மகிழும் நாம், ஏழாம் வகுப்பு சிறுவன் தன் ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற கொலை வெறியை அறிந்து அதிர்ச்சி அடைவது மட்டும் எந்தவகையில் நியாயம்?!
குதிரையைப் போல கடிவாளம் கட்டிக் கொண்டு வாழ முடியாதுதான். ஆனால், காந்தியின் மூன்று குரங்குகளைப் போல, கெட்டதை கேட்காமல், கெட்டதைப் பார்க்காமல், கெட்டதை பேசாமல் நாமே இருந்து விட்டால், நம் குழந்தைகளும் புலனடக்கத்தோடு வளரும். அதற்கான முயற்சியை இன்றே தொடங்குவோம்..
(இன்னும் சொல்வேன்)